தமிழகத்தில் 6,630 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் பிடிப்பட்டது!
இந்த நிதியாண்டில் தமிழகத்தில் 6,630 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
பினாமி ஒழிப்பு சட்டம் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2016-17 நிதியாண்டில் தமிழகத்தில் சுமார் 3,209 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2017 -18 நிதியாண்டில் பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் 6,630 கோடி ரூபாய் பினாமி சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாக வருமானவரி புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 3 மாதத்திற்குள் விளக்கமளிக்காவிட்டால், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பில் 35 சதவீதம் அபராதமும் 7 வருடம் சிறைதண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் மூலம் வாங்கிக் குவிக்கப்பட்ட ரூ.3,900 கோடி மதிப்புடைய பினாமி சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.
அடிசினல் ரிப்போர்ட் :
சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத, வங்கி கணக்குகளுக்கு அபராதம் விதிக்கும் முறை அறிமுகம் செய்த பின்னர் மூடப்பட்ட கணக்குகள் குறித்து, ஸ்டேட் வங்கியிடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு அந்த வங்கி அளித்த பதில்: கடந்த 2017 ஏப்ரல் 1 முதல் 2018 ஜனவரி 31 வரை குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத 41.16 லட்சம் கணக்குகள் மூடப்பட்டன.