October 16, 2021

எம்எல்ஏக்களிடம் சொல்லாமல் ஆளுநர் தொகுதிக்கு வந்தால் மறியல் – புதுவை கலாட்டா!

புதுச்சேரியில் கவர்னர்ருக்கும் அரசுக்குமான மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் ஒரு பகுதியாக எந்த அதிகாரிகளும் அமைச்சர் உத்தரவு இல்லாமல் ஆளுநரை பார்க்கக்கூடாது. எம்எல்ஏக்களிடம் சொல்லாமல் ஆளுநர் தொகுதிக்கு வந்தால் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மறியல் செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று (திங்கள்கிழமை) சட்டப்பேரவையில் பேசியுள்ளார். அத்துடன்ஆளுநர் புதுச்சேரி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார். கோப்பு அனுப்பினால் ஒப்புதல் அனுப்பாதது நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்வதற்காகதான் என்றும் முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி பேசினார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று (திங்கள்கிழமை) ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் தெரிவித்த தகவல் தொடர்பாக கடும் விவாதம் நடந்தது. அப்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, “யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நிலம், நிதி, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் முடிவு எடுக்க மாநில அரசுக்கு அதிகாரமுள்ளது. இந்த உரிமை டெல்லிக்கே கிடையாது. இதை ஆளுநரிடம் சென்று விளக்கமாகத் தெரிவித்தேன்.

அமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும். துணைநிலை ஆளுநர் ஆலோசனை கேட்டுதான் முடிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக உள்துறைக்கு தெரிவித்துள்ளோம். தனிப்பட்ட அதிகாரம் ஆளுநருக்கு புதுச்சேரியில் இல்லை. அமைச்சரவை முடிவு செய்வதை ஒப்புதல் தரவேண்டும். சிக்கலான பிரச்சினையில் கருத்து வேறுபாடு இருந்தால் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் விளக்கினேன்.

ஆனால் துணைநிலை ஆளுநரோ நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார். அனைத்து கோப்புகளையும் டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார். ஆளுநர் ரகசிய காப்பை மீறி விட்டார். ஆளுநரை விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் அவர வரம்புமீறி செயல்படுவதால் பேசுகிறேன்.

கூட்டுறவுக்கடன் ரத்து செய்ய முடிவு எடுத்தோம். இதில், சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், கூட்டுறவு கடன் ரத்து செய்ய அதிகாரம் இல்லை என்றார்.மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றும் வேலையில் ஆளுநர் ஈடுபட்டுள்ளார். தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு தொடர்பாக அவர் முட்டுக்கட்டை போட்டதால் ஓய்வூதியத்தை பயனாளிகளுக்குத் தர முடியவில்லை.தலித் மக்களுக்கு இலவச கல்வி திட்டம் நிறைவேற்றினோம். ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார்.

சிறப்பு கூறு நிதியை உரிய மக்களுக்கு தர அதிகாரமுள்ளது. ஆனால் அதை ஏற்காமல் அதற்கான கோப்பை டெல்லிக்கு அனுப்பியுள்ளார். இது சேவையா? அவர் விளம்பரம் செய்யவே விரும்புகிறார்.ட்விட்டர், பேஸ்புக்கில் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதுதான் ஆளுநருக்கு வேலை.ஆளுநர் பொறுப்புடன் நடக்க வேண்டும். பணம் மரத்தில் காய்க்கிறதா என்று பேசுகிறார். அதிகாரிகளை அழைத்து மக்கள் மத்தியில் திட்டி அசிங்கப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார்.

வீட்டு வேலை செய்ய அழைப்பது போல் அமைச்சரை அழைக்கிறார். அமைச்சரை பேர் சொல்லி ஆளுநர் அழைக்கிறார். அவர் அவருடைய எல்லைக்குள் செயல்பட வேண்டும்.அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் வாங்குவதாக பேசுகிறார்.
மக்களால் தேர்வான அரசுக்குதான் அதிகாரம் உள்ளது. உங்களுக்கு என்ன அதிகாரமுள்ளது? நீங்கள் கோப்பைதான் நிறுத்துவீர்கள்.ஓராண்டாக வாய் திறக்காமல் இருந்தேன்.

எந்த அதிகாரிகளும் அமைச்சர் உத்தரவு இல்லாமல் ஆளுநரை பார்க்கக்கூடாது. எம்எல்ஏக்களிடம் சொல்லாமல் ஆளுநர் தொகுதிக்கு வந்தால் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மறியல் செய்ய வேண்டும். 24 மணிநேரமும் வேலை செய்வது எம்எல்ஏக்கள்தான்.அதேபோல் அதிகாரிகளும், அமைச்சர்களும் லஞ்சம் வாங்கியதாக ஆளுநர் கூறியதை அவரால் நிரூபிக்க முடியுமா?” என்று ஆளுநரை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.