August 16, 2022

கேதார்நாத் குகையில் மோடி நீண்ட தியானம்: அப்படி என்ன ஸ்பெஷல்?

பஞ்ச பாண்டவர்களால் 3000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பின்னர் எட்டாம் நூற்றாண்டில் இந்திய தேசத்தில் வாழ்ந்த ஆகப்பெரிய ஆன்மீக குருவான ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரால் புனர மைக்கப்பட்ட பெருமை வாய்ந்த கோயிலான் கேதார்நாத் குகையில் பிரதமர் நரேந்திர மோடி தியானத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை காலை வரை அவர் தியானத்தில் இருப்பார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

பார்லிமெண்ட் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடை பெறு கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி வெளியாகின்றன. தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று காலை கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.
கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்வது இது 4வது முறையாகும். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி கேதார்நாத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதன்பின் பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் குகைக்கு பிரதமர் மோடி 2 கிலோமீட்டர் நடை பயணமாக சென்றார். அங்கு காவி உடை அணிந்து தியானத்தில் ஈடுபட்டார். குகையில் மோடி தியானம் செய்யும் புகைப்படங்களுடன் அவர் அங்கு நாளை காலை வரை தியானத்தில் இருப்பார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

அது சரி.. இந்த கேதார்நாத் கோயில் மகிமை என்ன?

‘கேதார்நாத் கோயில்’ இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோயில்களுள் ஒன்றாகும். இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் ‘மந்தாகினி’ ஆற்றங் கரைக்கு அருகில் உள்ள கார்வால் இமயமலைத் தொடரின் அடியில் அமைந்துள்ளது. இக்கோயில் பனிபடர்ந்த மலைகளும் பனியாறுகளும் சூழ்ந்த பீடபூமி மீது அமைந்துள்ளது.

இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் உகிமத் என்னும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு செய்யப் படுகின்றன.இக்கோயிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும்.

இந்தியாவிலுள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் கேதார்நாத்தில் 3584மீ உயரத்தில் அமைந்து இருக்கும் இந்த ஜோதிர்லிங்கம் முக்கியமான ஒன்றாகும்.இது திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். கேதார்நாத் பதிகம் கேதார கௌரியம்மை உடனுறை கேதார நாதர் என்றே தமிழ் ஆன்மீகம் கேதார்நாத் சிவனை வழிபடுகிறது.திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே கேதார்நாத்தை வழிபாடு செய்ததாக அவர்தம் பாடல்கள் கூறுகின்றன.

இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது. இக்கோயில் எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரரின் வருகைக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது. வடக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆக இமையத்திலுள்ள தெஹரிகர்வால் மலைத்தொடரின் வழியில் உள்ள இந்தக் கோயிலில் பத்ரி நாராயணர் (மகாவிஷ்ணு ) மூர்த்தி ஸ்வரூபமாக காட்சி தருகிறார் . புத்தர் காலத்தில் இந்த பத்ரி நாராயணர் சிலை நாரதர் குளத்தில் வீசப்பட்டது . பல வருடங்களாகக் குளத்தடியில் கிடந்த இந்த மூர்த்தியை ஆதிசங்கரர் கண்டெடுத்து பத்ரிநாத் கோவிலை அமைத்து மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தார் என்று வரலாறு சொல்லுகிறது . இரண்டு அடி உயரத்தைக் கொண்ட கருங்கல்லால் செதுக்கப்பட்ட பத்ரி நாராயணர் பத்மாசன கோலத்தில் தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் வீற்றிருக்கிறார்.

இக்கோயில் ஒரு கல் கோயில் ஆகும். கோயிலுக்குள் நுழைந்ததும் பாண்டவர்கள், கிருஷ்ணர், கருவறைக்கு எதிரே சிவ பெருமானின் வாகனமான நந்தி தேவர், சிவபெருமானின் காவலாளியான வீரபத்திரர், திரௌபதி போன்றோரது சிலைகளைக் காணலாம். கோயில் கருவறையினுள் முக்கோண வடிவில் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இக்கோயிலின் முகப்பு மேற்சுவரில் ஒரு மனிதனின் தலை செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதே போன்ற அமைப்பு, கேதார்நாத்திற்கு அருகில் உள்ள, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த கோயிலிலும் உள்ளது. ஆதி சங்கரர் இக்கோயிலோடு சேர்த்து உத்தரா கண்டில் உள்ள பல கோயில்களை புனரமைத்தார். கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.

மேலும் இக்கோயில் இங்கே உருவானதின் பின்னணியில் சுவாரஸ்யமான கதை ஒன்று சொல்லப் படுகிறது. மகாபாரத யுத்தத்தில் தமது உறவினர்களான கௌரவர்களையும், குரு தேவரான துரோணர் மற்றும் பாட்டனாரான பீஷ்மர் ஆகியோரை வதைத்த பாண்டவர்கள் அந்த பாவத்தில் இருந்து விமோச்சனம் பெற சிவபெருமானின் தரிசனம் இமய மலைக்கு வருகின்றனர். இங்கே அவர்களை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒரு எருதாக மாறி பாண்டவர்களை அலைக் கழிக்கிறார். ஒருகட்டத்தில் துரத்தி சென்று எருதாக உள்ள சிவபெருமானை பீமன் அடித்து விடுகிறார்.

அப்படி பீமன் அடித்த பிறகு எருது மறைந்து ஒளி வெள்ளத்தின் ஊடாக சிவபெருமான் தோன்றி பாண்டவர்களுக்கு காட்சி தருகிறார். அவர்களின் பாவங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்த சிவபெருமான் ‘தான் இந்த இடத்திலேயே ஜோதிர்லிங்கமாக வீற்றிருந்து என்னை தரிசிக்க வரும் பக்தர்களை அவர்களின் பாவங்களில் இருந்து விமோச்சனம் அளிப்பேன்’ என்று கூறியதாக புராண குறிப்புகள் இருக்கின்றன.

இப்படியாப்பட்ட கேதார்நாத் குகைக்கோயிலுக்குத்தான் மோடி சென்றார். தியானத்தில் ஈடுபட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றுள்ளனர். தற்போது அங்குள்ள பனிக்குகையில் மோடி, நாளை காலை வரை தியானத்தில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது. அவர் தியானம் மேற் கொள்ளும் குகையில் பெட் மற்றும் தலையணை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.