இன்று முதல் பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை – மத்திய அரசு!

இந்தியாவில் இன்றுமுதல் பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த தடை உத்தரவால் பப்ஜி விளையாட்டை ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்களும் இனி பயன்படுத்த முடியாது.

அண்மை காலங்களில், டிக் டாக், PUBG போன்ற ஆன்லைன் செயலிகளுக்கு இளைஞர்கள் பெரிதும் அடிமைகளாகி விட்டனர். சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் என பெரும்பாலானோர் எப்போதும் PUBG விளையாடியவண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் விளையாட்டுக்களின் மீது அவர்களுக்கு இருக்கும் மோகம் அதிகரிப்பதை பார்த்து, PUBG themed உணவகங்கள், திருமண பத்திரிகைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து, தொழிலாளர்கள் தங்களது விற்பனையை அதிகரித்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்திய – சீன எல்லைப் பிரச்னை காரணமாக டிக்டாக் உள்ளிட்ட 58 செயலி களுக்குத் தடை விதித்து கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை அடுத்து, பப்ஜி விளையாட்டிற்கு முற்றிலுமாக நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பப்ஜி கேமிங் ஆப்பின் பயனாளர்கள் மட்டும் கிட்டத்தட்ட 3.3 கோடி பேர் இருப்பார்கள். பதின் வயதினர் முதல் இளைஞர்கள் வரை ஆண்கள் பெண்கள் பேதமற்று பலர் விளையாடிவரும் வேளையில் மத்திய அரசின் உத்தரவுப்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் பப்ஜிக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன்படி, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பப்ஜி கேம் நீக்கப்பட்டது.

மேலும் இன்று முதல் ஏற்கெனவே பப்ஜி விளையாட்டை பதிவிறக்கம் செய்தவர்களும் இனி மேல் பயன்படுத்த முடியாது என்றும் பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்தியாவில் உள்ள பயனாளிகளுக்கான அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என பப்ஜி மொபைல் அப் கேம் நிறுவனம் தெரிவித்துள்ளது.