March 22, 2023

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்=பிரதமர் தொடங்கி வைத்த புது திட்டம்!

.இந்தியாவில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை என்று பார்த்தால் 7 சதவீதம் கூட இல்லை. 2018– 19ம் ஆண்டில் 8.45 கோடி பேர் வரி செலுத்தினர். அதற்கு முந்தைய ஆண்டில் வரி செலுத்தியோர், 7.42 கோடி பேர். அரசுக்கு, வரியினங்கள் திட்டமிட்டபடி வசூலானால் மக்கள் நலத்திட்டங்கள் உயிர்பெறும். நாடு வளம் பெறும். ஆனால், ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் நிர்ணயிக்கப்படும் இலக்கு அளவுக்கு வரியினங்கள் வசூலாவதில்லை. பொருளாதார மந்த நிலை, இயற்கை பேரிடர், உலக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால், வரியினங்கள் வசூலாவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.இம்முறை, இந்தியாவுக்கு, கொரோனாவால் நேரடி, மறைமுக வரியினங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கடந்த பிப்ரவரி 1-ந் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘வரி செலுத்துவோர் சாசனம்’ தொடங்கப்படும் என்று அறிவித்தார்.இந்த சாசனம், வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு தொந்தரவுகளை குறைக்கும் என்றும் அவர் கூறினார்.வரி செலுத்துவோர் மதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு-நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பேசியது இதுதான்:

வரி விதிப்பில் செய்யப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரி செலுத்துவோர் அனைத்து துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும். மக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீட்டை குறைக்கும் பெரும் முயற்சி

நேர்மையாளர்களை பெருமை படுத்தும் திட்டம் செப்டம்பர் முதல் அமல்படுத்தப்படும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள். மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்று சேருகின்றன. நேர்மையாக வரி செலுத்துபவர் களை ஊக்குவிப்பது நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். வரி முறையை எளிமைபடுத்துவதன் மூலம் புதிதாக வரி செலுத்துபவர்களை அதிகரிக்க முடியும்.

வரி செலுத்தும் முறை மக்களுக்கு மிக எளிமையானதாக இருக்க வேண்டும். வரி சலுகைக்கு குறுக்கு வழியை பின்பற்றுபவர்கள் முன்னேற்றம் காண முடியாது. நேர்மையாக வரி செலுத்துபவர்கள் மத்திய அரசின் வரி முறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இது இந்தியாவின் புதிய நிர்வாக மாதிரியாகும்”