October 20, 2021

இந்தியா அரசாங்கத்துக்கு சொந்தமானது அல்ல! ஜனாதிபதியின் சுதந்திர தின உரை!

இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நாட்டின் 72வது சுதந்திர தினத்தை ஒட்டி 2018, ஆகஸ்ட் 14ம் தேதி இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி புனிதநாளாகும், இந்த நாளில், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள், ராணுவ வீரர்களை நாம் நினைவுகூற வேண்டும்” என்றும் கல்வி, பணிகளில் பெண்கள் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை தேவை. பெண்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பெண்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி உரையின் சுருக்கமான விவரம் இதோ :

உலகிலேயே மிக சிறந்த மந்திரம் அகிம்சையாகும். நீங்கள் ஓங்கி அடிப்பதற்கு செலவிடுகிற சக்தியை விட உங்கள் கையை கட்டுப்படுத்துவதற்கு செலவிடும் சக்தி மகத்தானதாகும். நம்முடைய சமூகத்தில் பெண்கள் விரும்புகிற வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்கும் தங்கள் திறன்களை குறைந்தபட்சம் உயர்த்துவதற்கும் முழு உரிமை உள்ளது.

நமது சமூகம் ஒரு திருப்புமுனையில் உள்ளது நீண்ட நாட்களாக நாம் எதிர்பார்த்து கொண்டிருந்த பல லட்சியங்கள் கைகூடும் நேரம் நெருங்குகிறது. எல்லோருக்கும் மின்சாரம், திறந்தவெளியில் மல ஜலம் கழித்தலை தவிர்த்தல், அனைவருக்கும் வசிப்பதற்கு வீடு, மிக கொடிய வறுமையை ஒழித்தல் ஆகியவற்றை நாம் அடைய இருக்கிறோம்.

இந்த நேரத்தில் தீராத சர்ச்சைகள் சம்பந்தமில்லாத விவாதங்களை நாம் தவிர்க்க வேண்டும் அவை நமது கவனத்தை திசை திருப்ப அனுமதிக்க கூடாது. நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்ய நமக்கு உரிய நேரம் வரும்வரை நாம் வரிசையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். இதன் மூலம் மற்றவர்களின் உரிமைகளை மதிக்கும் பண்பை பெறுவோம். இத்தகைய நடைமுறைகள் நம்முடைய வாழ்க்கை முறையாகும் போது நாம் நம்முடைய சுதந்திர போராட்ட கால லட்சியத்தை பின்பற்றுகிறவர்களாக உயர்வோம்.

இது ஒரு சிறு விஷயம் தான். ஆனால் இதனை கடைபிடிக்க நாம் முயற்சிப்போம். நமது சமூகத்தின் அங்கமாக உள்ள விவசாயிகள் ராணுவத்தினர் போலீஸ் படையினர் தங்கள் துறைகளை ஒட்டுமொத்த சமூகத்திற்காக பாடுபடுகிறார்கள்.
தன்னுடைய கடமையை ஈடுபாட்டோடும் முழு கவனத்தோடும் நிறைவேற்றுகிற ஒவ்வொரு இந்தியர்களும் சுதந்திர போராட்ட கால லட்சியங்களை பின்பற்றுகிறவர் என்றே கூறலாம்.

நாடு இன்று எடுக்கும் முடிவுகள் பொருளாதார அரங்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நாம் எங்கே இருப்போம் என்பதை தீர்மானிக்க உதவும். நமது வளர்ச்சி வீதம் மிகவும் அபாரமானது. பாராட்டுக்குரியது. இதனை அரசும் சமூகமும் இணைந்து நிறைவேற்றுகின்றன. சமூகத்தில் அதிர்ஷ்டசாலியாக இல்லாதவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை தேடி தருவதுதான் இந்திய சிந்தனையின் சாரம்சமாகும்.

இந்திய சுதந்திர தினம் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டு மிகவும் முக்கியத் துவம் வாய்ந்தது. ஏனென்றால் அடுத்த சில வாரங்களில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தை கொண்டாட இருக்கிறோம். மகாத்மா காந்தி உலகெங்கும் காந்திஜி என்றே அழைக்கப் படுகிறார். இந்தியாவின் பரிமாணம் அவர்.

சுதேசி பற்றி உற்சாகத்துடன் பேசிய மகாத்மா ஒருபோதும் நாம் பூட்டிய கதவுக்குள் வாழ வேண்டும் என்று கூறியதில்லை. அவருடைய சுதேசி கண்ணோட்டம் இதுதான். இன்று நமக்கு பொருந்து கிறது. காந்தியின் லட்சியங்களை குறைந்தபட்சம் தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இதுவே நாம் நம் சுதந்திரத்தையும் இந்தியரின் மாண்பையும் கொண்டாடும் முறையாகும்.

கல்வியின் பயன் டிகிரியோ டிப்ளமோ இல்லை. அருகில் உள்ள அடுத்தவரின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவதே கல்வியாகும். இதுதான் இந்திய பண்பு. இந்தியா, இந்திய மக்கள் அனை வருக்கும் சொந்தமானது. அரசாங்கத்துக்கு சொந்தமானது அல்ல. இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.