’கவித்திருமகன்’ ரவீந்திரநாத் தாகூர் நினைவு நாளின்று

’கவித்திருமகன்’ ரவீந்திரநாத் தாகூர்  நினைவு நாளின்று

இந்தியா, வங்காளதேசம் என இரு நாடுகளின் தேசியகவியாக புகழப்படுபவர் ‘ரவீந்திரநாத் தாகூர்’. இவருடைய படைப்புகளான கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் உலகம் முழுவதும் புகழப்படுகின்றன. தாகூரின் சிறப்புகளைப் பற்றி பார்ப்போம்..!

tagore aug 7

கொல்கத்தாவில் 1861-ம் ஆண்டு பிறந்தவர் ரவீந்திரநாத் தாகூர். சிறுவயதிலேயே கவிதை எழுதுவதில் சிறந்து விளங்கிய இவர் உலகப் புகழ்பெற்ற பலரின் சுயசரிதைகள், வரலாறுகளை கற்றார். வானியல், அறிவியல், சமஸ்கிருதம், கணிதம், இசை, ஓவியம், வங்காளி, ஆங்கிலம் ஆகிய பாடங்களிலும் சிறந்து விளங்கினார்.

1874-1878-ம் ஆண்டில், இவரது ‘அபிலாஷ்’ (ஆசை), என்ற கவிதை வெளிவந்தது. இதைத்தொடர்ந்து ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதைப் புத்தகமான ‘கபி கஹினி’ (ஒரு கவிஞர் கதை) வெளியிடப்பட்டது. அதே ஆண்டில், தாகூர் சட்டம் பயில்வதற்காக இங்கிலாந்து சென்றார். ஆனால், ஷேக்ஸ்பியர் மற்றும் ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால், பட்டம் பெறாமலேயே நாடு திரும்பினார். அதனால் கவிஞராகவும், எழுத்தாளராகவுமே தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

இவர் ‘பானுசிங்கா’ என்ற புனைப்பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 2000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். 1883-ம் ஆண்டில் மிருனாளிதேவி ராய்செளத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தாகூர், தமது பயண அனுபவங்களை ‘யாத்ரி’ என்ற  பெயரில் நூலாக எழுதியுள்ளார். குறிப்பாக கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கை குறித்த பல கதைகளையும் எழுதி இருக்கிறார்.

1901-ம் ஆண்டு ‘பங்கதர்ஷன்’ என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும் வங்காள மொழியில் எழுதப்பட்டிருந்த பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புதினங்கள், கதைகள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றையும் படைத்துள்ளார்.

தாகூர் 1911-ல் எழுதிய ‘ஜன கண மன’ பாடல், இந்தியா சுதந்திரம் பெற்றபின் நாட்டின் தேசிய கீதமாக ஏற்கப்பட்டது. இவரது பெருமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

அதேபோல இந்தியாவிலிருந்து தனிநாடாக பிரிந்து சென்ற வங்காள தேசத்திற்கும், தாகூரின் ‘அமர் சோனார் பங்களா’ என்ற பாடல் தேசிய கீதமாக இருக்கிறது. உலகில் இருவேறு நாடுகளுக்கு தேசிய கீதம் இயற்றிய பெருமை ரவீந்திரநாத் தாகூரைத் தவிர வேறு யாரும் பெற்றதில்லை.

ரவீந்தரநாத் தாகூர், வங்காள மொழியில் எழுதிய ‘கீதாஞ்சலி’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். ஆசிய கண்டத்தில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் நபர் இவரே ஆவார்.

1915-ல் ஆங்கிலேய அரசு இவருக்கு ‘சர்’ என்ற பட்டம் வழங்கியது.

1921-ல் விஸ்வபாரதி என்னும் பல்கலைக்கழகத்தை நிறுவினார். இவர் கைதேர்ந்த வண்ண ஓவியரும்கூட. இவர் வரைந்த ஓவியங்களும், கோட்டுச் சித்திரங்களும் கொல்கத்தா  விஸ்வ பாரதி அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

காந்திஜியை ‘மகாத்மா’ என்ற பட்டத்துடன் முதன் முதலாக அழைத்து மக்களிடையே பிரபலப்படுத்தியவர் தாகூர்தான். காந்திஜியும், தாகூரும் ஒருவருக்கொருவர் பெருமதிப்புடன் கடைசிவரை நேசம் பாராட்டி வந்தனர். ‘மனிதாபிமானி காந்தி’ என்ற தலைப்பில் தாகூர் 1938-ல் எழுதிய கட்டுரையில் காந்திஜியைக் புகழ்ந்துள்ளார். ரவீந்திரநாத் தாகூரும், மகாத்மா காந்தியும் 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர் களாகக் கருதப்படுகின்றனர்.

1940-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூருக்கு ‘இலக்கிய முனைவர் பட்டம்’ வழங்கப்பட்டது.

‘சமூக சீர்திருத்தவாதி, இந்திய கலாசாரத்தின் அடையாளம், வங்கம் தந்த தவப்புதல்வர்’ என்றெல்லாம் போற்றப்படும் ரவீந்திரநாத் தாகூர் 1941-ம் ஆண்டு  இதே ஆகஸ்ட் 7ம் தேதி  80-வது வயதில் இறந்தார்.

error: Content is protected !!