உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பி. வி.சிந்து வெற்றி : வரலாறு சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றிப்பெற்று பி.வி.சிந்து சாதனைப் படைத்துள்ளார்.

உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் பி.வி.சிந்து, 2017 மற்றும் 2018-ம் ஆண்டு உலக பேட்மிண்டனில் இறுதி சுற்றில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். மேலும் இரண்டு வெண்கலப் பதக்கமும் வென்று இருக்கிறார். ஆனால் அவருக்கு தங்கப்பதக்கம் மட்டும் எட்டாக்கனியாக இருக்கிறது. அவருக்கு மட்டுமல்ல, 42 ஆண்டு கால உலக பேட்மிண்டன் வரலாற்றில் எந்த இந்தியரும் தங்கப்பதக்கத்தை தட்டி வந்ததில்லை. இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதி சுற்றில் சீன வீராங்கனையான சென் யூ பெய்யை வீழ்த்தி இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இறுதிச்சுற்றில் ஜப்பான் வீராங்கனையான நோசோமி ஓகுஹாராவை பி.வி.சிந்து எதிர்கொண்டார். 38 நிமிடங்களுக்கு பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 21க்கு 7, 21க்கு 7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சிந்து அசத்தினார்.

இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இந்த தொடரில் 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை சிந்து வென்றிருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு இந்த தொடரில் இறுதிச்சுற்றில் தங்க பதக்கத்தை நோசோமி ஓகுஹாராவிடம் சிந்து பறிக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகசாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்ற சிந்துவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. `பி.வி சிந்துவால் மீண்டும் இந்தியா பெருமையடைகிறது. பேட்மிண்டன் வெற்றிக்கு வாழ்த்துகள். இளம்தலைமுறையினருக்கு பி.வி சிந்துவின் வெற்றி முன்னுதராணமாக இருக்கும்” என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.