ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை! .

ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை! .

நெல்லூர் மாவட்டம் கண்டுகூர் நகரில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வடிகால் கால்வாய் ஒன்றின் சிமெண்ட் தளம் உடைந்து பலர் அதனுள் விழுந்தனர். இதில் ஒரு பெண் உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். இந்த விபத்தை அடுத்து கூட்டத்தை உடனடியாக ரத்து செய்தார் சந்திரபாபு நாயுடு. மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியுடன் அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தரப்பிலும் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஆந்திரத்தில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தடை விதித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆந்திர மாநில முதன்மைச் செயலாளர் ஹரிஷ் குமார் குப்தா வெளியிட்டு அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளில் பேரணி மற்றும் சாலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் பேரணி நடத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

போக்குவரத்து இடையூறு, பொதுமக்கள் அவசர கால சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் இயக்கம் உள்ளிட்டவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் சாலை ஓரங்களில் கூட்டம் நடத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது எனவே அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!