போன எட்டு வருஷத்தில் எம்.பி. பி.எஸ். சீட் கிடைச்சவங்கள்ளே 1% தான் அரசு பள்ளியில் படிச்சவங்களாம்!

போன எட்டு வருஷத்தில் எம்.பி. பி.எஸ். சீட் கிடைச்சவங்கள்ளே 1% தான் அரசு பள்ளியில் படிச்சவங்களாம்!

நம் நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் செய்யப்படுகின்றன. இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு அளவில் அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி நிறுவனங்களுக்கும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை (நீட் தேர்வு) நடத்துவதற்கு மத்திய அரசு சட்ட திருத்தம் செய்துள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் இந்த தேர்வுக்காக தயார்படுத்திக் கொள்வதற்கு நீட் தேர்வு என்பது சிபிஎஸ்இ மேல்நிலை கல்வி படிப்பிற்காக வகுக்கப்பட்டுள்ள பாட திட்டத்தின் அடிப்படையில் இருக்கிறது. இது தமிழ்நாடு மேல் நிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் வேறுபட்டு இருக்கிறது. தமிழக மாணவர்களின் இந்த சிரமங்களை எதிர்கொள்ளும் வகையில் அரசு மேல்நிலை கல்வியில் பெறப்பட்ட (பிளஸ் 2) மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தற்போது உள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்ற கொள்கை முடிவை அரசு எடுத்து இந்த நோக்கத்துக்காக சட்டம் ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.

medi feb 27

இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கான 29,225 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளத்தை சார்ந்த சமூக ஆர்வலர் தே. ராஜு. இவர் கடந்த 2009-2010 கல்வியாண்டு முதல் 2016-2017 கல்வியாண்டு வரையிலான 8 ஆண்டுகளில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிர்யணிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மொத்த இடங்கள் எத்தனை? இதில் சேர்க்கை பயனுற்ற அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை? குறித்த தகவல்களை சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பொது தகவல் வழங்கும் அதிகாரியுடம் தகவல் அறியும் சட்டம் மூலம் கோரியிருந்தார்.

இதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன்படி எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் பொதுத் தகவல் அதிகாரி அளித்த தகவல் விவரம் வருமாறு, கடந்த 2009-2010 கல்வியாண்டு முதல் 2016-2017ம் கல்வியாண்டு வரையிலுமான 8 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் சேர்க்கை மொத்தம் 29,225 ஆகும். , இதில் அரசு மருத்துவக் கல்லூரியில் 213 மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 மாணவர்கள் என மொத்தம் 278 அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் எம்.பி.பி.எஸ் சேர்ந்துள்ளனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜு கூறும்போது, “தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் மாணவர்கள் 12ம் வகுப்பு பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர். இதில் 60 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவர்கள் ஆவர். மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண்ணில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நேரடியாக சேர்க்கை நடைபெறுகிறது. இதனடிப்படையில் கடந்த 9 ஆண்டுகளில் 29,225 சேர்க்கப்பட்ட எம்.பி.பி.எஸ் மாணவர்களில் வெறும் 278 மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களாக உள்ளனர். அதாவது வெறும் 1 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள். இதில் அரசு பள்ளியை காட்டிலும், தனியார் பள்ளிகளில் பயின்ற 99 சதவீதம் பேர் மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெறுகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் சுமார் ரூ.85000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் தொடர்ந்து அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து கொண்டே போகிறது. இதனால் அரசு பள்ளிகளில் பயிலும் பெருன்பான்மையான ஏழை மாணவர்களுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது வெறும் கனவாகவே உள்ளது.

இந்நிலையில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படை யிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களை மேலும் பாதிக்கும். எனவே அரசுப் பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்துவதுடன் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பில் சிறப்பு இடஒதுக்கீடும் வழங்க வேண்டும்” என்றார்.

Related Posts

error: Content is protected !!