September 25, 2021

தமிழ் திரையின் முதல் ‘நடிக மன்னன்’ பி.யு.சின்னப்பா-வின் கடைசி காலம்!

தமிழ் திரையுலகத்துக்கு 1940ம் வருட காலங்கள் பொன்னேட்டில் பொறிக்க வேண்டியது. எம்.கே.தியாகராஜ பாகவதரும், சின்னப்பாவும் கொடி கட்டி பறந்த காலம். பின்னாளில் சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜனி, கமல், அஜித், விஜய், சூரியா, தனுஷ் போல், இந்த இருவரும் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் மனதை கவர்ந்தார்கள்.

pu chinnappa sep 23

தமிழ் சினிமாவில், முதல் முதலாக மகாகவி பாரதியின் பாடலை பாடியவர் சின்னப்பா.‘‘செந்தமிழ் நாடெனும் போதினிலே,இன்ப தேன் வந்து பாயுது காதினிலே’’ என்ற பாடலை பாடலை உத்தமபுத்திரன் படத்தில் பாடினார். மதுரை ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனி என்ற நாடக மன்றம் தந்த கலைமாமணி சின்னப்பா. “பக்தி கொண்டாடுவோம்.என்ற பாடலை பாடியபடி தான் மேடை ஏறுவார். பாடுவதுடன் நடிப்பாற்றல், சிலம்பாம், மற்றும் சுரு:(அட்டா) போன்ற வீர விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்று, மற்ற நடிகர்கள் எட்ட முடியாத தூரத்தில் இருந்தவர் சின்னப்பா. முதல் படத்தில் வில்லனாக நடித்த சின்னப்பா, அடுத்தடுத்த படங்களில், சரியான வேடங்கள் கிடைக்காததால், விரக்தி அடைந்து, சாமியார் ஆகி, புதுக்கோட்டை சாமியார் மடத்தில் தஞ்சம் அடைந்தார்.அவர் சாமியாராக நீடித்து இருந்தால், தமிழக சினிமா ஒரு கலைஞனை இழந்திருக்கும்.

மேடையில் அவர் பாடிய தத்துவ பாடல்களும், ஏற்று நடித்த புராண கதாபாத்திரங்களும் அவருள் ஆன்மீக உணர்வுகளை தட்டி எழுப்பியதால், சினிமாவில் புகழ் அடைந்த பின்பும் கூட, ஆண்டுக்கு ஒருமுறை என, தொடர்ந்தாற் போல், நாற்பது நாட்கள் மவுன விரதம் இருப்பார் அப்பேர்ப்பட்ட “நடிக மன்னன்” என்று புகழ் பெற்றவரும், வீரதீரச் செயல்கள் செய்வதில் இணையற்ற வருமான பி.யு.சின்னப்பா, யாரும் எதிர்பாராத வகையில் ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்தார். அப்போது, அவருக்கு வயது 35. சின்னப்பா மிகவும் சிக்கனமானவர். பீடிதான் குடிப்பார்; சாராயம்தான் அருந்துவார். சினிமா மூலம் கிடைத்த வருமானத்தை வீணாக்காமல், புதுக்கோட்டையில் வீடுகள் வாங்கிக் குவித்தார். எங்கு பார்த்தாலும், சின்னப்பாவின் வீடுகள். இதுபற்றி புதுக்கோட்டை மன்னருக்கு தகவல் போயிற்று. “இனிமேல் சின்னப்பா வீடு வாங்கக்கூடாது” என்று தடை விதிக்கப்பட்டது. இதனால், சென்னையில் வீடுகள் வாங்கினார்.

1951ல் “வனசுந்தரி” என்ற படத்தில் சின்னப்பா நடித்தார். ஜோடி டி.ஆர்.ராஜகுமாரி. படம் சுமார் ரகம். இந்த சமயத்தில், தமிழ்ப்பட உலகில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், பின்னணி பாடும் முறை வந்துவிட்டது. எனவே, கதாநாயகனாக நடிப்பவர்கள் சொந்தமாகப் பாடும் திறமை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

1946ல் வெளிவந்த “ஸ்ரீவள்ளி” மூலம், டி.ஆர்.மகாலிங்கம் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவானார். “நாம் இருவர்” படம், அவர் புகழை மேலும் உயர்த்தியது. ஜ×பிடர் தயாரிப்பான “ராஜகுமாரி” மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக அறிமுகமாகி முன்னேறிக்கொண்டிருந்தார். கே.ஆர்.ராமசாமியும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார். “சந்திரலேகா”, “ஞானசவுந்தரி”, “ஏழைபடும்பாடு”, “வேலைக்காரி” முதலிய தரமான படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று, ரசிகர்களின் ரசனையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இதனால், சின்னப்பாவின் முன்னேற்றத்தில் தேக்க நிலை ஏற்பட்டது. படம் குறைந்து போனதால், சின்னப்பா ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார்.

