அடுத்த ஆண்டு 75-வது சுதந்திர தின விழா பிரமாண்டமாய் இருக்கும் – பிரதமர் மோடி பேச்சு முழு விபரம்!

அடுத்த ஆண்டு 75-வது சுதந்திர தின விழா பிரமாண்டமாய் இருக்கும் – பிரதமர் மோடி பேச்சு முழு விபரம்!

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தபோதிலும், 74-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சமூக விலகலைக் கடைபிடித்து, சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. புதுடெல்லியில் பிரதமர் மோடி, இன்று காலை ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின் டெல்லி செங்கோட்டைக்கு, சுதந்திரதின நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு பிரதமர் மோடி வந்தார். அவரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். அதன்பின் அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது, அதை மோடி ஏற்றுக்கொண்டார்.

அதன்பின் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து 7-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. பின் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை இதோ:

4வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நம் நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வ நன்றி. சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், வீரர்களை வணங்கும் நேரம் இது.

நாட்டில் பல்வேறு இடங்களில் மழை, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் போர்க்களமாக உள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த தருணத்தில் கொரோனா முன்கள பணியாளர்களை நினைவு கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களக்கு நன்றி. கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் வெல்வோம். போராட்டத்தில் இருந்து கற்று கொண்ட பாடங்களை மறந்துவிடக்கூடாது.

கோவிட்-19 தொற்று காரணமாக, முதல்முறையாக குழந்தைகள் இல்லாமல் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

தற்சார்பு இந்தியா எனும் வார்த்தை இந்தியர்கள் ஒவ்வொருவரின் மனதிலும், 130 கோடி இந்தியர்களின் மனதிலும் மந்திரச்சொல்லாகி மாறி இருக்கிறது. இந்த தற்சார்பு இந்தியாவை மக்கள் உருவகப்படுத்திப் பார்க்கிறார்கள். அதை நாம் நனவாக்க வேண்டும். இந்த கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், 130 கோடி இந்தியர்கள் மனதில் தற்சார்பு இந்தியா என்ற எண்ணம் உதயமாகிவிட்டது. தற்சார்பு இந்தியா எனும் கனவை நாம் நனவாக்குவோம் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கான திறமை,தன்னம்பிக்கை, செயல்திறன் அனைத்தும் இந்தியர்களுக்கு இருக்கிறது. நாம் ஒன்றை செய்ய முடிவெடுத்துவிட்டால், அந்த இலக்கை அடையும்வரை ஓய மாட்டோம்.

எல்லோருடைய மனதிலும் இப்போது இருக்கும் சந்தேகம் கொரோனா தடுப்பு மருந்து குறித்தது தான். நம்முடைய விஞ்ஞானிகள் 3 தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து அது பல்வேறு கட்டப் பரிசோதனையில் இருக்கின்றன. கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிட்டால் விரைவாக பெரிய அளவு உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து இந்தியர்களுக்கும் குறைந்த நாட்களி்ல் வழங்கப்படும்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் விரைவில் அறிமுகம் செய்யப்படும். முழுமையாக தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுகாதாரத்துறையில் புரட்சி கொண்டுவரப்படும்.இதன்படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் தனித்தனியே சுகாதார அடையாள அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையில் அந்த குறிப்பிட்ட நபர் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும். ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் செல்லும் போது, அந்த சுகாதார அட்டையில் சிகிச்சை குறித்த விவரம் இடம் பெறும். மருத்துவர்களின் முன் அனுமதி பெறுவது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த அட்டையில் இடம் பெறும்.

https://twitter.com/aanthaireporter/status/1294522557165576195

அடுத்த ஆண்டு 75-வது சுதந்திரதினம் கொண்டாடப்போகிறோம். நாட்டின் 75வது சுதந்திர தின விழா மிக பிரமாண்டமாக இருக்கும்.

பெண்கள் இன்று நிலக்கரி சுரங்கப்பணிகளிலும் வேலை செய்கின்றனர். நமது மகள்கள் போர் விமானங்களை ஓட்டி வானத்தையும் தொடுகின்றனர். நமது மகள்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது நிர்ணயம் தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும்

ஒட்டுமொத்த தேசமும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம், குரல் கொடுப்போம் என்று சபதம் ஏற்க வேண்டும்.உலகம் இந்தியாவை உற்று நோக்குகிறது. உலகை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல இந்தியா வளர வேண்டும். உலகிலேயே அதிகமான இளம் தலைமுறையினரைக் கொண்ட நாடு இந்தியாதான். தியாகம் செய்வதற்கு இந்தியர்கள் அஞ்ச மாட்டார்கள். உலகிலேயே புத்தாக்க சிந்தனையுடனும், புதிதாகச் சிந்திப்பவர்களாக இந்தியர்கள் உள்ளனர். உலகளவில் இந்தியாவின் பங்களிப்பை நாம் உயர்த்த வேண்டும். உலகை வழிநடத்தக்கூடிய இடத்துக்கு வர வேண்டும்.”இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

error: Content is protected !!