December 4, 2021

கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக செல்லவில்லை!- மோடி எச்சரிக்கை!

கொரோனா லாக்டவுன் தொடங்கிய பின்னர் பிரதமர் மோடி இதுவரை 6 முறை நாட்டு மக்களிடம் உரையாற்றி விட்டார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 7வது முறையாக மீண்டும் மக்களிடம் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் என்ன அதிரடி அறிவிப்பை வெளியிடப் போகிறாரோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் உரை நிகழ்வை கேள்விப்பட்டு, “சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும் என்ற தேதியை நாட்டு மக்களிடம் பிரதமர் அறிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, அறிவித்தபடி சரியாக 6 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற தொடங்கினார். அதில், “ஊரடங்கு முடிந்து பொருளாதாரம் பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. இதேபோல் கொரோனா இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குணம் அடைவோர் விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது. எனினும் கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக செல்லவில்லை என்பதை மக்கள் உணரவேண்டும்.

கொரோனா சிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன. நாடு முழுவதும் பரிசோதனைக்கு 2,000 ஆய்வகங்களும், பல லட்சம் சிகிச்சை மையங்களும் உள்ளன. கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

உலக அளவில் மற்ற நாடுகளைவிட கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் மிகக் குறைவு. கொரோனா ஒழிந்து விட்டதாக எண்ணி மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது; ஊரடங்கு முடியலாம் ஆனால் கொரோனாவின் தாக்கம் நீடிக்கும். கொரோனாவுக்கு எதிரான இந்தியா வின் போராட்டம் தொடர்கிறது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. விரைவில் தடுப்பூசி கிடைக்கும்.

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம். திருவிழாக் காலங்களில் வியாபாரம் மெதுவாக சூடு பிடிக்கிறது. பல்வேறு தேவைகளுக்காக மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் வைரஸ் என்பது முற்றிலுமாக அழிந்து விடவில்லை. பண்டிகை காலத்தை முன்னிட்டு நாம் அனைவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப் பேசினார்.