14-வது முறையாக பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார் நடால்…!!
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இப்போட்டியில், 13முறை பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள வீரருமான ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நார்வேவின் கேஸ்பர் ரூட்டும் மோதினர்.
ஆரம்பம் முதலே தனது அபார சர்வீஸ்கள் மூலம் கேஸ்பர் ரூட்டை திணறடித்த நடால், 6-3, 6-3, 6-0 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம், 14 முறையாக பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று நடால் சாதனைபடைத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக அவர் கைப்பற்றும் 22-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாக அமைந்தது.
தற்போதைய பிரெஞ்சு ஓபன் பட்டம் மூலம் அதிக வயதில் பிரெஞ்சு ஓபனை வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரபேல் நடால். அவருக்கு தற்போது 36 வயதாகிறது. இந்த வகையில் கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் ஸ்பெயினைச் சேர்ந்த ஆண்ட்ரெஸ் கிமெனோ தனது 34 வயதில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது.