பத்திரிகை சுதந்திரத்தை விட மக்கள் நலன் முக்கியம்! – வெங்கய்ய நாயுடு சொல்கிறார்

பத்திரிகை சுதந்திரத்தை விட மக்கள் நலன் முக்கியம்! – வெங்கய்ய நாயுடு சொல்கிறார்

முதலில் நாம் இந்த நாட்டின் குடிமக்கள், அதன் பிறகுதான் பத்திரிகையாளர் என்பதை உணர்ந்து ஊடகத் துறையினர் செயல்பட வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார். பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது, ராணுவத்தினர் மேற்கொண்ட பாதுகாப்பு உத்திகளை, விதிகளை மீறி ஒளிபரப்பியதாக என்டிடிவி இந்தியா செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்புக்கு மத்திய அரசு ஒருநாள் தடை விதித்தது. இதற்கு எதிர்க்கட்சிகளும், பல்வேறு ஊடகங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

press nov 7

இந்நிலையில், ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை உருது பத்திரிகையாளர் நிகழ்ச்சியில் பங்கேற்ற வெங்கய்ய நாயுடு “நாட்டில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டுமென்று தேசிய அளவில் இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பத்திரிகை சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்பதில் அரசும் உறுதியாக உள்ளது. முதலில் நாம் இந்த நாட்டின் குடிமக்கள், அதன் பிறகுதான் பத்திரிகையாளர் என்பதை உணர்ந்து ஊடகத் துறையினர் செயல்பட வேண்டும். இதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. தங்களுக்கு அளிப்பட்டுள்ள சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்து பொறுப்புணர்வுடன் ஊடகத்துறையினர் செயல்பட வேண்டும்.

பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பு தேசத்தின் நலனையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். செய்தியுடன் தனிப்பட்ட கருத்துகளையும் சேர்த்து வெளியிடக் கூடாது. மக்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையிலோ, இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கிலோ, காழ்ப்புணர்வைத் தூண்டும் வகையிலோ செய்திகளை வெளியிடக் கூடாது. இந்த விஷயத்தில் ஊடகத்துறையினருக்கு சுயகட்டுப்பாடு மிகவும் அவசியம்.

ஏதாவது ஒரு தகவல் கிடைத்ததும் அதனை செய்தியாகத் தரக்கூடாது. எதையும் உறுதி செய்த பிறகுதான் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். பரபரப்பாக எதையாவது கூற வேண்டும் என்று செயல்படக் கூடாது. உண்மைத்தன்மையுடன்தான் செய்திகள் இருக்க வேண்டும். ஆனால், இப்போது செய்தித் தொலைக்காட்சிச் சேனல்கள் பெரும்பாலானவை பரபரப்பான செய்திகளை வெளிடுவதில்தான் ஆர்வம் காட்டுகின்றன. ஊடகங்களுக்கு என்று உள்ள விதிகளை மீறக்கூடாது. சரியான செய்திகளை வெளியிடுவதுதான் ஊடகங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும். ஆனால், இப்போது பெரும்பாலான ஊடகங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவது துரதிருஷ்டவசமானது” என்றார் வெங்கய்ய நாயுடு.

Related Posts

error: Content is protected !!