March 27, 2023

புல்வாமா தாக்குதல் :இந்தியாவின் பதிலடி எப்படி இருக்க முடியும்?!

புல்வாமா தாக்குதலுக்கு பழி தீர்க்க இந்திய ராணுவம் என்ன செய்ய இருக்கிறது என்பதே இன்று இந்தியர்களின் மனதில் உள்ள கேள்வி. இதற்கு விடை தேடி சென்றால் அதன் விடையாக வந்து நிற்பது மசூத் அசாரின் பிறப்பிடமான பகவல்பூரில் உள்ள ஜெய்ஸ் இ முகம்மது இயக்க த்தின் தலைமையிடத்தை அழித்து எப்படி அமெரிக்கா பாகிஸ்தானில் இருந்த பின்லேடனை வேட்டை யாடியதோ அதே மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை வேட்டையாட தயாராகி கொண்டு இருக்கிறது.அதாவது பின் லேடனை வேட்டையாட அமெரிக்கா இராணுவம் பயன் படுத்திய கோட் வேர்டான ஆப்பரேசன் நெப்ட்யூன் ஸ்பியர் மாதிரி ஒரு பெயரை வைத்துக் கொண்டு பாகிஸ்தானுக்குள் நுழைந்து மசூத் அசாரை வேட்டையாடுவதே புல்வாமா தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியாக இருக்க முடியும் .

மதத்தின் பெயரில் தீவிரவாதிகளாக மாறி பல உயிர்களை கொலை செய்யும் அரக்கன்கள் சொர்க் கத்திற்கு செல்வார்கள் என்று கூறுவது காமெடியானது .ஏனென்றால் உயிருடன் இருக்கும் பொழுதே அவர்கள் நரக வேதனையில் தான் வாழ்ந்து இருக்கிறார்கள்.

பின் லேடன் கிட்னி செயல் இழந்து நரக வேதனையில் டயாலசிஸ் கருவிகளுடன்தான் 1999 க்கு பிறகு நடமாடிவந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.அதே மாதிரி தான் ஜெய்ஸ் இ முகம்ம து தலைவரும் இந்தியாவில் நடைபெற்ற அனை த்து தீவிரவாத தாக்குதலுக்கும் காரணமான மசூத் அசார் பின் லேடன் மாதிரியே கிட்னி இழந்ததோடு முதுகு தண்டுவடமும் டேமேஜ் ஆகி நரக வேதனையில் தான் இருக்கிறார். புனித செயலுக்காக உயிருடன் இருக்கும் பொழுதே இவர்களுக்கு நரக வாழ்க்கையை அளித்த இறைவன் இறந்த பிறகு இவர்களை சொர்க்கத்து க்கு அழைத்து செல்வார் என்று எப்படி இவர்க ளால் நம்ப முடிகிறது?

இவர்களுக்கு சுவர்க்கம் நரகம் எதுவோ கிடைத்து விட்டு தொலையட்டும்.நமக்கு அது முக்கியம் அல்ல. நமக்குமுக்கிய ம் அசாத் மசூரின் மரணம் இயற்கை அவனை முடிப்பதற்கு முன் .இந்திய ராணுவம் அவனை முடிக்க வேண்டும். அப்பொழு து தான் இவனால் கொல்லப்பட்ட இந்தியர்களின்
ஆத்மா சாந்நியடையும்.

உண்மையை கூற வேண்டும் என்றால் மசூத் அசாரினால் இப்பொழுது புல்வாமா தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்டாக இருந்து இருக்க முடியாது காரணம் என்னவெனில் மசூத் அசார் இப்பொழுது மரணப் படுக்கையில் இருக்கிறார் அதனால் அவன் தம்பிகளான ரவுப் அஸ்கர் அல்லது அதார் இப்ராகிம் இதில் யாராவது ஒருவர் தான் புல்வாமா தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்டாக இருந்து இருக்க முடியும்.

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று நம் ஊரில் ஒரு பழமொழி கூறுவார்கள் அல்லவா. அது முற்றிலும் பொருந்த கூடியது மசூத் அசார்க்கு தான். அதார் இப்ராகிம் மற்றும் அப்துல்ரவுப் அஸ்கர் என்று இரண்டு தம்பிகளை துணைக் கு வைத்துக்கொண்டு மசூத் அசார் ஜெய்ஸ் இ முக ம்மது இயக்கத்தையே நடத்தி வந்தான்.

இதில் மசூத் அசாரின் அதார் இப்ராகிம் தான் படு டேஞ்சரானவன்.இவனைப் பற்றி இந்தியாவுக்கு ஏற்கனவே அறிமுகம் இருக்கிறது. மசூத் அசாருக்கு அவனுடைய தம்பிகளுக்கு உள்ளதை காட்டிலும் மூளை கொஞ்சம் கம்மி தான். அதனால்தான் இந்திய சிறையில் 5 வருசத்துக்கு கம்பி எண்ணி கொண்டு இருந்தான்.அவனை மீட்டது அவனுடைய தம்பியான அதார் இப்ராகிம் தான்

1999டிசம்பரில் நடைபெற்ற இந்தியன் ஏர்லை ன்ஸ் IC-814 விமானக்கடத்தல்நம் அனைவரு க்கும் நினைவு இருக்கும். நேபாளத்தில் இருந்து டெல்லிக்கு வந்த இந்த விமானத்தை 178 பயணிகளுடன் கடத்தி ஊர் ஊராக சுற்றி கடைசியில் ஆப்கானில் காந்தகார் விமான நிலையத்தில் நிறுத்தி மசூத் அசாரை ரிலீஸ் செய்கிறீர்களா? இல்லை பயணிகள் அனைவரையும் பரலோகம் அனுப்பட்டுமா? என்று மிரட்ட பயந்து போன அப்போதைய வாஜ்பாய் அரசு மசூத் அசாரை அவனுடைய தம்பியான அதார் இப்ராகிமுடன் ஒப்படைத்தது .

இப்படி அண்ணனையே மீட்ட அதார் இப்ராஹிம் தான் படு டேஞ்சரானவன் இவனுடைய ஏரியா ஆப்கானிஸ்தான் .இவனுடைய தம்பி தான் ரவுத் அஸ்கர் தான் ஜெய்ஸ் இ முகம்மது இயக்கத்தின் காஷ்மீருக்கான இன்சார்ஜ்.ரவுத் அஸ்கரும் காஷ்மீரில் பல தாக்குதல் நடத்தியுள்ள போதும் புல்வாமா தாக்குதல் முற்றிலும் வித்தியாசமானது.இதை நிகழ்த்தும் அளவிற்கு ரவுத் அஸ்கர்
ஒர்த்தில்லை.

அதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அதார் இப்ராகிம் தான் புல்வாமா தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்டாக இருந்து இருக்க முடியும்.ஆக ஆப்கானிஸ்தானில் இருந்து தான் புல்வாமா தாக்கு தலின் மையப்புள்ளி தொடங்கியுள்ளது. இன்னொரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால் ஆப்கானிஸ்தானில் இருந்து தான் காஷ்மீர் தீவிரவாதமே ஆரம்பமானது என்று நான் கூறினால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால் அதுதான் உண்மை.

காஷ்மீரில் தீவிரவாதம் இந்த அளவிற்கு வேரூன்ற யார் காரணம் என்ற கேள்விக்கு விடை தேடி சென்றால் அதற்கு விடையாக நிச்சயமாக பாகி ஸ்தான் இருக்காது. மாறாக சோவியத் யூனியனும் அமெரிக்காவும் தான் விடையாக இருக்க முடியும்.

1980 ல் ஆப்கானிஸ்தான் என்கிற கனிம வளம் மிகுந்த குட்டி நாட்டை சோவியத் யூனியன் கைப் பற்றாமல் இருந்து இருந்தால் இன்று காஷ்மீர் ப்யூட்டி புல் காஷ்மீர் …காஷ்மீர் ஒன்டர்புல் காஷ்மீர் என்று இதய வீணையில் வரும் எம்ஜியார் மாதிரி பாடிக்கொண்டு ம் திரிசூலம் படத்தில் சிவாஜி மாதிரி திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ  வாசனை என்று டால் ஏரியில் படகில் ஜாலியாக ஹனிமூன் கொண்டாடிக் கொண்டும் இருந்து இருப்போம்.

என்ன செய்ய விதி என்று ஒன்று இருக்கிறது அல்லவா? உலகில் பல நாடுகளில் நடைபெறும் இனம் மதம் சார்ந்த போராட்டங்களுக்கு பின்னால் இரண்டு நாடுகள் தான் இருந்தது. ஒன்று அமெரிக்கா இன்னொன்று சோவியத் யூனியன்.