“வானவிளக்கு” என்ற பெயரில் நடத்தி வந்த நாடகத்தை சொந்தத்தில் படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டார். கத்திச்சண்டையில் “சுருள் பட்டா” என்பது புதுமையானது; ஆபத்தானது. சுருளின் முனையில் கூரிய கத்தி பொருத்தப்பட்டு இருக்கும். கைப்பிடியை பிடித்தபடி “சுருள் பட்டா”வை வீசினால், கத்தி சுழன்றபடியே சென்று, எதிரியின் தலையை கொய்து கொண்டு வரும்! குறி தவறினால், வீசியவனின் தலைக்கு ஆபத்து! இந்த “சுருள் பட்டா” சாகசச் செயலை “வான விளக்கு” படத்தில் புகுத்த சின்னப்பா திட்டமிட்டிருந்தார். புதுக்கோட்டையில் தன் வீட்டில் தங்கியிருந்த சின்னப்பா, அன்றைய தினம் “மணமகள்” சினிமா படம் பார்க்க நண்பர்களுடன் சென்றார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சொந்தமாகத் தயாரித்து, டைரக்ட் செய்திருந்த படம் இது. லலிதா, பத்மினி, டி.எஸ்.பாலையா நடித்திருந்தனர். படம் பார்த்துவிட்டு இரவு சுமார் 10 மணிக்கு வீடு திரும்பிய சின்னப்பா, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று, “மயக்கம் வருகிறதே” என்றார். உடனே ரத்த வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தார். ஒரு சில நிமிடங்களில் மரணம் அடைந்தார். உடன் இருந்த நண்பர்கள் கதறி அழுதனர். சின்னப்பா இறந்தபோது, அவருடைய தந்தை உலகநாதப் பிள்ளை உயிருடன் இருந்தார். மகன் புகழின் சிகரத்தை அடைந்ததைக் கண்டு மனம் மகிழ்ந்திருந்த அவர், மகனின் எதிர்பாராத மரணத்தால் கதறித் துடித்தார். மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சின்னப்பாவின் சொந்த தோட்டத்தில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறக்கும்போது சின்னப்பாவுக்கு வயது 35தான். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருந்த அவர் திடீரென்று மரணம் அடைந்தது, திரை உலகை அதிர்ச்சி அடையச் செய்தது.

இறக்கும்போது, “சுதர்சன்” என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே சின்னப்பா நடித்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாகி முடிந்துவிட்டன. “கோராகும்பர்” என்ற பெயரில் ஏற்கனவே படமாக வெளிவந்த புராணக் கதைதான் இது. சின்னப்பாவுடன் ஜோடியாக கண்ணாம்பாவும் (யோக) மங்களமும் நடித்தனர். பாகவதர் நடித்த “ஹரிதாஸ்” படத்தை எடுத்த ராயல் டாக்கீசார்தான் இப்படத்தைத் தயாரித்தனர். கதை வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமியும், இளங்கோவனும் இணைந்து எழுதினர். “ஹரிதாஸ்” படத்தை இயக்கிய கந்தர்ராவ் நட்கர்னியும், ஏ.எஸ்.ஏ.சாமியும் டைரக்ட் செய்தனர். சின்னப்பாவின் மரணத்துக்குப் பின்னர் இந்தப்படம் வெளிவந்தது. சரியாக ஓடவில்லை

டெயில் பீஸ்:

தமிழ் திரையுலகின் முதல் ஆக்‌ஷன் ஹிரோவாகவும்,தமிழ் திரையுலகில் முதன் முதலில் ஒரே காட்சியில் 10 வேடங்களில் தோன்றி நடித்த பெருமைக்குரிய .பி.யூ.சின்னப்பா பிறந்த புதுக்கோட்டையில் அவரது நினைவைத் தாங்கி எச்சமாக இருக்கும் ஒரே கட்டிடம் அவரது நினைவிடமாகும்.அத்தகைய நினைவிடமும் பராமரிப்பு இன்றி,செடி கொடிகள் சூழ்ந்து,சாக்கடை மற்றும் பல்வேறு கழிவுகள் சூழ்ந்து பக்கத்தில் உள்ள வீடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.