டிஜிட்டல் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு? களமிறங்கும் தூண்கள்… -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

டிஜிட்டல் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு? களமிறங்கும் தூண்கள்… -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

நாட்டின் முன்னணி செய்தி நிறுவனமான பி டி ஐ மத்திய அரசின் மீது வழக்கு தொடுத்துள்ளது. அரசின் சமீபத்திய டிஜிட்டல் ஊடகக் கட்டுப்பாட்டு விதிகள் இதுநாள் வரையில் கொடுக்கப்பட்டிருந்த சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி ஏற்கனவே பல நிறுவனங்கள் நீதிமன்றம் சென்றிருக்கும் நிலையில் பி டி ஐ யும் இதில் இறங்கியிருப்பது பரபரப்பைக் கொடுத்துள்ளது. டிஜிட்டல் ஊடகம் என்பது இந்தியாவில் மக்கள் அனைவரையும் முழுமையாக ஆக்கிரமிக்கவில்லை என்றாலும் இன்று ஸ்மார்ட்ஃபோனும், இணையத் தொடர்பும் அனைவரையும் டிஜிட்டல் குடிமக்களாக மாற்றும் பணியை செய்து வருகிறது. இந்த நிலையில் டிஜிட்டல் ஊடகங்களான ஆனால் சமூக ஊடகங்கள் எனத் தனியாக பெயர் வாங்கியிருக்கும் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவை அரசிற்கு எதிராகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் பயன்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக அரசு நடவடிக்கை எடுக்கத் துவங்கியது. இந்த சமூக ஊடகங்களை நீங்கள் இணையத் தொடர்பு வழியாகக் காண முடியும் என்றாலும் தேடு பொறிகள் எனப்படும் கூகுள், பிங், யாஹூ போன்றவற்றின் உதவியும் தேவை. இத்தோடு யூ டியூப் போன்ற டிஜிட்டல் ஊடகங்களும் தனியாக இருக்கின்றன. இவை மூலம் பரவும் செய்திகளின் வேகம் அதிகம். சமூக ஊடகங்களில் சற்று வேறுபட்டவை வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவை. இவை செய்திகளையும், காணொலிகளையும் மிக வேகமாக பரப்பும் வசதிகளைக் கொண்டுள்ளன. இப்படி வளர்ந்திருக்கிற ஊடகத்திற்கு என்று தனியே விளக்கம் ஏதுமில்லை என்றும் எனவே இதைக் கட்டுப்படுத்தும் விதிகள் பொருத்தமற்றவை என்றும் பி டி ஐ வழக்கு தொடுத்துள்ளது.

மத்திய அரசு பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளைத் திரட்டி ஒரே வழக்காக உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றிக் கொண்டு வரத் தனியாக ஒரு மனுவை சமர்ப்பித்துள்ளது. பி டி ஐ தனது மனுவில் இந்த விதிகள் புதிதாக வரும் டிஜிட்டல் ஊடகங்களுக்கே பொருந்தும் என்றும் அவை கூகுள் போன்ற இடைநிலை இணைய தொழில்நுட்பங்களுக்கும், ஓடிடி ஒளிபரப்புத் தளங்களுக்கும் பொருந்தாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. தொழில் நுட்பம் பல சாத்தியங்களைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் எவ்வாறெல்லாம் பரிணாமம் எடுக்கும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்னால் தெரியாது. கொரோனா காலத்தில் ஓ டி டி தளங்கள் பிரபலமடைந்தன. இல்லையென்றால் அவை எப்போது பெரியதொரு வளர்ச்சியைப் பெற்றிருக்கும் என்பதை யாரும் கணித்திருக்கும் வாய்ப்பில்லை.

பொருளாதார நெருக்கடியினால் திரையரங்கம் சென்று படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறையும் என்ற நிலையில் திரைப்படங்களை ஓடிடி யில் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் தயாரிப்பாளர்கள் உள்ளனர். எனவே ஓடிடி தளங்கள் முன்னுரிமைப் பெறுகின்றன. சுமார் ஐம்பது தளங்கள் இருக்கும் நிலையில் வெளிநாட்டு தளங்களான அமேசான், நெட்பிளிக்ஸ் போன்றவை முன்னணியில் உள்ளன. இந்தியாவில் ஸீ, ஆல்ட் பாலாஜி ஆகியவற்றுடன் பிராந்திய மொழிகளின் தளங்களும் சந்தையில் போட்டியிடுகின்றன. இவை இந்திய தணிக்கைச் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களையே காண்பிக்கின்றன. அதே போல தொலைத்தொடர்களுக்கு உரிய கட்டுப்பாடுகளை பின்பற்றியே தொடர்களையும் ஒளிபரப்புகின்றன.

