வீடு தேடி வரும் வாக்குப் பெட்டிகள்! – தபால் வாக்குகள் சேகரிப்பு ஆரம்பம்!
நம் இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் வாக்கு பெட்டியுடன் சென்று தபால் வாக்குப்பதிவை பெற்றனர்.
கொரோனா தொற்று காலத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதால், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு போடும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது. இந்த புதிய நடைமுறை மூலம் வயதானவர்கள் தங்கள் வாக்கினை வீடுகளில் இருந்தே பதிவு செய்யலாம். வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு விருப்பம் உள்ள முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. 12 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட விண்ணப்பித்து இருந்தனர். அதனை ஆய்வு செய்தததில் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 7,300 பேர் மட்டுமே தபால் ஓட்டு போடுவதற்கு இறுதி செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தபால் ஓட்டுப்பதிவை மேற்கொள்ள 70 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவும் தினமும் 15 வீடுகளுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு செய்வார்கள்.
இந்த குழுக்களில் உள்ளவர்கள் தபால் ஓட்டுக்காக எந்தெந்த வாக்காளர் வீட்டுக்கு செல்ல உள்ளது என்பது பற்றி வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இதனால் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு இன்று நடந்தது. தபால் ஓட்டுகளை பதிவு செய்யும் பணிக்காக நியமிக்கப்பட்ட குழுவில் தேர்தல் அலுவலர்கள், நுண் பார்வையாளர், வீடியோ பதிவாளர், காவலர் என 5 பேர் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்கு தனி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் வாக்காளர் வீட்டிற்கு சென்று வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து பின்னர் வாக்குசீட்டு வழங்கினார்கள்.
தபால் ஓட்டு போடக்கூடிய முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்பதிவு செய்வதை யாரும் பார்க்காத வகையில் மறைமுக வசதி செய்யப்பட்டிருந்தது. தபால் வாக்களிக்க உள்ளவர்கள் பார்வையற்றவராகவோ, தங்கள் வாக்கை செலுத்த முடியாத நிலையில் இருந்தால் அவருக்கு உதவி செய்ய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தபால் ஓட்டு போடுவதற்கு வருகிற 30-ந் தேதி வரை 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த நாளில், எந்த வாக்காளர் வீட்டிற்கு செல்வது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். முதல்நாள் வாக்காளர் வீட்டில் இல்லையென்றால் மீண்டும் ஒரு தடவை 2-வது முறை அலுவலர்கள் வீட்டிற்கு வருவார்கள். அப்போதும் வாக்காளர்கள் வீட்டில் இல்லையென்றால் அவர்களது ஓட்டு நிராகரிக்கப்படும். இப்படி நிராகரிக்கப்பட்ட வயதான வாக்காளர்கள் ஏப்ரல் 6-ந் தேதி வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டளிக்க முடியாது. தபால் வாக்காளர்களிடம் ஓட்டுப்பதிவு செய்த பிறகு ஓட்டு பெட்டியினை பாதுகாப்பாக தேர்தல் அதிகாரிகள் தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவந்து அதில் உள்ள ஓட்டுகளை தினமும் எண்ணி பதிவு செய்வார்கள். இந்த தகவல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒவ்வொரு நாளும் மாலையில் தெரிவிக்கப்படும்