September 20, 2021

பட்டி மன்ற பேச்சாளர் & நடுவர் அறிவொளி காலமானார்

திருப்பங்கள் தரும் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகில் உள்ள ஹனீபா காலனியை சேர்ந்தவர் டாக்டர் அ.அறிவொளி. தமிழறிஞரும், ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாளருமான இவர் சிறந்த பட்டிமன்ற நடுவராகவும் திகழ்ந்து வந்தார். அவர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 80.

1936ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் பிறந்தார் அறிவொளி. பள்ளிப்படிப்பை நாகப்பட்டினத்தில் படித்தார். கல்லூரிபடிப்பை தஞ்சையில் முடித்தார். அதன் பின்னர் அரசு வேலை உட்பட பல்வேறு இடங்களில் ஆசிரியா் பணியாற்றி வந்த இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். அதன்பிறகு திருச்சியில் நிரந்தமாக தங்கினார். வித்துவான் மற்றும் தமிழில் எம்.ஏ.வரை படித்திருந்த காரணத்தால் 1956ம் ஆண்டுகளில் இருந்து இலக்கிய கூட்டங்களில் பேச ஆரம்பித்தார்.

திருக்கோவில்கள் வரிசைகள் என்ற தலைப்பில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள பழமையும், பெருமையும் கொண்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் மற்றும் பஞ்சபூத ஸ்தலங்களுக்கு நேரில் சென்று அதன் வரலாறுகளையும், சிறப்புக்களையும் ஆராய்ந்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும் 120-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். திருச்சி கம்பன் கழகத்தில் ஆய்வுரை திலகம் என்ற பட்டம் மற்றும் கபிலவாணர் விருது பெற்றவர் ஆவார். 1986-ம் ஆண்டு வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.

பட்டிமன்றங்களில் தமிழ் பேச்சாலும் திறமையாலும் புகழ்பெற்றிருந்த குன்றக்குடி அடிகளார், அ.ச.ஞானசம்பந்தம் போன்றவர்களுடன் இவர் பட்டிமன்றங்களில் பேசியுள்ளார். கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சீகசிந்தாமணி, திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் படைப்புகள், உள்பட ஆயிரகணக்கான தலைப்புகளில் பட்டிமன்றங்களில் பேசியுள்ள அறிவொளி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டிமன்ற நடுவராகவும் பேசி வருகிறார். இவரது பட்டி மன்றங்கள் தமிழகம் தாண்டி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ் சங்கங்களில் மட்டுமல்லாது, அமெரிக்கா, கனடா, பாரிஸ், குவைத், செஷல்ஸ் தீவுகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் நடந்துள்ளது.

தமிழிலில் பேசவது மட்டும்மல்லாது தமிழில் எழுதுவதிலும் வல்லவரான அறிவொளி இதுவரை எழுதியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 103. 1974ம் ஆண்டு பாரதிதாசனின் புதிய பார்வை என்ற தலைப்பில் முதல் நூலை எழுதினார். சமீபத்தில் எழுதப்பட்ட 103வது நூலின் பெயர் யோகக் களஞ்சியம், சிவபுராணம் அனுபவ விளக்கம் என்ற நூலும், கம்பராமாயணம் முழுவதையும் நாவல் வடிவில் ஆயிரத்து 200 பக்கங்களில் இவர் எழுதிய நூலும் மிகப் பிரபலமானவை.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டாக்டர் அ.அறிவொளி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இறுதி சடங்கு திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் அருகே உள்ள ஹனீபா காலனியில் இருந்து இன்று மாலை 3 மணியளவில் தொடங்குகிறது. அவரது உடலுக்கு தமிழறிஞர்கள், ஆன்மீக பெரியோர்கள் உள்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.