பிரதமர் மோடியின் குரல் 2 பாயிண்ட் 0 – முழு உரை! ஆடியோ + வீடியோ!

பிரதமர் மோடியின் குரல் 2 பாயிண்ட் 0 – முழு உரை!  ஆடியோ + வீடியோ!

மோடி பிரதமராக பதவியேற்ற நாளிலிருந்து ஒவ்வொரு மாதம் இறுதி ஞாயிற்றுக் கிழமையன்று மன் கீ பாத் உரை நிகழ்த்துவது வழக்கம் ஆகும். அந்த வகையில் மீண்டும் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்றிருக்கும் நரேந்திர மோடியின் 54வது மன் கீ பாத் உரையை இன்று காலை 11 மணிக்கு நிகழ்த்தினார் மோடி.இதன் நேரலையை மக்கள் எப்போதும் போல் தூர்தஷன், அனைத்திந்திய ரேடியோ, மற்றும் நரேந்திர மோடி செயலியில் மக்கள் கேட்டு ரசித்தனர்.

பிரதமர் மோடியின் ரேடியோ பேச்சு முழு விபரம் இதோ:

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரிடையேயும் மனதின் குரல், மக்களின் குரல், மகேசர்களான உங்கள் அனைவரின் குரல் என்ற இனிய தொடரை நாம் இப்போது ஆரம்பிக்க இருக்கிறோம். தேர்தல் பரபரப்பில் மிகவும் ஈடுபட்டு இருந்தேன், ஆனாலும் மனதின் குரல் அளித்த மகிழ்ச்சி இருக்கிறதே, அது கிடைக்க வில்லை. ஏதோ ஒன்று குறைந்தது போல உணர்ந்தேன். நம்மவர்களோடு சேர்ந்தமர்ந்து, இனிமை யான சூழலில், 130 கோடி நாட்டுமக்களின் குடும்ப உறவுகளில் ஒருவனாக, பல விஷயங்களைக் கேட்க முடிந்தது, சில வேளைகளில் நம்முடைய விஷயங்களே கூட, நம்மவர்களுக்கு உத்வேகம் அளிக்க கூடியதாக அமைந்தது. இந்த இடைப்பட்ட காலகட்டம் எப்படி கழிந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.

ஞாயிற்றுக் கிழமை, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை, காலை 11 மணி என்றவுடன், அட, ஏதோ ஒன்று விடுபட்டுப் போய் விட்டதே என்ற உணர்வு எனக்கு மேலோங்கும், உங்களுக்கும் அப்படித் தானே!! கண்டிப்பாக நீங்களும் அப்படித் தான் உணர்ந்திருப்பீர்கள்!! இது உயிரும் உணர்வும் கலந்த பரிமாற்றம் என்றே நான் கருதுகிறேன். இந்த நிகழ்ச்சியில் உயிர்ப்பு உண்டு; அவரவர் மனதில் இது தங்களுடைய நிகழ்ச்சி என்ற உணர்வு உண்டு, அவர்கள் மனதிலே ஒரு பிடிப்பு உண்டு, மனங்களில் பந்தம் உண்டு; இவை அனைத்தின் காரணமாகவும், இடைநடுவே கடந்த காலத்தை சற்றுக் கடினமான காலமாக நான் உணர்ந்தேன். ஒவ்வொரு கணமும் நான் எதையோ இழந்தது போல இருந்தது. ஒரு வெறுமை சூழ்ந்தது. தேர்தல் முடிந்தவுடனேயே உங்களிடையே வந்து விட வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்தேன். ஆனால் அப்போது என்ன தோன்றியது என்றால் – இல்லை இல்லை, அது ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்று கருதினேன். ஆனால் இந்த ஞாயிற்றுக் கிழமை எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருந்தேன். ஒரு வழியாக அந்த நாளும் இன்று வந்தே விட்டது. ஒரு குடும்பச்சூழலில் மனதின் குரலில் சின்னச் சின்ன, இலகுவான, சமூகம், வாழ்க்கை ஆகியவற்றில் மாற்றமேற்படுத்தும் காரணிகளாக ஆகும் விஷயங்களை, ஒரு புதிய உணர்விற்கு உயிர் கொடுக்கும் வகையில், புதிய இந்தியாவின் உணர்விற்கு ஆற்றல் அளிக்கும் வகையில், இந்தத் தொடர் முன்னெடுத்துச் செல்லட்டும்.

ஏராளமான செய்திகள் கடந்த சில மாதங்களில் வந்திருக்கின்றன; மனதின் குரலின் இழப்பைத் தாங்கள் உணர்வதாக அவற்றில் மக்கள் பகிர்ந்து கொண்டிருக் கிறார்கள். இவற்றையெல்லாம் நான் படிக்கும் போதும், கேட்கும் போதும் எனக்கு நன்றாக இருக்கிறது. என் சொந்தங்கள் என்ற உறவு மணக்கிறது. நான் என்பதிலிருந்து நாம் என்பதை நோக்கிய பயணம் இது என்று சில வேளைகளில் எனக்குப்படுகிறது. என்னைப் பொறுத்த மட்டில் உங்களுடனான என்னுடைய இந்த மௌனமான பரிமாற்றம் ஒரு வகையில் என்னுடைய ஆன்மீகப் பயண அனுபவத்தின் ஒரு அங்கமாகவும் இருந்துள்ளது. தேர்தல் பரபரப்புக்கு இடையே ஏன் நான் கேதார்நாத் பயணித்தேன் என்று பலர் என்னிடம் வினா எழுப்பியிருக்கிறார்கள். உங்களுக்கு உரிமை இருக்கிறது, தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறது என்பதையெல்லாம் நான் புரிந்து கொள்கிறேன்; அதே வேளையில் இது தொடர்பான என்னுடைய உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். ஆனால் நான் அந்த திசையில் பயணிக்கத் தொடங்கினேன் என்றால், மனதின் குரலின் போக்கே மாறிப் போகலாம். ஆகையால் தேர்தல் காலப் பரபரப்பு, வெற்றி தோல்வி பற்றிய அனுமானங்கள், வாக்களிப்பு இன்னும் தொடர்ந்த வேளையில் நான் கிளம்பி விட்டேன். பலர் இதில் அரசியல் உட்பொருள் இருப்பதாக கருதுகிறார்கள். என்னைப் பொறுத்த மட்டில், என்னை நான் சந்திக்க ஒரு சந்தர்ப்பமாகவே அதைக் கருதுகிறேன். ஒருவகையில் என்னையே நான் சந்திக்கச் சென்றேன் என்று கொள்ளலாம். மேலும் விஷயங்களை நான் இன்று கூறப் போவதில்லை; ஆனால் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாகச் சொல்லுவேன்…

