மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா போட்டி? ஆனா.. இல்லை!?

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சமீபத்தில் கட்சி விருப்பப் பட்டால் தான் மக்களவை தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். இந் நிலையில் தற்போது வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து கட்சி தலைமை தன்னை போட்டி யிட அழைத்தால் மகிழ்ச்சி என தெரிவித்தார். அதே சமயம் இந்த பார்லிமெண்ட் தேர்தலில் பிரியங்கா காந்தி வத்ரா போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, `பார்க்கலாம், இப்போதைக்கு கொஞ்சம் சஸ்பென்ஸ் (மர்மம்) தொடரட்டும்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்தார்.

கேரளாவில் இரண்டு நாள் பிரச்சார பயணம் மேற்கொண்ட பிரியங்கா, தனது பிரச்சாரத்தின் போது ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் பிரதமர் மோடியின் வாக்குறுதிகள், பொய் பிரச்சாரங்கள் என பல விஷயங்களை குறிப்பிட்டு பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தது சகலரையும் கவர்ந்துள்ளது.

முன்னதாக இந்த பார்லிமெண்ட்த் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் தொடர்ந்து குரல்கள் உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், உத்தரப் பிரதேச மாநித்தின் கிழக்குப் பகுதிக்கு, காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள பிரியங்காவோ, அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி எதுவும் பேசாமலேயே இருக்கிறார். இதில் முடிவடுக்கும் முழுப் பொறுப்பை அவரது அண்ணனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தியிடம் அவர் ஒப்படைத்துவிட்டார்.

இதற்கு முந்தைய சந்தரப்ப்பங்களில் எல்லாம், பிரியங்காவின் இலக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் அல்ல, மாறாக உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசை போர்க்குணமிக்க கட்சியாக மாற்றி, 2022 சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் என்று தெளிவாகக் கூறிவந்த ராகுல் காந்தி இப்போது `சஸ்பென்ஸ் தொடரட்டும்’ என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனாலும் போகும் இடங்களில் எல்லாம் கட்சித் தொண்டர்கள் பிரியங்காவிடம் இந்தக் கேள்வியை எழுப்பி வருகிறார்கள். கடந்த மாதம், தாயார் சோனியா காந்தியின் ரே பரேலி தொகுதியில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசிக் கொண்டிருந்தார் அப்போது, `ரே பரேலி தொகுதியில் போட்டி யிடுவீர்களா?’ என்று சிலர் கேட்டனர். அதற்கு `ஏன் வாரணாசியில் போட்டியிடக் கூடாது?’ என பட்டென்று பிரியங்கா சாதுரியமாக பதிலளித்தார்.

இந்த பதில், ஒருவேளை வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்தும் அவர் போட்டியிடலாம் என்ற எதிரொலியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரள செய்தியாளர்களிடம் இன்று மீண்டும் அதே கேள்வியை எதிர்கொண்டார். அப்போது, ”காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டால், கட்சி விரும்பினால் பிரதமர் மோடியை எதிர்த்து மகிழ்ச்சியோடு போட்டியிடுவேன்” என்றார் பிரியங்கா.