பல ஆண்டுகளாக இயங்கி வரும் முன்னணி நாளிதழ்கள் தங்களுக்கென்று ஒரு இணையதள செய்திப்பிரிவையும் கொண்டுள்ளன. சில ஊடகங்கள் தவிர பல பேர் இப்பிரிவை ஓர் தனிப்பிரிவாகவே இயக்கி வருகின்றனர். இதற்கென்று காணொலிகளையும் தயாரிக்கின்றனர். எனவே இவை தனி டிஜிட்டல் ஊடகம் என்ற தகுதியையும் உடையவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆயினும் அவை இதை மறுத்து ஏற்கனவேயுள்ள அச்சு , தொலைக்காட்சி ஊடகத்தின் இன்னொரு பிரிவு என்றும் எனவே டிஜிட்டல் விதிகள் தங்களை கட்டுப்படுத்தாது என்றும் வாதிடுகின்றனர். இப்போது அரசின் முன்னுள்ள கேள்வி இந்த ஊடகங்களை தனியாக வகைப்படுத்தி சட்டம் இயற்ற வேண்டுமா, இல்லையா என்பதே. ஏற்கனவே உள்ள சட்டத்தில் போதுமான விதிகள் இல்லை என்பதாலேயே இப்படியொரு புதிய ஷரத்தை மத்திய அரசு இணைத்துள்ளது என்பது தெளிவாகிறது. அதுவும் சமூக வலைத்தளங்களை முற்றிலும் தவறாக பயன்படுத்து அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய விதிகள் தேவை என்பதை யாரும் மறுக்க இயலாது.

குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிப்படையும் சம்பவங்கள் அச்சத்தைக் கொடுக்கின்றன. இரண்டாவது அரசியல் கட்சிகள் இந்த ஊடகங்களைப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதும், தேர்தலில் இவை தாக்கத்தை உருவாக்குகின்றன என்ற காரணத்தினாலும் இவை இயங்கும் விதத்தைக் கட்டுப்படுத்த விரும்புவது புரிந்து கொள்ளத் தக்கதே. இவ்விதிகளை எதிர்ப்பவர்களின் வாதம் எத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பதில்தான் அடங்கியுள்ளது. முன்னணி ஊடகங்களின் சார்பாக டிஜிட்டல் செய்தி பதிப்பாளர்கள் சங்கம் இந்த வழக்கில் பங்கேற்றுள்ளது. இதில் தொலைக்காட்சி ஊடகங்களும் அடங்கும். இவர்கள்தான் தாங்கள் பாரம்பரியமாக அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் எனவே இந்த புதிய விதிகள் தங்களுக்கு பொருந்தாது என்கின்றனர்.

ஆனால் பி டி ஐ யின் வாதம் வழக்கு சற்று வேறுபட்டது. மூல சட்டத்தில் டிஜிட்டல் ஊடகத்திற்கு என்று தனித்த விளக்கம் இல்லாததால் தங்களை இந்த விதிகள் கட்டுப்படுத்தாது என்கின்றனர். ஏற்கனவே டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இந்த விதிகளுக்கு தடை உத்தரவு வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அது மட்டுமின்றி இந்த விதிகளைப் பயன்படுத்தி தங்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் அவை கோரிக்கை வைத்துள்ளன. சில மாநில நீதிமன்றங்கள் இதை ஏற்றுள்ளன. ஊடகங்களின் அச்சத்திற்கான காரணம் அரசு நினைத்தால் ஒரு தளத்தையே முடக்கி விட முடியும் என்கின்ற விதி. ஏற்கனவே அச்சு ஊடகங்களின் ஒரு பகுதியாக இருக்கும் டிஜிட்டல் ஊடகத்திற்கு அச்சு ஊடகத்தின் விதிகளே பொருந்தும். புதிய விதிகள் பொருந்தாது என்பதால் இவ்விதிகள் கருத்து சுதந்திரத்திர்கான தடை என்றே பி டி ஐ தனது மனுவில் கூறியுள்ளது. ஆனால் எல்லா ஊடகங்களும் அப்படியல்லையே. தனியாக இயங்கும், தி பிரிண்ட், குவிண்ட், தி வயர், தி நியூஸ் மினிட் போன்றவை உள்ளன. அதே போல தமிழ் உட்பட பல மொழிகளிலும் தனித்த இணைய தளங்கள் உள்ளன. இவற்றுக்கான விதிகளை தனியே உருவாக்க வேண்டுமா அல்லது பாரம்பரிய ஊடகங்களுக்கு பொருந்தும் சட்ட விதிகள் இவற்றுக்கும் போதுமா என்பதே கேள்வி.