மனதின் குரலுக்கு இடையே ஏற்பட்ட ஒரு சிறிய இடைவெளி காரணமாக உண்டான வெறுமையை, சற்றே நிரப்பிக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தை கேதார் பள்ளத்தாக்கும், தனிமை நிறைந்த குகையும் எனக்குக் கண்டிப்பாகக் கொடுத்தன. மற்றபடி உங்கள் மனதில் தோன்றியிருக்கும் ஆர்வத்தைப் பற்றியும் ஒரு சமயம் விவாதிப்போம் என்று நினைக்கிறேன். எப்போது செய்வேன் என்று என்னால் கூற முடியவில்லை, ஆனால் கண்டிப்பாகச் செய்வேன், ஏனென்றால் தெரிந்து கொள்ள விரும்புவது உங்கள் உரிமை, தெரிவிப்பது என் கடமை. கேதார் விஷயம் பற்றித் தெரிந்து கொள்ள மக்கள் விருப்பம் தெரிவித்திருப்பது போலவே, ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு வலுசேர்க்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியை, உங்கள் சொற்களில் நான் தொடர்ந்து உணர்ந்து வருகிறேன். மனதின் குரலுக்கு வரும் கடிதங்களில் காணப்படும் உள்ளீடுகள், வாடிக்கையான அரசு அலுவல்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவையாக காணப்படுகின்றன. ஒரு வகையில் உங்களின் கடிதங்கள் எனக்குச் சில வேளைகளில் உத்வேகம் அளிப்பவையாக அமைகின்றன, சில வேளைகளில் சக்திக்கான காரணியாகவும் அமைகின்றன. சில வேளைகளில் என் எண்ண ஓட்டங்களின் இடையே இருக்கும் மடையைத் திறப்பவையாகவும் உங்கள் சொற்கள் இருக்கின்றன. மக்கள், நாடு, சமுதாயம் ஆகியவை எதிர்நோக்கும் சவால்களை முன்வைப்பதோடு, அவற்றுக்கான தீர்வு களையும் அவையே அளித்தும் விடுகின்றன. இந்தக் கடிதங்கள் மக்களின் பிரச்சனைகளை விவரிக்கும் அதே வேளையில், அவற்றுக்கான தீர்வுகள், சிலபல ஆலோசனைகள், ஏதாவது ஒரு கற்பனை ஆகியவற்றை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்தி விடுகின்றன.

ஒருவர் தூய்மை தொடர்பாக எழுதும் போது அவர் தூய்மையின்மைக்கு எதிராகத் தன் கோவத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தூய்மை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் அளிக்கிறார். ஒருவர் சுற்றுச்சூழல் பற்றி விவாதிக்கிறார் என்றால், அதில் அவருடைய வேதனை பிரதிபலிக்கிறது; ஆனால் அதோடு கூடவே, அவர் தான் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் தெரிவிக்கிறார், அவரது மனதில் உதித்த எண்ணங்களையும் அவர் வர்ணிக்கிறார். அதாவது ஒருவகையில் பிரச்சனைகளுக்கான தீர்வு ஒட்டுமொத்த சமூகத்தையும் உள்ளடக்கும் வகையில் எப்படி இருக்க முடியும் என்பது தொடர்பான ஒரு காட்சி அவரது சொற்களில் பளிச்சிடும். மனதின் குரல் நாடு மற்றும் சமூகத்திற்கு ஒரு கண்ணாடி போலச் செயல்படுகிறது. நாட்டுமக்களின் ஆழ்மனங்களில் இருக்கும் உறுதி, ஆற்றல், திறன் ஆகியவற்றில் எந்தக் குறைவும் இல்லை என்பதை இது காட்டுகிறது. அந்த பலங்களையும், திறன்களையும் ஒருங்கிணைப்பதும், அவற்றுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதும், ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுத்து வதும் தான் தேவை. நாட்டின் முன்னேற்றத்தில் 130 கோடி நாட்டு மக்களும் வலுவாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இணைந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பதையும் மனதின் குரல் நமக்குத் தெரிவிக்கிறது.

நான் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக கூறுவேன்… மனதின் குரலுக்கு எனக்கு ஏகப்பட்ட கடிதங்கள் வருகின்றன, ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வருகின்றன, நிறைய செய்திகள் வருகின்றன, ஆனால் குற்றச்சாட்டுக்கள் குறைவாகவே இருக்கின்றன; கடந்த 5 ஆண்டுகளில் எனக்கு இது தேவை, எனக்கு அது கிடைக்கவில்லை என்று தனிப்பட்ட வகையிலான கடிதங்கள் ஏதும் என் கவனத்திற்கு வரவில்லை. ஒருவர் நாட்டின் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார், ஆனால் அவர் தனக்காக எந்த ஒரு விண்ணப்பத்தையும் முன்வைக்கவில்லை என்ற ஒரு நிலையை நீங்கள் கற்பனை செய்து பாருங்களேன்.. தேசத்தின் இப்படிப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகள் எத்தனை உன்னதமானதாக இருக்கும்!! நான் இந்த விஷயங்களை எல்லாம் ஆய்வு செய்யும் போது, எனக்கு எத்தனை ஆனந்தம் ஏற்படுகிறது, என்னுள் எத்தனை உற்சாகம் பிறக்கிறது என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். நீங்களே என்னை இயக்குகிறீர்கள், நீங்களே என்னை துரிதமாக இயங்கச் செய்கிறீர்கள், ஒவ்வொரு கணமும் எனக்குள் உயிர்ப்பினை நீங்கள் தான் ஊட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது.. இந்த உறவு இல்லாமல் தான் நான் தவிப்பில் காத்திருந்தேன். இன்று என் மனம் சந்தோஷங்களால் இட்டு நிரப்பப்பட்டு இருக்கிறது.

