பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா சுவாரஸ்ய தகவல்கள்!
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புகழ்பெற்ற ’பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் படமாக்கி இருக்கிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
இவ்விழாவில் மணிரத்னம் பேசும் போது, “கல்கி அவர்களுக்கு என்னுடைய முதல் நன்றி. செக்க சிவந்த வானம் படம் முடிந்த பிறகு, லைகா சுபாகஸ்கரன் அடுத்ததா என்ன படம் செய்ய போகிறீர்கள் என்று கேட்டார். உடனே நான் பொன்னியின் செல்வன் எடுக்க வேண்டும் என்று ஆசை என்று சொன்னேன். 2 நிமிடம் யோசித்த அவர் சரி செய்வோம் என்றார். 2 நிமிடம்தான் ஆனது 70 வருட கனவை நிறைவேறுவதற்கு. உடனே அவர் என்ன இது பாகுபலி மாதிரி இருக்குமா.. என்று கேட்டார்.. உடனே நான் நிச்சயம் அப்படி இருக்காது… பாகம் 1 மற்றும் 2 வேண்டுமென்றால் அதே போல இருக்கும். சரி.. சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படம் மாதிரி இருக்குமா.. என்றார். அப்படியும் இருக்காது.. என்றேன். பின்னர் எப்படி இருக்கும் என்றார்.. இது கல்கி எழுதின மாதிரி இருக்கும்னு என்றேன். முடிந்த வரை அதைத்தான் முயற்சி செய்திருக்கிறோம்.” என்று பேசினார்.
விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “சுமார் 70 வருஷத்துக்கு முன்னால ‘கல்கி’ பத்திரிகையில அஞ்சரை வருஷம் ’பொன்னியில் செல்வன்’ நாவல் தொடரா வந்திருக்கு. அந்த புத்தகம் வரும் போது பெரிய ஸ்டார் ஹீரோவுக்கு முதல் நாள், முதல் ஷோ டிக்கெட் வாங்க எப்படி கஷ்டப்படுவாங்களோ, அதே போல அந்தப் பிரதிய வாங்க வாசகர்கள் துடிச்சாங்க. அந்த மாதிரி புரட்சி செஞ்ச கதைதான் ’பொன்னியின் செல்வன்’. நான் புத்தகம் நிறைய படிப்பேன். எல்லாரும் ’பொன்னியின் செல்வன் படிச்சிருக்கீங்களா?’ன்னு எங்கிட்ட கேட்பாங்க. என் பழக்கம் என்னன்னா, புத்தகம் எத்தனை பக்கம்னு கேட்பேன். 200, 300 பக்கம்னா ஓகே. அதுக்கு மேலனா தொடவே மாட்டேன். அதனால ’பொன்னியின் செல்வன்’ எத்தனை பக்கம்னு கேட்டேன். எத்தனை பக்கமா? அது 5 பார்ட்டுங்க, 2000 பக்கம் வரும்னு சொன்னாங்க. ’அட போய்யா’ன்னு சொல்லிட்டு விட்டுட்டேன்.
பிறகு 80- கள்ல ஒரு பத்திரிகையில, ’பொன்னியின் செல்வன்’ படத்தை இப்ப எடுத்தா, வந்தியத் தேவன் கேரக்டருக்கு யார் பொத்தமா இருப்பாங்க?’ன்னு வாசகர் ஒருத்தர் கேட்ட கேள்விக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பதில் சொன்னாங்க. அதுல ’ரஜினிகாந்த்’ அப்படின்னு ஒரே வரியில சொல்லியிருந்தாங்க. இப்படி சொன்ன உடனேயே குஷியாயிடுச்சு. ஜெயலலிதாவே சொல்லிட்டாங்கன்னா, அந்த கேரக்டர் எப்படி இருக்கும்னு ’பொன்னியின் செல்வனை’ படிக்க ஆரம்பிச்சேன். படிச்சு முடிச்சதும் அமரர் கல்கி இருந்திருந்தா அவங்க வீட்டுக்குப் போயி அவர் கால்ல சாஷ்டாங்கமா விழுந்திருப்பேன்.
இதை தமிழ் சினிமா ஜாம்பவான்களான மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரமோ, எஸ்.எஸ்.வாசனோ இதை படமாக்கலை. எம்.ஜி.ஆர், கமல் கூட முயற்சி பண்ணினாங்க. இதை யாராவது படமா எடுக்கமாட்டாங்களான்னு ரசிகர்கள் துடிச்சுட்டு இருந்தாங்க. இப்ப மணிரத்னம் இயக்கி இருக்கார். இதுல என் பங்களிப்பும் இருக்கணும்னு நினைச்சு, மணிரத்னம்கிட்ட எனக்கொரு கேரக்டர் கொடுங்கன்னு கேட்டேன். அவர் உங்க ரசிகர்களுக்கு யார் பதில் சொல்றதுக்கு ஒத்துக்கவே இல்லை. பெரிய பழுவேட்டரையர் கேரக்டராவது நான் பண்றேனேன்னு சொன்னேன். அவர் ஒத்துக்கவே இல்லை. உங்களை அப்படி பயன்படுத்தவே மாட்டேன்னு சொல்லிட்டார். மற்றவர்கள் என்றால் கண்டிப்பாக பயன்படுத்தி இருப்பாங்க. அதனாலதான் மணிரத்னம் சிறந்த இயக்குநராக இருக்கிறார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் கமலஹாசன் பேசும் போது, “எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. என்னுடைய மணி ரத்னம் கதை பற்றி சொல்ல நிறைய உள்ளது. இதை எம்.ஜி.ஆர் வாங்கி வைத்திருந்தார். அவர் சீக்கிரம் எடுத்துவிடு என்று சொன்னார் அப்போது புரியவில்லை. ஆனால், அந்த எண்ணம் அனைவருக்கும் வந்து விட்டது. நான் முயற்சி செய்தேன். ஆனால், என்னால் எடுக்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. மணி ரத்னம் வெற்றி பட்டியலில் முக்கிய படமாக இது இருக்கும். மேடை அலங்காரத்திற்காக நான் இதை சொல்லவில்லை.
ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்க முடியுமா என்று நினைத்து இருக்கோம். அது மாதிரி தான் இந்த படம். இது ஒரு சிறிய குடும்பம். இதில் பொறாமை பட நேரமில்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர் நானும் ரஜினியும். வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என சிவாஜி சொன்னார். அதை கேட்ட எனக்கு ஷாக்கா இருந்தது. என்னா, அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றிருந்தேன். சரி சிவாஜி சாரே ரஜின்னு சொல்லிட்டாரேன்னு அதை விட்டு விட்டு.. அப்ப எனக்கு என்ன கேரக்டர்ன்னு கேட்டேன்? நீ அருண்மொழி வர்மன் கேரக்டர் செய் என்றார். அது அன்று நடக்காமல் போனது. இன்று. ரஜினி செய்ய நினைத்த கேரக்டரில் கார்த்தியும், எனக்கான கேரக்டரில் ஜெயம்ரவியும் நடிக்க கிடைத்துள்ளது. வெற்றி வரும், தோல்வி வரும் ஆனால், அதை புரிந்து கொள்ள வேண்டும். AR.ரஹ்மானின் ஒவ்வொரு பாட்டும் என்னுடைய இதய துடிப்பை அதிகரித்தது. நீங்கள் எனக்காக போட்ட பாடலை நான் திரும்ப திரும்ப கேட்டு வந்தேன்” என்றார்.
கதையின் நாயகனான ‘பொன்னியின் செல்வன்’ அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘ஜெயம்’ ரவி நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு எப்படி வந்தது என்று அனைவரும் கேட்கிறார்கள். நிச்சயம் எனக்கு தெரியாது. மணிரத்தினம் என்னை கூப்பிட்டார். நான் சென்று நடித்தேன். ’உனக்கு கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது’ என்ற ரஜினி சாரின் வசனம் தான் நினைவிற்கு வந்தது.
நான் சினிமாத் துறைக்கு வந்து 20 வருடங்களாகிறது. நீண்ட வருடங்களாக உழைத்திருக்கிறேன், அதன் பலனாகத்தான் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது எனக்கு தோன்றியது. கமல் சாரும் ரஜினி சாரும் பல ஆண்டுகள் தங்கள் உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட உழைப்பால் தான் எனக்கு இந்த படம் கிடைத்திருக்கிறது என்றும் நான் நம்புகிறேன்.
பேச்சால் ஒருவரை மாற்றமுடியுமா? என்று நினைத்தேன். ஆனால், அது மணி சாரால் முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன். ஏனென்றால், அருண்மொழிவர்மன் யார் என்பதை நான் கூறும்போது, ’நீ இடையில் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேள்’ என்று கூறினார். அவர் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன். கார்த்தி இந்த படத்தின் மூலம் சிறந்த நண்பன் ஆகிவிட்டான். அவன் வளர்வதைப் பார்க்க பிடிக்கும். விக்ரம் சார் உலகளவில் பேசப்பட வேண்டும் மனதார வேண்டிக் கொள்கிறேன். விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் சார் மற்றும் அனைவருடனும் நடித்ததில் மகிழ்ச்சி’ என்றார்.
கதையின் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா பேசும் போது, “இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. ரஜினி சார் கமல் சாரை எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் வாவ் என்றே சொல்ல தோன்றுகிறது. 2கே கிட்ஸ் முதல் அனைவருக்குமே இந்த படம் சிறப்புரிமை, ஆசிர்வாதம், சிறந்த படம் என்று நான் என்ன வார்த்தை கூறினாலும் எனக்கு அது குறைவாகவே தோன்றுகிறது. இந்த வாய்ப்பை கொடுத்த மணி சாருக்கு மிக்க நன்றி” என்றார்.
கதையின் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி, ‘பல ஆண்டுகளாக தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த கதை இது. இதில் நானும் ஒரு அங்கம் என்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் நடிக்கும் போது என் கவனம் முழுக்க இதில் மட்டுமே இருந்தது. தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கால்வாசி நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். இந்த தலைமுறையில் இந்த படம் செய்ய முடிந்தது என்பதில் மகிழ்ச்சி. எல்லா கதாபாத்திரங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தது. கற்பனை மற்றும் நிஜ கதாபாத்திரம் என கலந்து அமைத்த கதை இது. இயக்குநருடன் சேர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனுடைய கற்பனையும் இதில் இருக்கிறது. படம் பாருங்கள். நிச்சயம் சுவாரஸ்யமானதாக இருக்கும்’ என்றார்.