April 17, 2021

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஒன்று குளிர்காலத்தில் ஏற்படலாம்!

இன்னும் ஓரிரு மாதத்தில் வர இருக்கும் குளிர்காலத்தில் இரண்டாவது கொரோனா வைரஸ் தொற்று அலை இந்தியாவைத் தாக்கக்கூடும். நாம் விழிப்புணர்வுடன் தடுப்பு நடவடிக்கைகளை அலட்சியம் செய்யாமல் கவனத்துடன் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் இதுவரை நாம் பெற்ற வெற்றி எல்லாம் கரைந்து போகும் என்று நிதி ஆயோக் உறுப்பினரும் கோவிட் -19 தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு தலைவருமான டாக்டர் வினோத் கே. பால் எச்சரிக்கை செய்தார்.

டாக்டர் வினோத் கே. பால் நிதி ஆயோக் உறுப்பினராக சேரும் முன்பு எய்ம்ஸ் மருத்துவ மனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.குடும்ப நலத்துறையில் குழந்தைகளின் நலனைக் காப்பாற்ற சிறப்பாக பணியாற்றியதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

கோவிட்-19 வைரஸ் பரவுவது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இரண்டாவது கரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.

அவரது பேட்டி விவரம்:

கடந்த மூன்று வார காலத்தில் பல மாநிலங்களில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்காமல் கட்டுக்குள் வந்து உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஒன்று குளிர்காலத்தில் ஏற்படாது என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாது.

இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் 4 யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

குளிர்கால வருகையையொட்டி ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலையாக மீண்டும் அதிகரித்து இருப்பதை காண முடிகிறது.

இந்தியாவில் இன்னும் 90 சதவீத மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது .

எனவே, இந்தியாவிலும் கரோனா வைரஸ் இரண்டாவது தொற்று ஏற்படாது என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாது. எதுவும் நடக்கலாம். அந்த வைரஸை பற்றி நாம் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆகையால் பண்டிகை காலத்திலும் வட இந்தியாவில் குளிர்காலத்திலும் சில பகுதிகளில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கக்கூடும்.

நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அடுத்து வருகின்ற மாதங்கள் நமக்கு சவாலாக அமையக் கூடும் நாம் இதுவரை பெற்ற லாபம் எல்லாம் கரைந்து போகக் கூடும். எனவே கொஞ்சம்கூட அலட்சியம் நமக்கு இருக்கக்கூடாது. கொரோனா வைரஸ் தொற்றுக்கள் குறைந்து வருகிறது என்ற எண்ணம் நமக்கு அலட்சியத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் கொஞ்சம்கூடத் தளர்த்த கூடாது.

நாம் கவனமாக இல்லாவிட்டால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தளர்த்தாமல் பின் பற்றாவிட்டால், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடவுள் நமக்கு உதவுவார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலையைத் நாம் தவிர்க்க முடியும் என்று டாக்டர் வினோத் கே. பால் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது நம்முடைய கையில் தான் உள்ளது. இரண்டாவது அலை வரப்போகிறதா அல்லது நாம் தடுக்கப் போகிறோமா என்பது நம்முடைய கரங்களில்தான் உள்ளது என்பதை நாம் மறக்கக்கூடாது எனவும் டாக்டர் பால் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து பற்றிய கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.

தடுப்பூசி மருந்து பற்றிய சோதனைகளில் வெற்றி கிடைத்ததும் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் பற்றி நமக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைப்பதற்கு தேவையான திறன் நம்மிடம் உள்ளது. அந்த திறனை விரைவில்நாம் இன்னும் அதிகரிக்கவும் முடியும்.

தடுப்பூசி மருந்துக்கு போதுமான நிதி ஆதாரங்கள் நமக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். நம்முடைய குடிமக்களுக்கு தடுப்பூசி மருந்து வழங்குவதற்கு குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை என்றும் டாக்டர் வினோத் கே. பால் குறிப்பிட்டார்.

இந்தியாவில் குளிர்காலம் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி முடிய 3 மாத காலம் என்று கணக்கிடப்படுகிறது.