நானும் காவலாளிதான் : தேசத்துக்கு என் சேவைதான் தேவை! – மோடி பேச்சு!

சோஷியல் மீடியாவில் என்னதான் கழுவி ஊற்றினாலும் இப்போது நானும் காவலாளி தான் என்ற தலைப்பில் பிரதமர் மோடி காணொலியில் தொண்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தேசத்திற்கு தேவை காவலாளிகளே தவிர மகாராஜாக்கள் அல்ல. காவலாளியாக எனது கடமையைச் செய்கிறேன். குறுகிய மனப்பாங்குடையவர்களே என்னை விமர்சிக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டெல்லி டல்கோட்ரா மைதானத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க தொண்டர்களுடன் `நானும் காவலாளிதான்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரை யாடினார். இதற்காக நாடு முழுவதும் 500 இடங்களில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பா.ஜ.க-வின் பல்வேறு தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் இருந்து பங்கேற்றனர்.

அதிகாரத்தில் இருந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு பிரஸ் மீட் கூட வைக்காத பிரதமர் பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடிய போது, எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலளித்தார். அப்போது ராகுல் காந்தி கொண்டு வர இருக்கும் குறைந்தபட்ச வருமான உத்தரவு தொடர்பாக பேசிய போது “நேரு காலத்தில் இருந்து இதையே தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள். வறுமையை ஒழிக்கும் ஸ்லோகன்கள் தான் அதிகமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் முதல் பிரதமரான நேரு முதல்முறையாக வறுமையை ஒழிக்க வேண்டும் என்று பேசத் துவங்கினார். அதன் பின்பு அவருடைய மகள் வறுமையோடு ஸ்லோகனையும் கொண்டு வந்தார். அவருடைய மகனும் அதையே தான் செய்தான் செய்தார். வறுமையும் வளர்ந்தது ஸ்லோகனும் வளர்ந்தது. அவருடைய மனைவி 10 வருடங்கள் நாட்டை ஆண்டார். அவரும் அதைத் தான் சொல்கின்றார். அவருடைய மகனும் அதைத்தான் சொல்கின்றார்.

பொய் வாக்குறுதிகளை நம்பாதீர்கள். சிலருக்குத் தெரியும் அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று. முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் வாக்காளர்கள், எதிர்கட்சியினர் கடந்து வந்த பாதையை கவனியுங்கள். அவர்கள் திரும்பத் திரும்ப அவர்கள் பேசும் ரெக்கார்ட் செய்யப்பட்ட வாக்குறுதிகளை நம்பாதீர்கள் என்றும் அவர் பேசினார்.

மேலும் பாலாக்கோட் விமானத் தாக்குதலை நடத்தியது ராணுவ வீரர்கள்தானே தவிர தாம் அல்ல என பிரதமர் கூறினார். தாக்குதல் நடந்த இடத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக சர்வதேச பிரதிநிதி களை, பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை என்று பிரதமர் கூறினார்.

தாக்குதலை ஒப்புக்கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளியாக பாகிஸ்தான் தவிப்பதாக விமர்சித்தார். மேலும் சகிப்புத்தன்மையற்றவர் என்ற விமர்சனங்களுக்கு கடந்த காலங்களில் தேர்தல் முடிவுகள் பதிலளித்ததாகவும் பிரதமர் கூறினார்.

மல்லயா, நீரவ் மோடி உள்ளிட்ட தொழிலதிபர்கள் கடன் ஏய்ப்பு செய்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மோடி, இந்த நாட்டை கொள்ளை அடித்தவர்கள் அனைவரும் நிச்சயமாக ஒரு பைசா கூட மிச்சம் வைக்காமல் இந்த நாட்டிற்கு திருப்பித் தருவார்கள். 2014 முதல் 2019 வரை நான் சில நபர்களை சிறையில் அடைக்க போதுமான முயற்சிகள் மேற்கொண்டேன். உங்களின் ஆசி இருந்தால் நிச்சயமாக அதனை வருகின்ற வருடங்களில் செய்து முடிப்பேன். இந்த நாட்டை கொள்ளையடிப்பவர்களிடம் இனி மிகவும் கடுமையாக நடந்து கொள்வேன் என்று தெரிவித்தார்.