நாம் 3-4 மாதங்கள் கழித்து சந்திக்கலாம் என்று நான் கூறிய போது, அதிலும் கூட சில அரசியல் தொனியைக் கண்டதோடு, அட, மோதிஜிக்கு எத்தனை நம்பிக்கை பாருங்கள் என்றார்கள். நம்பிக்கை மோதியுடையது கிடையாது – இந்த நம்பிக்கை, உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. நீங்கள் தான் நம்பிக்கையின் ஊற்றாக விளங்கினீர்கள், இதன் காரணமாகத் தான் இயல்பான வகையிலே, சில மாதங்கள் கழித்து நான் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று எனது கடைசி மனதின் குரலில் நான் கூறியிருந்தேன். உள்ளபடியே நானாக வரவில்லை – நீங்கள் தான் என்னைக் கொண்டு வந்தீர்கள், நீங்களே என்னை அமர வைத்தீர்கள், நீங்களே மீண்டும் ஒருமுறை உரையாடும் சந்தர்ப்பத்தை எனக்கு அளித்திருக்கிறீர்கள். இந்த உணர்வு உள்ளத்தில் பொங்க, உவகையோடு நாம் மனதின் குரல் தொடரை முன்னெடுத்துச் செல்வோம், வாருங்கள்!!

நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட வேளையில், அதற்கு எதிரான போராட்டங்கள் அரசியல் வரையறைகளுக்கோ, அரசியல் தலைவர்களோடு மட்டுமோ நின்று விடவில்லை; சிறைக் கம்பிகளுக்கு இடையேயும் இது சிறைப்பட்டு விடவில்லை. ஒவ்வொரு குடிமகன் மனதிலும் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. தொலைக்கடிக்கப்பட்ட ஜனநாயகத்துக்காக ஒரு துடிப்பு இருந்தது. ஒவ்வொரு நாளும் வேளை தவறாது உணவு உண்ணுகிறோம் என்ற நிலையில் பசி என்றால் என்ன என்று தெரிய வராது. இதைப் போலவே வழக்கமான வாழ்க்கையில் ஜனநாயகம் அளிக்கும் உரிமைகள், அது அளிக்கும் ஆனந்தம் பற்றி எப்போது தெரிய வரும் என்றால், ஒருவர் நமது ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் போது தான். அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில், நாடு முழுவதிலும் இருந்த ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய ஏதோ ஒன்று பறிக்கப்பட்ட தாகவே உணர்ந்தான். அதை அவன் வாழ்க்கையில் பயன்படுத்தியே இல்லாத நிலையிலும், பறிக்கப் பட்ட அந்த ஒன்று ஏற்படுத்திய வலி, அவனது இதயத்தைத் தைத்தது. இந்திய அரசிய லமைப்புச் சட்டம் சில முறைகளை ஏற்படுத்தியிருப்பதன் காரணமாக மட்டுமே ஜனநாயகம் தழைத்திருக்கவில்லை. சமூக அமைப்பை செயல்படுத்த அரசியலமைப்புச் சட்டமும் தேவைப் படுகிறது, சட்டங்கள், விதிகள், முறைகள் ஆகியனவும் தேவைப்படுகின்றன. உரிமைகள்-கடமைகள் ஆகியவை பற்றியும் பேசப்படுகின்றன.

ஆனால் சட்டங்கள், விதிமுறைகள் அனைத்தையும் தாண்டி, ஜனநாயகம் என்பது நமது நற்பண்பு, ஜனநாயகம் நமது கலாச்சாரம், ஜனநாயகம் நமது மரபு. இந்த மரபு காரணமாகவே பாரதம் தழைத்திருக்கும் சமுதாயமாக விளங்குகிறது என்பதை என்னால் மிகுந்த பெருமிதம் பொங்கக் கூற முடியும். இதனாலேயே ஜனநாயகம் இல்லாமையை நாட்டு மக்கள் உணர்ந்தார்கள், அவசரநிலைக் காலத்தில் நாம் இந்த இல்லாமையை அனுபவித்தோம். ஆகையால் நாடு, தனக்காக அல்ல, ஒட்டு மொத்த ஒரு தேர்தலையும் தன் நலனுக்காக அல்ல, ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக அர்ப்பணம் செய்திருந்தது. ஜனநாயகத்தின் பொருட்டு, தங்களது மற்ற உரிமைகளை, அதிகாரங்களை, தேவை களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஜனநாயகத்துக்காக மட்டுமே உலகின் எந்த ஒரு நாட்டில் வசிக்கும் மக்களாவது வாக்களித்தார்கள் என்று சொன்னால், அப்படிப்பட்ட ஒரு தேர்தல் நம் நாட்டிலே 1977ஆம் ஆண்டிலே அரங்கேறியது என்று கூறலாம். தற்போது ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா, மிகப்பெரிய தேர்தல் இயக்கம், நமது தேசத்தில் முழுமை அடைந்தது. வளம் படைத்தோர் முதல் வறியவர் வரை, அனைவரும் இந்தத் திருவிழாவில் உவகையோடு நமது தேசத்தின் எதிர்காலம் பற்றிய முடிவை எடுப்பதில் முனைப்போடு இருந்தார்கள்.

எந்த ஒரு விஷயமோ பொருளோ நம் கைக்கெட்டும் தொலைவில் இருக்கும் போது, அதன் மகத்துவத்தை நாம் குறைவாக மதிப்பீடு செய்து விடுகிறோம், அவற்றின் அற்புதங்களை நாம் புறக்கணித்து விடுகிறோம். விலைமதிப்பில்லாத மக்களாட்சி முறை என்பது நம் கைத்தலப் பொருளாக்கப்பட்டிருக்கிறது; இதை நாம் மிக எளிமையான விளையாட்டுப் பொருளாகவே கருதத் தலைப்படுகிறோம். ஆனால் நமது ஜனநாயகம் மிகவும் மகத்துவம் நிறைந்தது, நமது நாடி நரம்புகளில் எல்லாம் இது விரவிக் கிடக்கிறது – பல நூற்றாண்டுகள் தவத்தால், பல தலை முறைகளின் பண்புகளால், ஒரு விசாலமான பரந்த மனோநிலை காரணமாக இது வாய்த்திருக் கிறது என்பதை நாம் உணர வேண்டும். பாரதநாட்டிலே, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், 61 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை நமக்கு மிகச் சாதாரணமான தாகத் தோன்றலாம் ஆனால், உலகின் கண்ணோட்டத்திலிருந்து சீனாவை நாம் விடுத்துப் பார்த்தோமேயானால், உலகின் எந்த ஒரு நாட்டின் ஜனத்தொகையை விடவும் அதிகமான மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள். எத்தனை வாக்காளர்கள் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார்களோ, அவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கட்தொகையை விடவும் தோராயமாக இரட்டிப்பானது, அது ஒட்டுமொத்த ஐரோப்பாவின் மக்கட்தொகையை விடவும் மிகையானது. இது நமது மக்களாட்சியின் விசாலத்தன்மை மற்றும் பரந்துபட்ட தன்மையை அடையாளம் காட்டுகிறது.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், இதுவரை வரலாற்றில் உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் தேர்தலாக அமைந்துள்ளது. இத்தனை பிரும்மாண்டமான ஒரு தேர்தலை நிர்வகிக்க எத்தனை மகத்தான அளவிலே பொருட்களும், மனிதவளமும் தேவைப்படும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். இலட்சக்கணக்கான ஆசிரியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் என பலர் இரவுபகலாக கடுமையாக உழைத்ததன் பலனாகவே இது சாத்தியமாகி இருக்கிறது. ஜனநாயகத் தின் இந்த மாபெரும் வேள்வியை வெற்றிகரமாக நிறைவேற்றியதில், சுமார் 3 இலட்சம் துணை இராணுவப் படையினர் தங்கள் கடமையை ஆற்றினார்கள், பல்வேறு மாநிலங்களில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தங்கள் உழைப்பை அளித்தார்கள். இவர்கள் அனைவரின் கடுமையான உழைப்பின் காரணமாகவே இந்த முறை, கடந்த முறையை விடவும் அதிகமாக வாக்களிப்பு அரங்கேறியிருக்கிறது. வாக்களிப்பின் பொருட்டு நாடு முழுவதிலும் சுமார் 10 இலட்சம் வாக்குச் சாவடிகள், சுமார் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்களிக்கும் இயந்திரங்கள், 17 இலட்சத்திற்கும் அதிகமான வீவீபேட் கருவிகள்.. ஏற்பாடுகளின் பிரும்மாண்டத்தன்மையை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

எந்த ஒரு வாக்காளருக்கும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காகத் தான் இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டன. அருணாச்சல் பிரதேசத்தின் ஒரு தொலைவான பகுதியில், ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக மட்டுமே ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் அங்கே சென்று சேரவே இரண்டு நாட்கள் பிடித்தன என்பதை அறிந்து உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். இது தான் ஜனநாயகத்துக்கு அளிக்கப்படும் உண்மையான மரியாதை. உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடி இந்தியாவில் தான் அமைந்திருக்கிறது. இந்த வாக்குச்சாவடி ஹிமாச்சல் பிரதேசத்தின் லாஹௌல் ஸ்பிதி என்ற இடத்தில், 15000 அடிகள் உயரத்தில் இருக்கிறது.

இதைத் தவிர பெருமை சேர்க்கும் மேலும் ஒரு விஷயமும் இந்தத் தேர்தலுக்கு உண்டு. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் உற்சாகத்தோடு வாக்கெடுப்பில் பங்கு கொண்டார்கள் என்பதும் கூட, வரலாற்றிலேயே இது முதன்முறையாக இருக்கலாம். இந்தத் தேர்தலில் பெண்கள் மற்றும் ஆண்களின் வாக்களிப்பு வீதம் ஏறத்தாழ இணையாகவே இருந்தது. இது தொடர்பான மேலும் ஒரு உற்சாகமளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று அவையில் சாதனை படைக்கும் வகையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 78 என்ற அளவில் இருக்கிறது. நான் தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தல் வழிமுறையோடு இணைந்த ஒவ்வொரு நபருக்கும், பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; மேலும் இந்தியாவின் விழிப்புணர்வுடைய வாக்காளர்களுக்கு என் வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, பூங்கொத்து அல்ல-புத்தகம் என்று நீங்கள் பலமுறை நான் கூறக் கேட்டிருக்கலாம். வரவேற்புகள்-கௌரவமளித்தல் போன்ற தருணங்களின் போது பூக்களுக்கு பதிலாகப் புத்தகங்களைக் கொடுக்கலாமே என்று நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போதிலிருந்து பல இடங்களில் மக்கள் புத்தகங்களை அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போது ஒருவர் எனக்கு ப்ரேம்சந்த் அவர்களின் பிரபலமான கதைகள் என்ற புத்தகத்தை அளித்திருக்கிறார். எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது. பல நாட்களாகவே நேரம் கிடைக்கவில்லை, ஆனால் அயல்நாட்டுப் பயணம் காரணமாக அவரது சில கதைகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ப்ரேம்சந்த் தனது கதைகளில் சமூகத்தின் யதார்த்த நிலையை வர்ணித்திருக்கிறார். படிக்கும் போது அந்தக் காட்சிகள் ஓவியமாக உங்கள் மனதில் குடியேறத் தொடங்கி விடுகின்றன. அவர் எழுதிய ஒவ்வொரு விஷயமும் உயிர்த்துடிப்போடு விளங்குகின்றன. இயல்பான நடை, எளிமையான மொழி ஆகியவற்றின் மூலம் மனித உணர்வுகளை தூரிகையால் தீட்டும் அவரது சிறுகதைகள் என் மனதையும் வருடின. அவரது சிறுகதைகளில் ஒட்டுமொத்த இந்தியாவின் சாரத்தையும் நாம் காணலாம்.

நான் அவரது ‘நஷா’ என்ற பெயரிலான சிறுகதையைப் படித்துக் கொண்டிருந்த வேளையில், சமூகத்தில் விரவிப் போயிருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் மீது என் கருத்து இயல்பாகவே சென்றது. என் மனதில் எனது இளமைக்கால நாட்கள் நிழலாடின.. எப்படி எல்லாம் இரவு முழுக்க இந்த விஷயம் குறித்து விவாதங்கள் செய்திருக்கிறோம்!! நிலச்சுவான்தாருடைய மகன் ஈசுவரி, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பீர் ஆகியோர் பற்றிய இந்தக் கதை கற்பிக்கும் பாடம் என்ன தெரியுமா? நீங்கள் எச்சரிக்கையோடு இல்லையென்று சொன்னால், கூடாநட்பின் பாதிப்பு எப்போது ஏற்படும் என்பது நமக்குத் தெரியவே வராது. இரண்டாவது சிறுகதை, என் மனதின் ஆழங்களைத் தொட்டது. அதன் பெயர் ‘ஈத்காஹ்’. ஒரு சிறுவனின் கருணையுடன் கூடிய புரிதல், அவனுக்கு அவன் பாட்டியிடம் இருக்கும் தூய்மையான அன்பு, இத்தனை சிறிய வயதில் அவனது பக்குவம் நிறைந்த மனம். 4-5 வயதுடைய ஹாமீத் திருவிழாவிலிருந்து ரொட்டியைப் புரட்டிப் போடும் இடுக்கி ஒன்றை வாங்கிக் கொண்டு தனது பாட்டியிடம் வரும் போது, உண்மையிலேயே மனித உணர்வு சிகரத்தைத் தொடுகிறது. இந்தச் சிறுகதையின் இறுதிப் பத்தி மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கிறது ஏனென்றால், அதில் வாழ்க்கையின் மிகப்பெரிய உண்மை வெளிப்படுகிறது. ‘பாலகன் ஹாமித் வயதான ஹாமிதின் பாத்திரத்தை நடித்திருக்கிறான் – மூதாட்டி அமீனா, சிறுமி அமீனாவாகி விடுகிறாள்’.

இதைப் போலவே நெஞ்சைத் தொடும் ஒரு சிறுகதையின் பெயர் ‘பூஸ் கீ ராத்’. இந்தக் கதையில் ஒரு ஏழை விவசாயியின் வாழ்க்கையில் காணப்படும் ஒரு முரண், உயிரோட்டத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தனது விளைச்சல் நாசமாகிய பிறகும் கூட, ஹல்தூ என்ற விவசாயி ஏன் சந்தோஷமாக இருக்கிறான் என்றால், எலும்பை உருக்கும் குளிரில் அவன் தனது வயலில் உறங்கத் தேவையில்லை என்பதால் தான். ஆனால் இந்தக் கதைகள் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக எழுதப்பட்டவை என்றாலும், இவை இன்றளவும் பொருத்தமானவையாக இருப்பதாக நம்மால் உணர முடிகிறது. இவற்றைப் படித்த பிறகு, நான் அலாதியானதொரு அனுபவத்தை உணர்ந்தேன்.

படிக்கும் விஷயம் பற்றிப் பேச்சு வரும் வேளையில், கேரளத்தில் அக்ஷரா நூலகம் பற்றி ஏதோ ஒரு ஊடகத்தில் வாசித்துக் கொண்டிருந்தேன். இந்த நூலகம் இடுக்கியில் அடர்ந்த காடுகளுக்கு இடையே ஒரு கிராமத்தில் இருக்கிறது என்பதை அறிந்து உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். இங்கே தொடக்கப்பள்ளி ஆசிரியரான பீ. கே முரளீதரனும், சின்னதொரு தேநீர்க் கடை நடத்தி வரும் பீ.வீ. சின்னத்தம்பியும் இணைந்து, இந்த நூலகத்தை நிறுவக் கடினமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். ஒரு சமயம், புத்தகங்களை மூட்டைகளாகக் கட்டிக் கொண்டும், முதுகில் சுமந்து கொண்டும்கூட வந்திருக்கிறார்கள். இன்று இந்த நூலகம் பழங்குடியினத்துப் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்குமே புதியதொரு திசையைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

குஜராத்தின் வாஞ்சே குஜராத் இயக்கம் என்பது வெற்றிகரமான ஒரு முயற்சி. புத்தகங்களைப் படிக்கும் இந்த இயக்கத்தில், அனைத்து வயதினரும் இலட்சக்கணக்கில் பங்கெடுத்துக் கொண்டார்கள். இன்றைய டிஜிட்டல் உலகத்தில், கூகுள் குரு காலகட்டத்தில், உங்கள் தினசரி வாடிக்கைக்கு இடையிலே புத்தகங்களுக்கு கண்டிப்பாக ஒரு இடமளிக்கும் வகையில் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உண்மையிலேயே நீங்கள் இதை மிகவும் ரசிப்பீர்கள் என்பதோடு, நீங்கள் படித்த புத்தகம் பற்றியும் NarendraModi செயலியிலும் எழுதுங்கள், இதனால் மனதின் குரல் நேயர்களும் இதனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, நம் நாட்டுமக்கள் நிகழ்காலத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் வருங்காலத்தில் சவால்களாக உருவெடுக்கக்கூடிய விஷயங்கள் பற்றியும் சிந்திக்கிறார்கள் என்பதை அறிந்து, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. நான் NarendraModi செயலியிலும், Mygovஇலும் நீங்கள் இட்ட கருத்துக்களைப் படித்துக் கொண்டிந்த போது, தண்ணீர் பற்றிப் பலர் எழுதியதை என்னால் கவனிக்க முடிந்தது. பேல்காவீயைச் சேர்ந்த பவன் கௌராயீ, புவனேஸ்வரைச் சேர்ந்த சிதாம்சு மோஹன் பரீதா ஆகியோரைத் தவிர யஷ் ஷர்மா, ஷாஹாப் அல்தாஃப் என இன்னும் பலர் தண்ணீர் தொடர்பான பல சவால்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். தண்ணீருக்கு நமது கலாச்சாரத்தில் மிகப்பெரிய மகத்துவம் உள்ளது. ரிக்வேதத்தின் ஆபஸ்சூக்தத்தில் தண்ணீர் பற்றி இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது –

ஆபோஹிஷ்டா மயோபுவ:, ஸ்தான ஊர்ஜே ததாதன, மஹேரணாய சக்ஷஸே,
யோவ: சிவதமோரஸ:, தஸ்ய பாஜயதேஹந:, உஷதீரிவ மாதர:

