January 26, 2022

பாசிட்டிவ் வைப்ரேசன் கொடுக்கும் பவர் பாண்டி !- தனுஷ் மகிழ்ச்சி

படு பிஸியான நாயகன், தயாரிப்பாளர், பாடகர், என பல துறைகளில் அவதாரமெடுத்த தனுஷ் தற்போது இயக்குநராக களமிறங்கியுள்ளார். ராஜ் கிரண் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. ரேவதி, திவ்யதர்ஷினி, பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் இன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 60 வயதுடைய ராஜ்கிரண் வாழ்கையில் எழும் காதல், பாசம், கோபம் போன்றவற்றை கதைக்களமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். டிரைலரின் முடிவில் ‘இனிமேல் தான் ஆட்டமே இருக்கு’ எனும் வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குனர் தனுஷ், “உலகத்தில நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. மனிதர்களுக்குள்ளும் நல்லது இருக்கு. கெட்டதும் இருக்கு. அன்பும் இருக்கு. வெறுப்பும் இருக்கு. எதை தேர்வு செய்கிறோம். எது நமக்கு வேண்டும்? எதை தேர்ந்தெடுக்க வேண்டும்? எதை நோக்கி போகவேண்டும் என்பது நம் கையில் தான் இருக்கு.நம் வாழ்க்கையிலும் அப்படிதான். அப்படி நம் வாழ்க்கையில் சுற்றி இருக்கும் அன்பு, நிம்மதி,பாசம் என்ற பாசிட்டிவான விஷயத்தை எடுத்துக்கிட்டா நிம்மதியா இருக்கலாம்.

ராஜ் கிரண் சார் இந்த படத்திற்கு ஒரு ஆசிர்வாதம். எங்க குடும்பத்தின் டிராவல் ராஜ்கிரண் நடித்த மாயாண்டியில் தான் ஆரம்பம். பாலுமகேந்திரா சொல்லுவார். ஒரு படம் தனக்கு எதை வேண்டுமோ அதை தானே தேடிக்கொள்ளும் என்பார்.ராஜ்கிரண் உள்ள வந்தார்.அவரின் சிரிப்பு, அரவணைப்பு, அன்பு இந்த படத்திற்கு தேவையானதை தேடிக்கொடுத்தது. இந்த படம் முழுக்க முழுக்க பாசிட்டிவ் வைபிரேசன் இருக்க காரணம் ராஜ் கிரண் சார் தான்.

ஒரு இசையமைப்பாளருடன் உட்கார்ந்தா, ஏதாவது சொல்லிட்டே இருப்பேன். சும்ம்மாவ்வே இருக்கமாட்டேன். ஷான் ரோல்டன்கிட்ட ஒரு சத்தமில்லாத இசை கேட்டுச்சு.சந்தோசத்தை அது கொடுத்தது. சத்தமில்லாத இசை இல்லாமல் போகணும்ன்னு முடிவு பண்ணோம்.நம் மண்ணுக்கான சத்தம் கொண்டுவந்தோம்.நம்ம அடையாளமான இசையை திருப்பி கேட்கணும்ன்னு நினைச்சோம். பிஜிஎம் போடும்போது, பண்ணிட்டு கூப்பிடறேன்னார். போய் பார்த்தேன். கூட உட்கார்ந்து எவ்வளவு இன்சல்ட் பண்ணி இருக்கோம்ன்னு அப்பதான் புரிஞ்சது. நான் இசைக்கடலேன்னு கூப்பிடுவேன். ஒரு கடலுக்குள் இருக்கும் முத்துக்கள் போல அவரிடம் எல்லாம் இருக்கு. இயக்குனர் உட்கார்ந்து அவரிடம் வாங்கணும்.பவர் பாண்டி யின் ஆத்மா இசைதான். அது சரியாய் வந்திருக்கு.”என்றார்

படத்தின் நாயகன் ராஜ்கிரண் (பவர்பாண்டி) பேசுகையில்,“27வருடத்திற்கு முன் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா என்னை கதா நாயகனாக அறிமுகப்படுத்தினார். இன்று மீண்டும் அவரது மகன் மற்றும் என் இயக்குனர் தனுஷ் என்னை கதா நாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். இத்தனை வருட காலம் இருந்த ராஜ்கிரனை முற்றிலும் மாற்றி புதிய ராஜ்கிரனை காட்டியுள்ளார். இப்படியொரு கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு தனுஷிற்கும் என்னுடன் இணைந்து பணியாற்றிய என் குடும்பத்திற்கும் (குழுவிற்கும்) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

படத்தில் நடித்த பிரசன்னா பேசுகையில், “ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையில் மட்டுமே இப்படத்தில் நடித்தேன்.முதலில் இப்படத்தில் நடிக்க தயங்கிய நான், தனுஷிடம் கதை கேட்டது முதல் அவருடன் வேலை செய்த எல்லா தருணங்களிலும் மிகப்பெரிய ஆச்சரியத்தை அடைந்தேன். மிகவும் திறமையான நடிகர் தனுஷ் தற்போது ஒரு இயக்குனராக உருவெடுத்து அதில் என்னை நடிக்க வைத்ததற்கு நன்றியை கூறிக் கொள்கிறேன். மேலும் என் இத்தனை வருட திரையுலகில் இப்படத்தை என் தந்தைக்காக அர்ப்பணிக்கிறேன்.” என்று கூறினார்.