தற்போது அரசு கொண்டு வந்திருக்கும் விதிகள் ஊடக சுதந்திரத்திற்கான தடை என்ற கருத்து உண்மையாக இருக்கும் என்றால் பல நீதிமன்றங்கள் தடை உத்தரவு வழங்கியிக்கும். கேரள உயர்நீதிமன்றம் மட்டும் விதிகளின் கீழ் நடவடிக்கை கூடாது என்று கூறியுள்ளது. இதனிடையே சுமார் 1000 இணையதளங்கள் அரசிடம் விவரங்களை கொடுத்து விட்டதாக அரசு வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இணையதளம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே பரவலாக துவங்கிவிட்டது. தமிழிலும் கூடப் பல இணைய தளங்கள் தனியாக துவங்கப்பட்டன. என்றாலும் வெற்றிகரமாகத் தொடரவில்லை. பல நாளேடுகள் தங்களுடைய இணையதளங்களை அமைத்து வந்தன. அப்போது எந்த ஊடகமும் அரசிடம் சென்று நாங்கள் தனித் தொழில்நுட்பமாக உள்ளோம்; எங்களுக்கு தனிச் சட்டம் தேவை என்று கூறவில்லை. பல நிறுவனங்கள் ‘நாஸ்காம்’ எனும் தகவல் தொழில்நுட்பத்துறைச் சார்ந்த அமைப்பிடம் பதிவு செய்து கொண்டன. தவிர 2005-12 ஆம் ஆண்டிற்குள் ஏராளமான தனித்த ஊடகங்கள் வரத் துவங்கின. அப்போதும் இதற்கான பிரத்யேக சட்டங்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பதிவு சட்டத்தை பலர் மதிக்கவேயில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நடைமுறை. பிரைவேட் லிமிடட் எனும் நிறுவனங்கள் கம்பெனி சட்டப்படி பதிவு செய்து கொண்டன. தனியுரிமையாக துவங்கப்பட்டவை பதிவு செய்து கொள்ளவில்லை.

இதையெல்லாம் ஏன் இப்போது பேச வேண்டுமென்றால் சமீபத்தில் நிகழ்ந்த இரு மாற்றங்களின் விளைவாக. ஒன்று மத்திய அரசு டிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளித்து அவற்றையும் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு இணையானவை என்று அறிவித்தது. இதனால் அவை மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டையைப் பெறலாம்; நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம், விளம்பரங்கள் பெறலாம். இரண்டு புதிதாக துவங்கப்பட்ட தனித்த ஊடகங்களும் ஸ்டார்ட் அப் தகுதி பெற்றால் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம். அதாவது ஊடகம் துவங்கப்பட்டு 10 ஆண்டு காலம் வரையில் வரியில்லை. சமீபத்தில் ஓரிரண்டு ஆண்டுகளில் துவங்கப்பட்ட நிறுவனங்கள் மீதமுள்ள ஆண்டுகளுக்கு கார்ப்பரேட் வரி கட்ட வேண்டாம். இப்படி இரண்டு சலுகைகளை பெற முயலும் ஊடகங்கள் இந்தியாவில் ஏராளம். ஆனால் அவையாவும் அரசின் புதிய விதிகள் குறித்து எதையும் தெரிவிக்க விரும்புவதில்லை. ஏனெனில் சலுகைகளைப் பெற விரும்பும் போது கட்டுப்பாடுகளையும் ஏற்க வேண்டும். பாரம்பரிய ஊடகங்கள் சலுகைகளை பெற முடியுமோ முடியாதோ அவை ஏற்கனவே அரசு விளம்பரங்களை சுமந்து கொண்டுள்ளன. எனவே வழக்கிற்கு அப்பாற்பட்டு இப்பிரச்சினையை அரசும், ஊடகங்களும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்வதே சரியான அணுகுமுறையாக அமையும் என்பதில் ஐயமில்லையே?

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

error: Content is protected !!