आपो हिष्ठा मयो भुवः, स्था न ऊर्जे दधातन, महे रणाय चक्षसे,
यो वः शिवतमो रसः, तस्य भाजयतेह नः, उषतीरिव मातरः |

அதாவது, தண்ணீர் தான் உயிர்கொடுக்கும் சக்தி, ஆற்றல் என்பதை உணர்த்தும் துதி இது. நீர் என்பது தாய்க்கு சமமானது அதாவது தாய்மை என்பது தனது ஆசிகளை நல்கட்டும். தன்னுடைய கருணையை நம்மீது பொழியட்டும். நீர் தட்டுப்பாட்டினால் நாட்டின் பல பாகங்களில் ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பு உண்டாகிறது. ஆண்டு முழுவதிலும் மழை காரணமாக கிடைக்கப்பெறும் நீரின் வெறும் 8 சதவீதம் மட்டுமே நமது தேசத்தில் சேமித்து வைக்க முடியும் என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். வெறும் 8 சதவீதம் தான். ஆகையால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்பட நேரம் கனிந்து விட்டது. நாம் மற்ற பிரச்சனைகளைப் போலவே மக்கள் பங்களிப்பின் துணைக்கொண்டு, மக்கள் சக்தி வாயிலாக, 130 கோடி நாட்டுமக்களின் திறத்தால், ஒத்துழைப்பால், மனவுறுதியால் இந்தச் சங்கடத்துக்கும் தீர்வு காண முடியும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. நீரின் மகத்துவத்தைத் தலையாயதாக கருத்தில் கொண்டு, தேசத்தில் புதிய ஜல்சக்தி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தண்ணீர் தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும், விரைவான கதியில் முடிவுகள் எடுக்க ஏதுவாக இருக்கும். சில நாட்கள் முன்பாக, நான் சில விஷயங்களை வித்தியாசமாகச் செய்யத் தலைப்பட்டேன். நான் தேசத்தின் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும், கிராமத் தலைவர்களுக்கும் ஒரு கடிதம் வரைந்தேன். நீரைச் சேமிக்க, நீரைச் சேகரிக்க, மழைநீரின் ஒவ்வொரு சொட்டையும் பராமரிக்க, அவர்கள் கிராம சபையைக் கூட்டி, கிராமவாசிகளோடு சேர்ந்தமர்ந்து கருத்தாலோசனையில் ஈடுபடலாமே, என்ற வகையில் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அவர்கள் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது, இந்த மாதம் 22ஆம் தேதியன்று, ஆயிரக்கணக்கான பஞ்சாயத்துக்களில், கோடிக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். கிராமந்தோறும் மக்கள் ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க உறுதி பூண்டார்கள், தங்கள் உடலுழைப்பைப் பங்களித்தார்கள்.

இன்று, மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் உங்களுடன் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் பற்றிப் பேச விரும்புகிறேன். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹஸாரீபாக் மாவட்டத்தைச் சேர்ந்த கடகம்ஸாண்டீ வட்டத்திலுள்ள லுபுங்க் பஞ்சாயத்தின் தலைவர் நமக்கெல்லாம் என்ன அற்புதமான செய்தி அளித்திருக்கிறார் என்பதை அவர் கூறக் கேட்கலாம் –

‘என்னுடைய பெயர் திலீப் குமார் ரவிதாஸ். நீரைச் சேமித்து வைக்க பிரதமர் அவர்கள் எங்களுக்குக் கடிதம் எழுதிய போது, நாட்டின் பிரதமர் எங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. நாங்கள் 22ஆம் தேதியன்று கிராமத்து மக்களை ஒன்று திரட்டிய போது, அங்கே பிரதமர் எழுதிய கடிதம் வாசித்துக் காட்டப்பட்டது. இது மக்கள் மனங்களில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி, நீரைச் சேமித்து வைக்க குளத்தைத் தூர் வாரவும், புதிய குளத்தை வெட்ட உடல் உழைப்புப் பங்களிப்பு அளிக்கவும் அனைவரும் தயாராக ஆனார்கள். இந்தத் திட்டத்தை மழைக்கு முன்பாக நாங்கள் செயல்படுத்தினால், எங்களுக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்கவே இருக்காது. சரியான நேரத்தில் எங்கள் பிரதமர் எங்களிடம் இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்தது நல்ல விஷயம்.’

பிர்ஸா முண்டாவின் பூமியில், இயற்கையோடு இசைவாய் வாழ்தலே கலாச்சாரத்தின் அங்கம். அங்கிருக்கும் மக்கள் மீண்டும் ஒருமுறை நீர் சேமிப்புக்காக தங்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நிறைவேற்றத் தயாராகி விட்டார்கள். என் தரப்பிலிருந்து ஆக்கப்பூர்வமான செயலாற்றிய அனைத்து பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும், அனைத்து கிராமத் தலைவர்களுக்கும் என் பலப்பல நல்வாழ்த்துக்கள். நாடு முழுவதிலும் இப்படி நீர் சேமிப்பு என்ற சவாலை மேற்கொண்ட பல தலைவர்கள் இருக்கிறார்கள். ஒருவகையில் இது மொத்த கிராமத்துக்குமே ஒரு சந்தர்ப்பமாக அமைந்திருக்கிறது. கிராமவாசிகள் இனி தங்கள் கிராமத்தில் ஏதோ நீருக்குக் கோயில் எழுப்பும் போட்டியில் ஈடுபடுவது போன்றதொரு உணர்வு என் மனதில் ஏற்படுகிறது. நான் கூறியது போல, சமூக முயற்சிகள் வாயிலாக ஆக்கப்பூர்வமான முடிவுகள் கிடைக்கின்றன. நாடு முழுவதும் தண்ணீர் சங்கடத்தை எதிர்கொள்ள ஒரே வழி என்ற ஒன்று கிடையாது. இதற்காக நாட்டின் பல்வேறு பாகங்களில், வேறுவேறு வழிமுறைகளில், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அனைவரின் இலக்கும் ஒன்று தான், அது நீரைச் சேமிப்பது, நீரைப் பராமரிப்பது.

