April 14, 2021

நியூசிலாந்து அமைச்சரவையில் இடம்பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்!

நியூசிலாந்து நாட்டில் முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்ற பெண் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்தில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் பதவி ஏற்றுள்ளார். இதனிடையே அமைச்சரவையை விரிவாக்கம் செய்த அவர் தனது அமைச்சரவையில் மேலும் 5 பேரை இணைத்துள்ளார். அதில் ஒரு அமைச்சர் இந்தியாவைப் பூர்வீமாகக்கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் சமூக மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

41 வயதான பிரியங்கா சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் வளர்ந்தார். அவரது சொந்த ஊர் கொச்சி ஆகும். ஆக்லாந்தில் இருந்து இரண்டு முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியங்கா, தனது உயர் படிப்பைத் தொடர நியூசிலாந்துக்கு சென்றார். அங்கு இருக்கும்போது அவர் கிறிஸ்ட்சர்ச்சை சேர்ந்த ரிச்சர்ட்சன்னை திருமணம் செய்து கொண்டார். 2004 முதல் அவர் தொழிற்கட்சியுடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். கடந்த ஓணம் பண்டிகையின் போது, பிரியங்கா, நியுசிலாந்து பிரதமர் ஆர்டணுடன் நேரலையில் கேரள மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். நீயூசிலாந்து நாட்டில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒருவர் அமைச்சராக பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.