October 26, 2021

பஞ்சாப் + ஹரியானா வன்முறைகள் – செய்திக்குப் பின்னால்..!

நேற்று பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடந்த வன்முறைகள் திகைப்பளிக்கின்றன. ஒரு தனிமனிதனுக்கா -அதுவும் பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு ஆதரவாகவா இத்தனை அமளி என்று வியப்பும் திகைப்பும் மேலிடக் கேட்பவர்களுக்காக இந்தப் பதிவு. நேற்று தண்டிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹீம் சிங், தேரா சச்சா சௌதா என்ற ஆன்மீக (மத அமைப்பல்ல- அவர் உரை நிகழ்த்தும் மேடைகளில் எல்லா மதச் சின்னங்களும் இடம் பெற்றிருக்கும்) அமைப்பின் தலைவர். தேரா என்பது ஆசிரம போல. பஞ்சாபில் 9000 தேராக்கள் இருக்கின்றன. தேரா நிரங்க்காரி, தேரா நாம்தாரி, தேரா நூர்மகால், தேரா சச்காண்ட் பலான் போன்றவை செல்வாக்குப் பெற்றவற்றில் சில இவற்றின் ஆதரவுத் தளம் ஜாதி வாரியாக அமைந்தவை. சில பஞ்சாப் ஹரியான மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் செல்வாக்குக் கொண்டவை.

ஜாதி ஆதரவு, பிரதேச ஆதரவு ஆகியவற்றின் காரணமாக அரசியலிலும் செல்வாக்கு செலுத்துபவை. தேர்தல் நேரத்தில் கூட்டம் போட்டு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தங்களது உறுப்பினர்களுக்குச் சொல்வார்கள். தங்கள் உறுப்பினர்களுக்குப் பிரச்சினை வரும் போது தங்க்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் காப்பாற்றுவார்கள்தேராக்களில் பெரியதும் பழமையானது பியாஸ் நதிக்கரையில் அமைந்துள்ள Dera Radha Soami Satsang Beas. சுருக்கமாக RSSB. இது காங்கிரஸ் சார்பு கொண்டது .பஞ்ச்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும் போது ராகுல் காந்தி அம்ரீந்தர் சிங்க்குடன் இந்த ஆசிரமத்தில் ஓரிரவு தங்கியது உண்டு.

இங்கு பயிற்சி பெற்ற மஸ்தானா பலுச்சிஸ்தானி என்பவர் தொடஙகியதுதான் தேரா சச்சா செளதா (DSS) அவர் பாகிஸ்தானில் உள்ள பலுச்சிஸ்தானில் பிறந்தவர் ஆதலால் பலுச்சிஸ்தானி. அவர் 1948ல் இதைத் தொடங்கினார். பஞ்சாப், ராஜஸ்தான் ஹரிடானா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் அருகில் உள்ள சிர்சாவில் (ஒரு காலத்தில் சரஸ்வதி நதி பாய்ந்த பூமி) தொடங்கினார். தியானம், ஆன்மீகம், என்றுதான் அது போய்க் கொண்டிருந்தது. அவர் காலத்திற்குப் பின் 1990 களில் சத்னம் சிங் என்பவர் தலைமையேற்றார். ஆனால் ஒரு வருடத்தில் இறந்து போனார். அதன் பின் தலைமையேற்றவர்தான் ராம் ரஹீம்.

இவரது அணுகுமுறைகள் ஆன்மீகம், அரசியலைத் தாண்டி, பொருளியல் தளத்திலும் விரிந்தன. நனகொடைகள் பெறாமல் ஆசிரமத்தை நடத்த வேண்டும் என்பதற்காக, பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட், பிஸ்கட் பேக்டரி, உணவு விடுதி, ஆகியவற்றை தொடங்கினார். ஆசிரமத்தைச் சுற்றுலாத் தலமாக்கினார். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஆசிரமத்திற்குள் இருந்த ஏரியில் படகு விட்டார். famous religious & best spiritual tourist places for Spiritual Tourism in India என்றுதான் அந்த ஆசிரம வெப்சைட் சொல்கிறது.

இன்னொரு புறம் மருத்துவ மனை சமூக சலவைக் கூடம் (இலவசம்) கிரிக்கெட் ஸ்டேடியம் (!) என்று சமூக சேவைகளும் நடந்தன. இளைய தலைமுறையை இசை, சினிமா மூலம்தான் ஈர்க்க முடியும் என்றெண்ணி இசை வீடியோக்கள் சினிமா தயாரித்து அவற்றில் தானே நடித்தார். அரசியலிலும் தன் தளத்தை விரிவுபடுத்தினார். பஞ்சாப்பில் 32% தலித்கள். இவர் ஜாட் என்ற போதிலும், தலித்கள் ஆதர்வைப் பெறும் நோக்கில், ஜாட் சீக்கியரின் ஆதர்வைப் பெற்ற அகாலி தக்த் என்ற சீக்கிய தலைமைப் பீடத்துடன் மோதலைத் தொடங்கினார்.

2007 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார். காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது. 2012ல் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங், அவர் மனைவி மகன் ஆகியோர் நேரில் சென்று அவர் ஆதரவை வேண்டினர். இவர் அவர்களை ஆதரித்ததால் அம்ரீந்தருக்கு மற்ற சீக்கியர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. காங்க்கிரசால் கை விடப்பட்ட பின், 2014க்குப் பின் பாஜக வை ஆதரித்து வருகிறார். ஆன்மீகம் என்று ஆரம்பித்து அரசியல், வியாபரம் எனப் படரும் போக்கு எங்கு போய் முடியும் என்பதற்கு நம் கண்முன்னே காட்சிகள் தெரிகின்றன. ஆனால் விழித்துக் கொண்டிருப்பவர்களால்தான் காட்சிகளைக் காண இயலும். தூங்குகிறவர்களுக்கு கனவுகள் இலவசம்

மாலன் நாராயணன்