பஞ்சாபின் கழிவுநீர்க் கால்வாய்கள் சீர் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியால் அடைப்புக்கள் என்ற பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கும். தெலங்கானாவின் திம்மைய்யாபள்ளியில் நீர்த்தொட்டிகள் ஏற்படுத்தப்படுவது காரணமாக, கிராமவாசிகளின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ராஜஸ்தானத்தின் கபீர்தாமில், வயல்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய குளங்கள் காரணமாக, ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நான் தமிழ்நாட்டின் வேலூரில் நடைபெற்ற ஒரு சமூக முயற்சி பற்றிப் படித்துக் கொண்டிருந்த வேளையில், அங்கே நாக நதிக்கு புத்துயிர் கொடுக்கும் பணியில் 20000 பெண்கள் அணிதிரண்டதாக அறிந்தேன். அதே வேளையில் கட்வால் பகுதியின் பெண்களைப் பற்றியும் படித்தேன், இவர்கள் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக மழைநீர் சேகரிப்பு தொடர்பாக அருமையான பணியைச் செய்திருக்கிறார்கள். இவற்றைப் போன்ற பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாம் ஒன்றுபட்டு, உறுதியாக முயற்சிகள் செய்தால், இயலாததை இயல வைக்க இயலும், முடியாததை முடித்துக் காட்ட முடியும். மக்கள் ஒன்று திரளும் போது, தண்ணீர் சேமிக்கப்படும். இன்று மனதின் குரல் வாயிலாக நான் நாட்டு மக்களிடம் 3 வேண்டுகோள்களை முன்வைக்கிறேன்.

என்னுடைய முதல் வேண்டுகோள் – எப்படி நாட்டுமக்கள் தூய்மையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார்களோ, அதைப் போலவே, வாருங்கள், நீர் சேமிப்பு என்பதையும் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் தொடக்கத்தை நாம் மேற்கொள்வோம். நாமனைவரும் ஒன்றாக இணைந்து, ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க உறுதி பூணுவோம். நீர் என்பது இறைவன் அளித்த கொடை, அது ஒரு அற்புதம் பொழியும் ரஸமணி என்பது என் நம்பிக்கை. இந்த ரஸமணி பட்டால் இரும்பு பொன்னாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் நீரே கூட இப்படிப்பட்ட ரஸமணி தான், நீரின் ஸ்பரிசத்தால் புதிய உயிர்கள் உற்பத்தி ஆகின்றன. ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை நாம் ஏற்படுத்த வேண்டும். இதில் நீரோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும்; இது தவிர, நீரைச் சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். குறிப்பாக, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரமுகர்களைக் கொண்டு நீர் சேமிப்பின் பொருட்டு, நூதனமான இயக்கங்களுக்குத் தலைமை தாங்க வேண்டுகோள் விடுக்க வேண்டும். திரையுலகினர் ஆகட்டும், விளையாட்டுத் துறையினராகட்டும், ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்களாகட்டும், சமூக அமைப்புக்களைச் சேர்ந்தவர்களாகட்டும், கலாச்சார அமைப்புக்களைச் சேர்ந்தவர்களாகட்டும், ஆன்மீகப் பேருரைகள் ஹரிகதைகள் செய்பவர்களாகட்டும்… அனைவரும் தத்தமது வழியில் இந்த இயக்கத்திற்குத் தலைமையேற்க வேண்டும். சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், சமூகத்தை ஒருங்கிணைக்க வேண்டும், சமூகத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும் – அப்போது நம்முடைய கண்களின் முன்பேயே மாற்றம் ஏற்படுவதை நாம் கண்குளிரக் காண முடியும்.

நாட்டுமக்களிடம் என்னுடைய இரண்டாவது விண்ணப்பம் இதோ. நம்முடைய தேசத்தில் நீர்ப் பாதுகாப்பிற்காக பல பாரம்பரியமான வழிமுறைகள், பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றன. இந்தப் பாரம்பரியமான வழிமுறைகளை நீங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். உங்களில் யாருக்காவது போர்பந்தரில், வணக்கத்திற்குரிய அண்ணல் பிறந்த இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது என்றால், அண்ணலின் இல்லத்திற்குப் பின்னால் இருக்கும் ஒரு வீட்டில், 200 ஆண்டுகள் பழமையான நீர் சேமிப்புத் தொட்டி ஒன்று இருக்கிறது. இன்றும்கூட அதில் நீர் இருக்கிறது, மழைநீரைச் சேமித்து வைக்கும் முறை இருக்கிறது. ஆகையால் தான், யாரெல்லாம் கீர்த்தி மந்திர் செல்கிறீர்களோ, அவர்கள் கண்டிப்பாக அந்த நீர்த் தொட்டியைப் பார்க்கவும் என்று நான் எப்போதுமே கூறுவதுண்டு. இப்படிப் பலவகையான வழிமுறைகள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.

இப்போது உங்கள் அனைவரிடமும் எனது மூன்றாவது வேண்டுகோள். நீர் சேமிப்புக் கோணத்தில் மகத்துவமான பங்களிப்பு அளித்துவரும் நபர்கள், சுய உதவி அமைப்புக்கள் என, இந்தத் துறையில் பணியாற்றி வரும் ஒவ்வொருவரும், உங்களிடம் இருக்கும் தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்; தண்ணீர் விஷயத்தில் தன்னிறைவு அடைவதில் அர்ப்பணிப்பு உடைய, நீருக்காக ஆக்கப்பூர்வமான பணியாற்றும் அமைப்புகள், நபர்கள் ஆகியோர் அடங்கிய தரவுத்தளங்கள் ஏற்படுத்தப்பட இது ஏதுவாக இருக்கும். வாருங்கள், நாம் தண்ணீர் சேமிப்புடன் இணைந்த நிறைவான பட்டியலை ஏற்படுத்தி, நீர் சேமிப்பில் மக்கள் ஈடுபட உத்வேகம் அளிப்போம். நீங்கள் அனைவரும் #JanShakti4JalShakti# – இதைப் பயன்படுத்தி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நான் மேலும் ஒரு விஷயம் குறித்தும் உங்களுக்கும், உலக மக்களுக்கும் என் நன்றிகளைக் காணிக்கையாக்க விரும்புகிறேன். மிகுந்த உற்சாகத்துடன், ஆக்கப்பூர்வமான உணர்வுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினர் யோகம் பயில்வது என்ற வகையில், ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று மீண்டும் ஒருமுறை யோகக்கலை தினத்தைக் கொண்டாடினார்கள். முழுமையான உடல்நலப் பராமரிப்பு என்ற வகையில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வில், யோகக்கலை தினத்தின் மகத்துவம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொருவரும், உலகின் அனைத்து மூலைகளிலும் யோகக்கலையைப் பயிலும் வேளையில், உதிக்கும் சூரியனுக்கு வரவேற்பு அளித்தார்கள். யோகம் பயிலாத இடமோ நபரோ உலகில் இல்லை என்ற அளவுக்கு யோகக்கலையானது இத்தனை பெரிய வடிவத்தை எடுத்திருக்கிறது. இந்தியாவில், இமயம் தொடங்கி இந்தியக் கடல் வரை, சியாச்சென் தொடங்கி நீர்மூழ்கி வரை, விமானப்படை தொடங்கி விமானம் தாங்கிகள் வரை, ஏசி உடற்பயிற்சிக் கூடங்கள் தொடங்கி தகிக்கும் பாலைவனங்கள் வரை, கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை – எங்கெல்லாம் சாத்தியப்படுமோ, அத்தனை இடங்களிலும் யோகாஸனம் பயிலப்பட்டதோடல்லாமல், இது சமூகரீதியாக கொண்டாடவும்பட்டது.

