March 22, 2023

விண்வெளி சேவையில் தனியாரின் பங்களிப்பென்பது ஒரு சகாப்தம் – இஸ்ரோ சிவன்

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்துள்ள மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Private Sector to Be Allowed to Build Rockets, Provide Launch Services for Space Missions, Says ISRO Chief K Sivan

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக்‍ கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்‍கூட்டத்தில், விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்‍கப்பட்டது.

இதன்மூலம், விண்வெளி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் சில கட்டுப்பாடுகளுடன் தனியார் நிறுவனங்கள் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விண்வெளித் துறையில் இந்தியாவின் முழுத் திறனையும் வெளிப்படுத்த இந்த நடவடிக்கை நிச்சயம் உதவியாக இருக்கும் என்றும் மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இந்நிலையில், விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்துள்ள மத்திய அரசின் முடிவை, இஸ்ரோ தலைவர் சிவன் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர், ‘விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த சீர்திருத்தங்கள் உற்சாகம் அளிக்கிறது. இந்த சீர்திருத்தங்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பெற நமது இளைஞர்கள் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏற்கனவே முன்வந்துள்ளன. உலக விண்வெளி பொருளாதாரத் திற்கான ஒரு முக்கிய மையமாக இந்தியா உருவாகும் என்று உறுதியாக நம்புகிறோம். தனியார் நிறுவனங்கள் முன்வந்து விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவை உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக மாற்ற வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவை ஒரு புதிய விண்வெளி சகாப்தமாக மாற்றும்’ என்றார்.