September 20, 2021

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு : ஜனாதிபதி ஒப்புதல்

அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதி ஏழைகளுக்கு (பொது பிரிவினர்) 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதாவுக்கு  ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

நம் நாட்டில் உயர் சாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இப்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. எனவே, உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால் அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதன்படி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா 2019-ஐ முதலில் மக்களவையில் தாக்கல் செய்தார்.

அதாவது அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளின்படி சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. எனவே, இதில் திருத்தம் செய்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது.

காரசாரமாகவும் ,களேபரமாகவும் நடந்து முடிந்த விவாதத்திற்கு பின்னர் இந்த பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் மக்களவையில் மட்டுமின்றி மாநிலங்களையிலும் நிறைவேறியது.

இதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் நேற்று முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. இதைதொடர்ந்து, அவரது ஓப்புதலுடன் இதற்கான இந்திய அரசின் அரசிதழ் அறிவிக்கையும் (Gazette Notification) வெளியானது.