ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்!

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் இன்று நடந்த இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகியோர் விளையாடினர். ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான சிந்து, முதல் செட்டில் தொடக்கத்தில் 5–-7 என்ற புள்ளி கணக்கில் சிந்து பின்தங்கி இருந்தபோதும், பின்பு அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து புள்ளிகளை வெற்றி கொண்டார். இறுதியில், முதல் செட்டை 21-–16 என்ற கணக்கில் சிந்து கைப்பற்றினார்.

இதன்பின் 2வது செட்டையும் அதிரடியாகவே சிந்து தொடங்கினார். ஒரு கட்டத்தில் 5-–0 மற்றும் 8-–1 என்ற கணக்கில் சிந்து முன்னிலை பெற்றார். பின்பு தொடர்ந்து புள்ளிகளை கைப்பற்றி இறுதியில் 21-–8 என்ற செட் கணக்கில் 2வது செட்டையும் தன் வசப்படுத்தினார். இதனால், 21-–16, 21-–8 என்ற நேர் செட் கணக்கில் பூசணனை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து, இதுவரை பூசனனுடன் 17 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதில் 16 முறை சிந்து வெற்றி பெற்றிருக்கிறார். முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் லக்னோவில் நடந்த சையது மோடி சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்து தற்போது இந்த சீசனில் இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.

பிரதமர் வாழ்த்து

பி.வி.சிந்து பெற்ற வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சுவிஸ் ஓபன் 2022ல் வெற்றி பெற்றமைக்காக சிந்துவுக்கு என்னுடைய வாழ்த்துகள். அவரது வெற்றிகள் இந்தியாவின் இளைய சமூகத்தினருக்கு ஊக்கம் ஏற்படுத்தும். வருங்காலத்திலும் அவரது முயற்சிகளுக்காக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

முதல்வர் வாழ்த்து

இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–

தனது ஆதிக்கமிகுந்த அபார ஆட்டத்தால் ஸ்விஸ் ஓபன்–300 இறகுப் பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி.சிந்து மீண்டும் ஒரு முறை பெருமை கொள்ளச் செய்துள்ளார். இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும்.

அவர் மென்மேலும் வெற்றிகளைக் குவித்து நமது இளைஞர்களுக்கு உந்துவிசையாக விளங்க எனது வாழ்த்துகள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.