அமெரிக்காவின் அரசியலை விட ஆபத்தானது கம்யூனிச அரசியல் என்பதற்கு உதாரணம் -ஆப்கா னிஸ்தான் தான்.மன்னராட்சி காலத்தில் எப்படி நேபாளம் அமைதியாக இருந்ததோ அதே மாதிரி மன்னர் ஷாகிர்ஷா காலத்தில் ஆப்கானும் 1933 ல்இருந்து 1973 வரை அமைதியாக அழகாக வளமாக இருந்தது.

இதை ஆட்டைய போட நினைத்த சோவியத் யூனி யன் ஷாகிர்ஷாவை காலி செய்து விட்டு முகம்மது தாவூத் கான் என்பவர் தலைமையில் ஒரு சோச லிச ஆட்சியை 1973 ல் உருவாக்க ஆப்கானி ஸ்தானும் சோவியத் யூனியன் வழியில் செல்ல ஆரம்பித்த து.இந்த காலத்தில் தான் சோவியத் யூனியன் ஆப்கானை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது சோவியத் பிடியில் இருந்து ஆப்கானை மீட்க தாவூத்கான் அமெரிக்காவை அழைக்க அதற்குள் அவரை கொன்றுவிட்டு சவுர் புரட்சி என்கிற பெயரில் முழு அளவிளான கம்யூனிச ஆட்சியை 1978 ல் கொண்டு வந்தது சோவியத் யூனியன்.

இப்பொழுது அதிபரானவர் யார் என்றால் அப்துல் காதர் என்கிற ஏர்மார்சல் .இவர் பிறந்த நாடு சோவியத் யூனியன். இவருடைய உதவியால் தான் தாவூத் கானை கொல்ல முடிந்த தால் அவ ரை மூன்று நாட்களுக்கு மட்டும் அதிபராக வைத்து விட்டு அதற்கு பிறகு ஆப்கானிஸ்தா னில் உள்ள பீப்பில் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் ஆப்கானிஸ்தான் என்கிற சோவியத் யூனியனால் ஆரம்பிக்க பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளரான நூர் முகம்மது தாரகியை அதிபராக கொண்டு வந்தது சோவியத் யூனியன்.

ஆப்கானிஸ்தான் என்கிற சன்னி முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் ஒரு நாட்டில் எப்படி ஒரு மத நம்பிக்கை அற்ற கம்யூனிச அரசு அமைய முடியும் என்றுஉங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் .ஆனால்ஷியா முஸ்லிம்கள் இருக்கிறார்கள் அல்லவா?இவர்கள் மத விசயத்தில் மென்மையான வர்கள்.மேற்கத்திய சிந்தனையில் வாழ்பவர்கள். இவர்கள் தான் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்ட ஆட்சியாளர்கள். இதனால் தான் ஆப்கானிஸ்தானில் பெருவாரியாக இருக்கும் சன்னி முஸ்லிம்கள் தங்களை ஷியா முஸ்லிம்கள் ஆள்வதா? என்று ஆயுதம் ஏந்த ஆரம்பித்தார்கள்.அமெரிக்கா பணம் மற்றும் ஆயுதம் அளிக்க பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ பயிற்சி அளிக்க சோவியத் யூனிய னுக்கு எதிராக புனிதப்போர் ஆரம்பம் என்று கூறி ஜிகாத் என்றார்கள்.

ஜிகாத் என்றால் இஸ்லாமிய எதிரிகளுக்கான போராட்டம் என்றே பொருள். இந்த போராட்டத்தை நடத்துபவர்கள் ஜிகாதிகள் அல்லது முஜாகி தீன்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.இவர்கள் அனை வருமே சன்னி முஸ்லிம்கள். பாகிஸ்தானில் உள்ள சன்னி முஸ்லிம்களுக்கு ஆயுதம் அளித்து அவர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ. ஐஎஸ்ஐ க்கு தீனி  போட்டது  அமெரிக்கா.இவர்களால் உருவான இயக்கம் தான்ஹர்கத் உல் ஜிகாத்அல் இஸ்லா மியும் அதில் இருந்து பிரிந்த ஒசாமா பின் லேடனின் ஹர்கத் உல் முஜாகிதீன் அமைப்பும்.
.
அதாவது இப்பொழுது சிரியாவில் என்ன நடை பெறுகிறதோ அதே அரசியல் தான் ஆப்கானில் 1979 முதல் 1989 வரை நடைபெற்றது.சிரியாவை ஆளும் மைனாரிட்டி ஷியா முஸ்லிம்களுக்கு சோவியத்யூனியனும் ஷியாக்களிடம் அதிகாரம் இழந்த மெஜாரிட்டி சன்னி முஸ்லிம்களுக்கு அமெரிக்காவும் துணை நிற்பது போல ஆப்கானி ல் மைனாரிட்டி ஷியாக்களுக்கு ஆதரவாக சோவி யத் யூனியனும் அவர்களை அடித்து விரட்டசன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவா க அமெரிக்கா வும் துணை நின்றது.

ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் யூனிய னை விரட்டி அடிக்க சன்னி முஸ்லிம்களை முன் வைத்து அமெரிக்கா உருவாக்கிய தீவிரவாதிகள் பலர் அவர்களில் ஒருவர் தான் மசூத் அசார் ஆப்கான் சோவியத் போரில் மசூத் அசார் படு காயம் அடைந்து பாகிஸ்தானில் ஓய்வில் இருந்த பொழுது கோர்பசேவ் புண்ணியத்தால் சோவியத் யூனியன் சிதறி அதில் இருந்து பல முஸ்லிம் தேசங்கள் உருவானதால் இனி கம்யூனிசம் கதைக்கு உதவாது என்று பயந்த சோவியத் யூனியன் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு 1989 ல் ஓட்டம் எடுத்தது.

சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை விட்டு ஓடியதும் ஆபகான் சன்னி முஸ்லிம் களின் பிடியில் வந்தது. இருந்தாலும் நாடு முழுவதும் தீவிரவாத கூட்டங்கள் பெருகி இருந்தது .ஆப்கானில் இருந்து சோவியத் யூனியனை விரட்ட அமெரி க்கா அளித்த பணத்தின் மதிப்பு ஆயிரம் பில்லியன் டாலர்களுக்கு மேலாக இருக்கும்.

இந்த பணத்தினால் முழு நேர தீவிரவாதிகளாக உருவாகி விட்ட ஆப்கான் மற்றும் பாகிஸ்தான்  சோவியத் யூனியன் ஆப்கானை விட்டு ஓடியதும் வேலை இல்லாமல் விட்டத்தை பார்த்து இருந் தார்கள். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாவா இருக்கும்? என்று ஒரு பழமொழி இருக்கிறது  அல்லவா?

அதே மாதிரி தீவிரவாதிகளாக மாறி விட்ட பலருக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று தலையை சொறிந்து கொண்டு நிற்க இந்த நேர த்தில் தான் பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் வருகிறது. பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோ வும் இந்தியாவில் விபிசிங்கும் ஆட்சிக்கு வருகிறார் கள். விபி சிங் ஆட்சி தான் இந்தியாவை ஆண்ட கோமாளிகளின் ஆட்சியின் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 1989 ல் நிலவிய குழப்பமான அரசியலினால் பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உங்களால் உருவாக்கப்பட்ட தீவிரவாதிகளை காஷ்மீரை நோக்கி அனுப்புங்கள் என்று உத்தரவிட காஷ்மீர் நோக்கி 1989 ல் இறுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழைய ஆரம்பித்தார்கள்.

இவற்றில் முக்கியமானது ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி மற்றும் ஹர்கத் உல் முஜாகிதீன் என்கிற அமைப்புகள். காலப் போக்கில் இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து ஹர்கத் உல் அன்சார் என்று 1994 ல் மாறியது .இதன் பொது செயலாளராக மசூத் அசார் வந்தவுடன் தான் காஷ்மீரில் தீவிரவாதம் படு பயங்கரமாக பரவ ஆரம்பித்தது . காஷ்மீர் விசயத்தில் மிக தாமதமாக விழித்துக் கொண்ட இந்தியாவின் ரா அமைப்பு ஹர்கத் உல் அன்சார் அமைப்பை பிளவு படுத்தும் வேலை யை அஜித் தோவலுக்கு அளிக்க அவரும் கச்சிதமாக ஹர்கத் உல் அன்சார் அமைப்பை உடைக்க இதை சரிசெய்ய பாகிஸ்தானில் இருந்து 1994 பிப்ரவரியில் மசூத் அசார் காஸ்மீருக்குள் வந்தான்

