நாடெங்கும் 150 தனியார் ரயில்களுக்கு அனுமதி…!
நம் நாட்டில் 12,617 பயணிகள் ரயில்கள், 7,421 சரக்கு ரயில்கள், 7,172 ரயில் நிலையங்கள், 1.16 லட்சம் கி.மீ ரயில் பாதை, 13 லட்சம் ஊழியர்கள் என்று உலகிலேயே மிகப்பிரம்மாண்டமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனம் என்று பெருமை கொண்ட இந்தியன் ரயில்வேயில் ஆரம்பக் கட்டமாக 150 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க அனுமதி தருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.2023-2024ஆம் ஆண்டுக்குள் 150 தனியார் ரயில்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC), தனியார் நிறுவனத்தால் இயக்கப்படும் நாட்டின் முதல் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை டெல்லி-லக்னோ பாதையில் அக் டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இது இந்திய ரயில்வேயில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும், ஏனெனில் தனியார் நிறுவனத்தால் இயக்கப்படும் ரயில்கள் நாட்டில் 24 வழித்தடங்களில் தொடங்கப்படும். ரயில்வே அமைச்சின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இது திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ரயில்வே வாரிய தலைவர் வினோத், எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்ய ரயில்களை இயக்குவதில் தனியார் பங்களிப்பு அவசியம் என தெரிவித்துள்ளார். தனியாரை அனுமதிக்கும்போது, அவர்கள் தங்களது சொந்த ரயில்கள், அதிநவீன தொழில்நுட்பங்கள், பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுப்பதில் புதுமையான வழிமுறைகள், உடமைகளை கையாள்வதற்கு சிறந்த முறைகள் ஆகியவற்றைப் புகுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது ரயில்களை தனியார் இயக்குவது நடைமுறைக்கு உகந்தது என்பதை காட்டும் வகையில், 2 தேஜாஸ் ரக சொகுசு ரயில்களின் இயக்கம், ரயில்வே வாரியத்தின் கீழ் உள்ள நிறுவனமான ஐஆர்சிடிசி-யிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், முற்றிலும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான சோதனை முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டதாகவும் வினோத்குமார் கூறியுள்ளார்.
ஒவ்வொரு டிக்கெட் மீதும் 25 லட்ச ரூபாய் காப்பீடு, பயணிகள் வசதிக்காக சக்கர நாற்காலிகள், பயணிகளின் உடைமைகளை வீட்டிலிருந்தே பிக்அப் செய்வது, உடைமைகளை வீட்டிற்கே சென்று வழங்குவது போன்ற மதிப்பேற்று சேவைகளை ஐஆர்சிடிசி அறிவித்திருப்பதாகவும், பயணிகளை வீட்டிலிருந்தே பிக்அப் செய்வது, ரயிலில் இருந்து இறங்கிய பிறகு வீட்டில் கொண்டுவிடுவது ஆகிய சேவைகளையும் ஐஆர்சிடிசி-யால் செய்ய முடியும் என்றும் ரயில்வே வாரியத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் ரயில்கள் இயக்கப்படத் தொடங்கும்போது, அதற்கு ஒழுங்குமுறை ஆணையம் தேவைப்படும். வழித்தடங்கள், கட்டணங்கள் தொடர்பான சச்சரவுகளுக்கு அந்த ஒழுங்குமுறை ஆணையம் தீர்வு காணும் என்றும் வினோத் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக டெல்லி மற்றும் லக்னோ இடையே அக்டோபர் 4ஆம் தேதிக்குள் ஐஆர்சிடிசி ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், அவ்விரு நகரங்களிலும் பதிவுசெய்தால் பயணிகளுக்கு ஓய்வறை வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் ரயில் சேவையை பொறுத்தவரை, தொடக்கத்தில் 150 தனியார் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்படும் என்றும், அதற்கான வழித் தடங்களை பரிசீலித்து வருவதாகவும் வினோத் குமார் கூறியுள்ளார். ஓவர்நைட் ரயில் சேவைகளின் பட்டியலில் டெல்லி-மும்பை, டெல்லி-லக்னோ, டெல்லி-ஜம்மு / கத்ரா, டெல்லி-ஹவுரா, செகந்திராபாத்-ஹைதராபாத், செகந்திராபாத்-டெல்லி, டெல்லி-சென்னை, மும்பை-சென்னை, ஹவுரா-சென்னை மற்றும் ஹவுரா -மும்பை வழி சேவைகள் இடம்பெற்றுள்ளன.
இன்டர்சிட்டி ரயில் சேவைகளின் பட்டியலில், மும்பை-அகமதாபாத், மும்பை-புனே, மும்பை-அவுரங்காபாத், மும்பை-மட்கான், டெல்லி-சண்டிகர் / அமிர்தசரஸ், டெல்லி-ஜெய்ப்பூர் / அஜ்மீர், ஹவுரா-பூரி, ஹவுரா-டாடநகர், ஹவுரா-பாட்னா, செகந்திராபாத்-விஜயவாடா சென்னை-பெங்களூரு, சென்னை-கோயம்புத்தூர், சென்னை-மதுரை மற்றும் எர்ணாகுளம்-திருவனந்தபுரம் ஆகிய வழிதடங்கள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் செகந்திராபாத் போன்ற முக்கிய நகரங்களில் புறநகர் ரயில் சேவைகளை இயக்க தனியார் ஆபரேட்டர்களை சேர்க்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ஆக 2023-24ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில்கள் இயக்கப்பட முடியும் என்றும், விரைவில் தனியார் ரயில்களை இயக்குவதற்கான வழித்தடங்களை ஏலம் விடும் பணி தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.