உலகின் பல நாடுகளின் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், பிரபலங்கள், சாதாரண குடிமக்கள் என பலர், அவரவர் தேசங்களில் எப்படி யோகக்கலை பயிலப்பட்டு வருகிறது என்பதை டிவிட்டர் வாயிலாக எனக்குக் காட்டினார்கள். அன்று, உலகமே ஒரு சந்தோஷமான குடும்பமாகக் காட்சியளித்தது.

ஒரு ஆரோக்கியமான சமூகத்தை நிறுவ, ஆரோக்கியமான, புரிந்துணர்வுடன் கூடிய நபர்கள் தேவை என்பதை நாம் அறிவோம், யோகக்கலை இதை உறுதி செய்கிறது. ஆகையால் யோகம் பற்றிய பரப்புரைகள் சமூகசேவையின் ஒரு மகத்தான பணி. இப்படிப்பட்ட சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கௌரவப்படுத்த வேண்டும் இல்லையா? 2019ஆம் ஆண்டு, யோகக்கலையின் முன்னெடுப்புக்கும் மேம்பாட்டுக்கும் மிகச்சிறப்பான பங்களிப்பு அளித்தமைக்காக, பிரதம மந்திரி விருதுகளுக்கான அறிவிப்பைச் செய்தது எனக்கு மட்டற்ற உவகையை அளித்தது. இந்த விருது உலகம் முழுவதிலும் யோகக்கலையின் பரப்புதலுக்காக மகத்துவம் நிறைந்த பங்களிப்பு அளித்த அமைப்புக்களுக்கு அளிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ‘ஜப்பான் யோக நிகேதனம்’ அமைப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இவர்கள் யோகக்கலையை, ஒட்டுமொத்த ஜப்பானிலும், மக்களின் விருப்பமாக மாற்றியிருக்கிறார்கள். ஜப்பான் யோக நிகேதனம் அங்கே பல கழகங்களையும், பயிற்சிப் படிப்புக்களையும் நடத்துகிறது; இதே போல இத்தாலியைச் சேர்ந்த Ms. Antonietta Rozzi அவர்களையே எடுத்துக் கொள்வோமே!! இவர் ‘சர்வயோக இண்டர்நேஷனல்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஐரோப்பா முழுவதிலும் யோகக்கலையைப் பரப்புவதில் ஈடுபட்டார். இவர் கருத்தூக்கம் அளிக்கவல்ல ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். யோகக்கலை தொடர்புடைய விஷயம் என்று வரும் போது, பாரதம் பின் தங்கியிருக்குமா சொல்லுங்கள்!! முங்கேரில் உள்ள பிஹார் யோக வித்யாலயத்திற்கும் கௌரவமளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பு, பல பத்தாண்டுகளாக யோகக் கலையின் பொருட்டு தன்னையே அர்ப்பணித்திருக்கிறது. இதைப் போலவே ஸ்வாமீ ராஜரிஷி முனி அவர்களும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இவர் life mission மற்றும் lakulish yoga பல்கலைக்கழகத்தை நிறுவியிருக்கிறார். யோகக்கலை பரவலாகக் கொண்டாடப்பட வேண்டும், யோகக்கலை அளிக்கும் செய்தியினை அனைத்து இல்லங்களுக்கும் கொண்டு சேர்ப்பவர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட வேண்டும் என்ற இவையிரண்டும், யோகக்கலை தினத்திற்குச் சிறப்பு சேர்ந்திருக்கின்றன.

என் மனம் நிறை நாட்டுமக்களே, நமது இந்தப் பயணம் இன்று தொடங்கி இருக்கிறது. புதிய உணர்வு, புதிய அனுபவங்கள், புதிய உறுதி, புதிய திறம்.. ஆம், எப்போதும் போல உங்கள் ஆலோசனைகள்-கருத்துக்களுக்குக் காத்திருப்பு. உங்கள் கருத்துக்களோடு இணைவது எனக்கு மிக மகத்துவம் வாய்ந்த ஒரு பயணம். மனதின் குரல் என்பது ஒரு சந்தர்ப்பம் மாத்திரமே. நாமனைவரும் அடிக்கடி சந்திப்போம், உரையாடி மகிழ்வோம். உங்கள் உணர்வுகளை நான் செவி மடுக்கிறேன், சேகரிக்கிறேன், புரிந்து கொள்கிறேன். சில வேளைகளில் அந்த உணர்வுகளுக்கு ஏற்ப வாழவும் முயல்கிறேன். உங்கள் ஆசிகள் தொடரட்டும். நீங்கள் தான் என் கருத்தூக்கங்கள், நீங்களே எனக்கு சக்தி அளிப்பவர்கள். வாருங்கள் நாமனைவருமாக இணைந்து, மனதின் குரலை அனுபவிப்போம், வாழ்க்கையில் நமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவோம். மீண்டும் ஒருமுறை அடுத்த மாத மனதின் குரலில் மறுபடியும் சந்திப்போம். உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள். வணக்கம்.

Related Posts

error: Content is protected !!