இவனுடைய வருகையை ஹர்கத் உல் அன்சார் அமைப்பின் ஒரு உளவாளி ரா வுக்கு போட்டு கொடுக்க அஜித் தோவல் மசூத் அசாரை கைது செய்து விசாரணை கோர்ட் தண்டனை என்று 5 வருடம் ஜெயிலில் வைக்க காரணமாக இருந்தார்.அந்த காலகட்டத்தில் மசூத் அசாரை மீட்க அவன் தம்பியான ரவுத் அஸ்கர் நடத்திய ஆபரேசன் கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

குறிப்பாக 1995 ல் காஷ்மீரில் இருந்த 6 அமெரி க்க இங்கிலாந்து டூரிஸ்டுகளை ரவுத் அஸ்கர் டீம் கடத்தி கொண்டு மசூத் அசாரை விடுதலை செய்யவில்லை என்றால் வரிசையாக அனைவ ரை யும் கொல்வோம் என்று மிரட்ட இதில் இருந்த பயணக்கைதி ஒருவர் தப்பித்து வர இந்திய அரசு மசூத் அசாரை விடுவிக்க முடியாது என்று கறாராக நிற்க ரவுத் அஸ்கர் தன்னுடைய தோ ல்வி யை ஒப்புக் கொண்டு பெரிய அண்ணனான மசூத் அசாரை விடுவிக்கும் ஆபரேசனை சின்ன அண்ணனான அதார் இப்ராகிம் கையில் அளித்ததான்.

இதற்கு பிறகு தான் அதார் இப்ராகிம் மாஸ்டர் பிளான் போட்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு அள்ளிக் கொண்டு போய் மசூத் அசாரை விடுதலை செய்கிறீர்களா?இல்லை 178 பயணிகளையும் வரிசையாக பரலோகம் அனுப்பட்டா? என்று மிரட்ட இந்திய அரசும் வேறு வழியின்றி மசூத் அசாரை 1999 விடுதலை செய்தது..

இதில் அதார் இப்ராகிம் இந்திய அரசுக்கு வைத்த ஒரு முக்கிய மான நிபந்தனை என்ன தெரியுமா? என் அண்ணனை யார் அரெஸ்ட் செய்மார்களோ அவர் தான் என்அண்ணனை அழைத்துக் கொண்டு காந்தஹார் வர வேண்டும் இல்லை என்றால் பயணிகள் நோ ரிலீஸ் என்று கெத்து காட்ட கடைசி யில் நம்ம அஜித் தோவல் தான் காஷ்மீர் தீவிரவாதத்தின் அடையாளமான  மசூத் அசார்  என்கிற அரக்கனை அவன் தம்பியின் கைகளில் ஒப்படைத்தார். இதற்கு பிறகு அதார் இப்ராகிம் இனி நமக்கு  ஹர்கத் உல் அன்சார் இயக்கம் சரிப்படாது அங்கு இருப்பவர்கள் மத விரோதிகள் எனவே ஒரு புதிய இயக்கத்தை உருவாக்குவோம் என்று அண்ணன் மசூத் அசாருக்கு பாடம் எடுக்க 2000 ம் ஆண்டின் துவக்கத்தில் ஜெய்ஸ் இ முகம்மது இயக்கம் உருவானது.உருவான இடம் பாகிஸ்தா னின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பகவல்பூர்.

இந்த படத்தில் இருப்பது தான் பகவல்பூரில் உள்ள மசூத் அசாரின் வீடு .இங்கு இருந்து தான் ஜெய்ஸ் இ முகம்மது இயக்கம் இப்பொழுது இயங்கி கொண்டு இருக்கிறது. அதனால் தான் புல்வாமா தாக்குதலுக்கு பழி தீர்க்க இந்திய ராணுவம் பகவல்பூரை நோக்கி பாயும் என்றே தெரிகிறது.

ஆக பாகிஸ்தானில் நுழைந்து பின்லேடனை பழி தீர்க்க அமெரிக்கா நடத்திய ஆப்பரேசன் நெப்ட்யூ ன் ஸ்பியரின் இரண்டாம் பாகத்தை இந்தியா கையில் எடுத்து பாகிஸ்தானில் நுழைந்து மசூத் அசார் மட்டுமல்ல அவனின் தம்பிகளான அதார் இப்ராகிம் அடுத்து ரவுத் அஸ்கர் என்று வரிசையாக இந்திய ராணுவம் வேட்டையாடும் என்று உறுதியாக நம்புவோம்.

விஜயகுமார் அருணகிரி