December 9, 2022

மக்கள் தொகை வீழ்ச்சியால் விளையும் சிக்கல்கள் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ருவரின் இலாபம் மற்றவரின் நஷ்டம் என்பது பொது வழக்கு. இன்றைய நெருக்கமாக பின்னப்பட்ட உலக உறவு வலையில் ஓரிடத்தில் ஏற்படும் வெட்டு மற்றொரு இடத்தில் தொய்வை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய நாடுகளில் குறையும் மக்கள் தொகையால் இந்தியா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு சந்தை குறைகிறது. அதேசமயம் இந்தியா அவர்களுக்கு சந்தையாகவும் மாறுகிறது. ஏன் ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருகிறது எனும் கேள்விக்கு விரிவான பதில்கள் இல்லை என்றாலும் பொதுவான காரணம் முன்னேறிய தொழில்மய நாடுகளில் மக்கள் தொகைக் குறையும் எனும் நிரூபனமான கோட்பாட்டின் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது. உண்மைதான் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும் வீழ்ந்து கொண்டே வருகிறது என்பது. ஆசியாவின் பணக்கார நாடான ஜப்பானில் மக்கள் தொகை குறைந்து வருகிறதாம். கடந்த ஆண்டில் சராசரியை விடக் குறைந்து விட்டது என்று தகவல். பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தாமதமான திருமணம், வேலை செய்யும் பெண்களுக்கு குழந்தைப் பராமரிப்பு சுமையாக இருப்பது என்பவை முக்கிய காரணங்களாகவுள்ளன. உலகம் முழுதும் காணப்படும் இப்போக்கு பெரும்பாலும் பணக்கார, தொழில்மய நாடுகளில் மட்டுமே அதிகம் காணப்படுகிறது. இப்போது சுமார் 22 நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஜப்பானைத் தவிர தென்கொரியாவிலும், சீனாவிலும் கூட மக்கள் தொகை குறைய வாய்ப்புண்டு எனக் கூறப்படுகிறது. இந்தியாவிலும் 2050 ஆம் ஆண்டிற்குப் பிறகு மக்கள் தொகை குறையக்கூடும் என்றே கணிக்கப்படுகிறது. ஒரு கணக்கீட்டின்படி உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடுகளில் இந்தியா, அமெரிக்கா, சீனா, நைஜீரியா, இந்தோனேஷியா ஆகியவற்றுடன் பல ஆப்பிரிக்க நாடுகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு எதிர்மாறாக ஐரோப்பாவின் 48 நாடுகளில் 32 இல் மக்கள் தொகைக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையாக மக்கள் தொகைப் பெருக்கம் இருக்குமாம். உலகில் பிறக்கும் ஐந்து குழந்தைகளில் இரண்டு ஆப்பிரிக்காவில் பிறக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.

மக்கள் தொகை குறைந்தால் என்ன நடக்கும் என்று கருதுபவர்கள் அது நல்லதுதானே? என்று கேட்பார்கள். இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை குறைவதால் நன்மை உண்டுதான். ஆனால் 5 கோடிக்கும் கீழே மக்கள் தொகைக் கொண்ட நாடுகளில் மக்கள் தொகைக் குறைந்தால் பல எதிர்மறையான விளைவுகளே நிகழும். குறிப்பாக சந்தைப் பொருளாதாரம் பலவீனம் அடையும். முதியோர் எண்ணிக்கை அதிகரித்தால் பராமரிப்புச் செலவு கூடும். ஓய்வூதியத்தின் அளவு பெருகும். வருமான வரியும், இன்ன பிற வரிகளும் குறையும். அரசின் செலவு அதிகரித்து வருவாய் குறைந்தால் அதை ஈடுகட்ட இருமடங்கு ஏற்றுமதி தேவைப்படும். இல்லையென்றால் அந்நிய முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தைச் சார்ந்திருக்க வேண்டும். இதையெல்லாம் விட இராணுவத்தில் வீரர்களின் எண்ணிக்கையும் குறையும். நாட்டின் பாதுகாப்பிற்கு மேலும் செலவு செய்ய வேண்டும். ஏன் வாடகைக்கு ஆட்களை வேலைக்கு எடுப்பது போல் இராணுவத்திற்கும் வெளிநாட்டிலிருந்து ஆட்களைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

இத்தொல்லைகளிலிருந்து மீள ஏற்கனவே ஜப்பான் போன்ற நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. குழந்தைப் பெறும் தம்பதிகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. உங்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையத் தேவையான அல்கோரிதம்களை உருவாக்கி இணையத்தில் இணைத் தேடும் முறையைக் கூட ஜப்பான் அரசு செய்யவுள்ளதாம். இதெப்படி இருக்கு? ஆகையால் மக்கள் தொகை இயற்கையாகவே குறைந்தால் அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வது இயல்பானது. ஆனால் வேறு காரணிகளால் குறையும் போது அதிரடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசும் பருவ நிலை மாற்றம், மாசுபடுதல் போன்றவற்றினால் குறையும் மக்கள் தொகையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும். அதே சமயம் தானே முன்வந்து ஒன்றே பெறுக; ஒளிமயமாக வாழ்க எனும் அதிகாரபூர்வ முழக்கத்தையும் தொடர்ச்சியாக எழுப்பி வரும். இப்படி முரண்பாடான செயல்பாடுகளை செய்யச் சொல்லும் அளவிற்கு இந்த மக்கள் தொகை வீழ்ச்சி சிக்கல் இருக்கிறது என்பதே சற்று மாறுபட்ட விஷயமாக மக்களுக்கு தோன்றலாம். ஆனால் அதுதானே உண்மை?

ரமேஷ்பாபு