November 27, 2022

குடியரசுத் தலைவர் – கொஞ்சம் ரிமைண்டர் ரிப்போர்ட்!

குடியரசு தலைவருக்குரிய அதிகாரங்கள் பற்றி இந்த தலைவருக்கான தேர்தல் நடக்கும் போது மட்டும் நம்மவர்கள் கொஞ்சம் மேலோட்டமாக பேசுவது வாடிக்கை. அப்போதெல்லாம் பலரின் கருத்து இந்த போஸ்ட் வெறும் ட்ம்மி பீஸ்தானே..வெறும் ரப்பர் ஸ்டாம்ப்தானே … நாடு விட்டு நாடு டூர் மட்டும் போறவ்ர்தானே என்றுதான் இருக்கிறது  அதே சமயம் பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையைப் பின்பற்றுகின்ற நாடாளுமன்ற ஜனநாயக நாடு இந்தியா. அமெரிக்கா, பிரான்ஸைப் போல நேரடித் தேர்தலின்றி, இங்கு மறைமுகத் தேர்தலின் மூலமாகவே குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப் படுகிறார். அவரது அதிகாரம் ‘இருக்கு.. ஆனா இல்லை’ ரகம். சர்ச்சைகளுக்கும் குறைவில்லாத பதவி இது.

ஐந்து ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ. ஐந்து லாட்சம் ஊதியத்துடன் வசதியான வாழ்க்கை, சிம்லா, ஹைதராபாத்தில் அரண்மனை போன்ற பங்களாக்கள் போன்ற சகல வசதிகளுடன், முப்படைகளின் தளபதி, நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பாதுகாவலர், முதல் குடிமகன் எனப் பல பெருமை.படைத்த இவர்தான் பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர். எனினும், பிரதமர் தலைமையில் இருக்கின்ற அமைச்சரவை வழங்குகின்ற ஆலோசனையின் பேரில்தான் அவர் இயங்குகிறார். அப்படிதான் இயங்க வேண்டும் என்று நம் சட்டம் வழிகாட்டியுள்ளது

பல நேரங்களில் நிலையற்ற அரசுகள் மத்தியில் அமையும்போது இந்த குடியரசுத் தலைவரின் பங்களிப்பு முக்கியமாகக் கருதப்படுகிற்து.

குடியரசுத் தலைவர் மாளிகை போன்று 2 லட்சம் சதுர அடி கொண்ட வசிப்பிடமும், மொகல் தோட்டத்துடன் 13 ஏக்கர் பரப்பளவுள்ள இருப்பிடமும் உலகில் எந்த நாட்டின் அதிபருக்கும் கிடையாது. (அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில்கூட 132 அறைகள்தான் உள்ளன.)

ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் மாளிகையின் 350 அறைகளில் ஒரேயொரு அறையைத்தான் பயன்படுத்தினார். இவ்வளவு வசதிகளையும் பெறப் போகும் புதிய குடியரசுத் தலைவர் யார் என்பது இன்றைய தனிக் கேள்வி.

தேர்தல் சதுரங்கத்தில் வென்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் குடியேறப் போகும் அந்த பெருமைமிக்கவர், நாட்டின் நலனையும் பன்மையில் ஒருமையான இந்தியாவையும் தொலைநோக்கோடு கொண்டு செல்ல வேண்டியதுதான் அன்றிலிருந்து இன்றைய நாள் வரையிலான தேவை. இது வரை தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜியும் அப்துல் கலாமும் மட்டுமே பதவியிலிருந்து வெளியேறும்போது தங்களுடைய உடைமைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வராதவர்கள் என்பதன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தவர்களாக இருந்தார்கள்.

எனினும் சர்ச்சையில் சிக்காத அல்லது பிரச்னையை ஏற்படுத்தாத ஜனாதிபதிகளே இல்லை எனலாம். கூடவே பல குடியரசுத் தலைவரகள் முதல் தர குடிமகனாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்ளதான் வேண்டும்

சாம்பிளுக்கு நம் நாட்டில் நடந்த சில நிகழ்வுகளை நினைவூட்டுகிறோம்

பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்றவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளே குடியரசுத் தலைவர் என்பவர் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்பதைத் தெரிவிக்கின்றன. ஆம்..  நாடு விடுதலை பெற்ற பின் குடியரசுத் தலைவருக்கு அதிகாரமா, பிரதமருக்கு அதிகாரமா என்ற சர்ச்சை வெளிப்படையாகவே எழுந்தது. குடியரசுத் தலைவருக்கே உச்சபட்ச அதிகாரங்கள் உள்ளன என்று 18.09.51-ல் நேருவுக்குக் கடிதம் எழுதினார் ராஜேந்திர பிரசாத். ஏற்கெனவே, அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளையெல்லாம் எப்படி நான் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்வியையும் 21.03.1950-ல் அவர் எழுப்பியிருந்தார். நேருவுக்கும் ராஜேந்திர பிரசாதுக்குமிடையே இத்தகைய சர்ச்சைகள் தொடர்ந்தன. ‘இந்து மதச் சீர்திருத்தச் சட்டம்’ தொடர்பாக இருவரிடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. டெல்லியில், ‘இந்திய சட்ட நிறுவன’த்தின் தொடக்க விழாவில் இதுகுறித்து குடியரசுத் தலைவர் கடுமையாகப் பேசியதுண்டு. ‘சர்ச்சைக்குரிய சோம்நாத் கோயிலுக்குச் செல்வதைக் குடியரசுத் தலைவர் தவிர்க்க வேண்டும்’ என்று நேரு கடுமையான குறிப்புகளை ராஜேந்திர பிரசாத்துக்கு அனுப்பியதும் உண்டு. இந்தியக் குடியரசுத் தலைவர் மதச்சார்பின்மையின் உதாரணமாகத் திகழ வேண்டும் என்பது நேருவின் விருப்பம். அங்கு குடியரசுத் தலைவராக அல்ல, சாதாரண பிரஜையாகத்தான் செல்ல வேண்டும் என்பது அவரின் எண்ணம்.

இப்படியாக குடியரசுத் தலைவர் – பிரதமர் அதிகார வரம்புகளைக் குறித்த பிரச்சினை உச்ச நீதிமன்றம் வரை சென்று, இந்திய தலைமை வழக்கறிஞர் செட்டுல்வார்டு சட்ட ஆலோசனைகளை வழங்கியதும் உண்டு. விடுதலை பெற்றவுடன் தொடக்கத்திலேயே இப்படியான பனிப் போர் ஏற்பட்டது. டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, 1962 சீனப் போர் பிரச்சினையிலும், பாதுகாப்பு வாகனங்கள் கொள்முதலில் நடந்த ஊழல் விவகாரத்திலும் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனனைப் பதவி விலக வேண்டுமென்று நேருவிடம் நேரடியாக வலியுறுத்தினார். இதன் விளைவாக, குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையே மனவருத்தங்கள் ஏற்பட்டன. தூக்குத் தண்டனைக் கைதிகள் விவகாரத்தில் கருணை மனுக்களைத் தினமும் பெற்று உடனுக்குடன் ராதாகிருஷ்ணன் பைசல் செய்ததை நேரு விரும்பவில்லை.

டாக்டர் இராதாகிருஷ்ணனும் இந்திரா காந்தியும் பொறுப்பில் இருந்த பொழுது கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. பின் வந்த கல்வியாளர் ஜாகீர் உசேன் இரு ஆண்டுகளே பொறுப்பிலிருந்து மறைந்துவிட்டார்.

1969 இல் நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து நின்ற வி.வி. கிரி வெற்றி பெற முழு முயற்சிகளை இந்திரா காந்தி மேற்கொண்டார் அப்போதுதான் அரசியல்வாதிகளிடையே மனச்சாட்சி படி ஓட்டு போடும் முறை அறிமுகமானது. இந்திரா கடாட்சத்தால் முதன் முதலாக இரண்டாவது விருப்ப வாக்குகள் என்ற அடிப்படையில் கிரி வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது.

கிரிக்குப் பின் இந்திரா காந்தியின் விருப்பத்தின் பேரில் பதவிக்கு வந்தார் பக்ருதீன் அலி அகமது. அவர் காலத்தில்தான் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். உரிமைகள் மறுக்கப்பட்டன.

ஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் பதவிக்கு வந்த சஞ்சீவ ரெட்டி, பிரதமரான மொரார்ஜி தேசாய்க்கு விரோதமாகச் செயல்பட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது.

ரெட்டிக்குப் பின் ஜெயில்சிங். இவர் காலத்தில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு, ராஜீவ் காந்தி பிரதமரானார். இவருக்கும் ராஜீவ் காந்திக்கும் அஞ்சல் துறை மசோதா – 1986 தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டது.

ஜெயில்சிங்குக்கு ராஜீவ் அரசு தெரிவிக்க வேண்டிய அரசு பரிபாலனம் சம்பந்தமான செய்திகளைத் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தை ராஜீவ் காந்தி மீறிவிட்டார் என்றும் மோதல்கள் நடந்தன.

ராஜீவ் மீது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு, ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சியினர் ஜெயில்சிங்கிடம் வழங்கிய மனு நிலுவையில் இருந்தபோது, பிரதமர் ராஜீவை ஜெயில்சிங் நீக்குவார் என்ற வதந்திகள் எழுந்தன.

சீக்கியரான ஜெயில்சிங் 1984 இல் நடைபெற்ற சீக்கிய கலவரங்களை ஒட்டி அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டது ராஜீவ் காந்திக்குப் பிடிக்கவில்லை.

ஜெயில்சிங்குக்குப் பின் ஆர். வெங்கடராமன். இவர் காலத்தில்தான் வி.பி. சிங்கின் கூட்டணி அமைச்சரவை அமைந்ததும் கவிழ்ந்ததும். அப்போது தேசிய அரசு அமைக்கலாமா என்ற விவாதங்களும் எழுந்தன. இவர் காலத்தில் சந்திரசேகர் தலைமையிலான குறுகிய கால அரசாங்கம், “அதர்வைஸ்’ என்ற சொல்லைக் கொண்டு பிரிவு 356-ஐ பயன்படுத்தித் தமிழகத்தில் திமுக அரசைக் கலைக்கச் செய்தது.

ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து நரசிம்மராவ் பிரதமர் ஆனார். புதிய பொருளாதாரத் திட்டங்களுக்கு அடிகோலப்பட்டது. சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் எனப் பொறுப்புக்கு வந்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்ம ராவ் ஆட்சியைக் கண்டித்தார் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா.

பீகார், உத்தரப்பிரதேச அரசுகளைக் கலைக்கும் வாஜ்பாய் அரசின் தீர்மானங்களைத் திருப்பி அனுப்பினார் கே.ஆர். நாராயணன்

பின்னர் வந்த அப்துல் கலாம் தன்னிடம் வந்த எல்லா ஃபைல்களிலும் கையெழுத்து போட்டதில்லை. பல கோப்புகளை திருப்பித் திருப்பி அனுப்பி விளக்கம் கேட்பார்.

இது போன்ற எந்த குழப்பபமும் இல்லாமல் சொன்ன அல்லது நீட்டிய கோப்புகளில் சைன் வைத்த பெருமை முதல் பெண் குடியரசியாக இருந்த பிரதீபாவுக்கு மட்டுமே உண்டு.

மற்றப்ப்டி உலக சுற்றுப் பயணம் மேற்கொள்வது ஒரு ரோபோவின் டிராவல் என்றுதான் கூற வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திலும் எப்படி யாரை பார்க்கணும் – விஷ் பண்ணணும் – ஸ்மைல் பண்ணனும் என்பதை இந்திய அதிகாரிகள் பக்காவாக சார்ட் போட்டு கொடுத்து விடுவார்கள். அவ்ர்கள் டியூன் பண்ணியது போலதான் போய் வரமுடியும்

இப்போது சொல்லுங்கள்…  இந்திய ஜனாதிபதி –

வெறும் ரப்பர் ஸ்டாம்ப்?

அல்லது டம்மி பீஸ்?. ஸ்ட்ராங்க் பர்சனாலிட்டி..?

அல்லது அட..?\

நிலவளம் ரெங்கராஜன்