அய்யய்யயே.. நம்ம தமிழ்நாடு எம்.பி.ங்க பிராகரஸ் ரிப்போர்ட் ரொம்ப புவராமில்லே!

மாதந்தோறும் மத்திய அரசு நிதியிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் வரை சம்பளம்., படி மற்றும் இத்யாதி வாங்கும் 16-வது நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறும் எம்.பி.க்கள் செயல்பாடு, சேவை, பங்களிப்பு குறித்து அண்மையில் ஒரு சர்வே நடந்தது. அதில் கருத்து தெரிவித்த மக்கள், தமிழகம், உத்தரப் பிரதேசம், கோவா ஆகிய மாநில எம்.பி.க்களின் செயல்பாடு மனநிறைவை அளிக்க வில்லை, மிகமோசம் என்று வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதேசமயம் கேரளா, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் செயல்பாடு, பணிகள் மிகுந்த திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அண்மையில் ஒரு வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள், “பெரும்பாலான கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன. வாரிசு அரசியலுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் விதிவிலக்காக உள்ளன. சில மாநிலங்களில், பாஜகவிலும் வாரிசு அரசியல் இல்லை என கருத்து தெரிவித்தனர். இந்தியாவில் சில 100 குடும்பங்களும், தமிழகத்தில் சில 10 குடும்பங்களும் ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசம் வைத்திருக்க விரும்புகின்றன. முன்னாள் முதல்வர் அண்ணாவின் மகன் வறுமையால் தற்கொலை செய்து கொண்டார். அண்ணா பெயரை சொல்லி கட்சி நடத்தும் திமுக, அதிமுக கட்சிகள் அவரை கண்டுகொள்ளவில்லை” என்று தெரிவித்திருந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறப் போகிறது , அதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ் இணைந்து மக்களவை எம்.பி.க்கள் செயல்பாடு, பணிகள் ஆகியவை குறித்து வாக்காளர்களிடம் கருத்துகளைக் கேட்டது. ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்களின் செயல்பாடு குறித்து அந்தந்த மாநில மக்களிடம் கருத்து கேட்டு இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

ஒட்டு மொத்தத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள்தான் சிறப்பாகச் செயல்பட்டு உள்ளார்கள் என்று வாக்காளர்களின் மனநிறைவு அடிப்படையில் தெரியவந்துள்ளது. கடவுளின் தேசமான கேரள மாநிலத்தில் 20,178 வாக்காளர்களிடம் தங்கள் மாநில எம்.பி.க்கள் செயல்பாடு குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன.அதில் 52.4 சதவீதம் பேர் எம்.பி.க்களின் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் எம்.பி.க்கள் செயல்பாடு மனநிறைவு என்றும், 24 சதவீதம் பேர் அனைத்து எம்.பி.க்களும் மனநிறைவு அளிக்கும்படி செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

2-வதாக ராஜஸ்தான் மாநில எம்.பி.க்கள் உள்ளனர். 14 ஆயிரத்து 729 வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்டதில், 38.8 சதவீதம் பேர் எம்.பி.க்கள் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். 24 சதவீதம் வாக்காளர்கள் அனைத்து எம்.பி.க்களும் சரியாகச் செயல்படவில்லை என்றும், 29 சதவீதம் பேர் பரவாயில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில எம்.பி.க்களின் செயல்பாட்டுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. 14 ஆயிரத்து 957 வாக்காளர்களிடம் கேட்கப்பட்டதில், 36.3 சதவீதம் பேர் எம்.பி.க்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.

4-வது இடத்தில் மகராஷ்டிரா எம்.பி.க்களும், 5-வது இடத்தில் தெலங்கானா எம்.பி.க்களும் சிறப்பாகச் செயல்பட்டதாக வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எம்.பி.க்கள் செயல்பாட்டில் முதல் 5 இடங்களில் பாஜக ஆளும் இரு மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் மிக மோசமாக தமிழகம், உ.பி. கோவா, உத்தரகாண்ட எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் மக்களவையில் 37 எம்.பி.க்கள் இருக்கின்றனர். இவர்களின் செயல்பாடு குறித்து 27 ஆயிரத்து 268 வாக்காளர்களிடம் கருத்து கேட்கப்பட்டதில், அனைத்து எம்.பி.க்களின் செயல்பாட்டிலும் திருப்தியில்லை என்று 43 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். 18.2 சதவீதம் பேர் மட்டுமே எம்.பி.க்கள் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாகவும், 23.3 சதவீதம் பேர் பரவாயில்லை என்றும் தெரிவித்துள்ளனர். நிகர மனதிருப்தி அடிப்படையில் பார்த்தால், தமிழக எம்.பி.க்கள் செயல்பாடு மைனஸ் 1.5 சதவீதமாக இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக களம் காண்கிறது.

தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் இருக்கிறது. நாட்டிலேயே 80 எம்.பி.க்களை கொண்ட மாநிலம், அங்கு பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார்.

உ.பி.யில் 47ஆயிரத்து 815 வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்டதில், 28.2 சதவீதம் பேர் மட்டும் எம்.பி.க்கள் செயல்பாட்டில் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். 43.3 சதவீதம் பேர் எம்.பி.க்கள் செயல் பாட்டில் திருப்தியில்லை என்றும், 23 சதவீதம் பேர் பரவாயில்லை என்றும் தெரிவித்துள்ளனர். நிகர மனநிறைவு 8.2 சதவீதம் மட்டுமே இருக்கிறது.

வாக்காளர்களுக்கு மனநிறைவு அளிக்காத வகையில் எம்.பி.க்கள் செயல்பாட்டில் உத்தரப் பிரதேச எம்.பி.க்களும், தமிழக எம்.பி.க்களும் ஏறக்குறைய ஒரே சதவீதத்தையே பெறுகின்றனர். அதில் மிக மோசமாக தமிழக எம்.பி.க்கள் செயல்பாடு வாக்காளர்கள் மனநிறைவு அடிப்படையில் எதிர்மறை யாக இருக்கிறது. இது குறித்து கருத்து சொன்ன ஒரு சீனியர் பத்திரிகையாளர், “ இந்த தகவல் ஒன்றும் புதுசு இல்லை. தமிழக எம் பி கள் மீது இங்குள்ள மக்களுக்கு ஒரு போதும் பெரிய எதிர்பார்ப்பு கிடையாது” என்று மட்டும் கமெண்ட் சொன்னது குறிப்பிடத்தக்கது.