March 22, 2023

சினிமாவை இன்னும் விலை குறைவாக பார்த்து ரசிக்க வழி பிறந்துடுச்சு!

‘பொன்மகள் வந்தாள்’ என்ற சினிமாவை குறித்து எனது வியாபார மற்றும் வளர்ச்சி குறித்த பார்வை!…. பட விமர்சனம் அல்ல! இந்த சினிமா எப்படி இருந்தது என்பது அல்ல. ஆனால் இந்தப்படம் எப்படி இந்த தமிழ் சினிமா வியாபாரத்தில் ஒரு முன்னோடியாக இருக்கப்போகிறது என்பதை விளக்கும் விதமாகத்தான் இந்த பதிவைப் பதிவிடுகிறேன். இந்த படம் வெளியிடு வதற்கு முன்பு பலவிதமான சர்ச்சைகளைக் கிளப்பியது. எப்படி இந்தப் படம் நேரடியாக தியேட்டரில் வெளியிடாமல், நேராக அமேசானில் வெளியிடலாம் என்பது போன்ற பல விதமான கருத்துகள் வெளியிடப்பட்டன.

தியேட்டரில்தான் சென்று படம் பார்க்க வேண்டும் என்கின்ற ஒரு எழுதப்படாத நியதியை அனைவரும் கடைப்பிடிப்பதால், இந்த தியேட்டர் சம்பந்தப்பட்ட பலரும் இதை மிகவும் எதிர்த்தார்கள். எனக்கு தெரிந்து யாரோ கோர்ட்டுக்கும் போனார்கள் என்றுகூட தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் சரி இந்த இந்தப் படம் ஒரு புதிய வியாபார அனுபவத்தை, அணுகுமுறையைத் தோற்றுவித்துள்ளது.

தியேட்டர் என்பது என்ன?

ஒரு 200 250 பேர் இருக்கைகளில் அமர்ந்து ஒரு காட்சியை பார்ப்பார்கள். ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் அல்லது ஐந்து காட்சிகள் வரை இருக்கும். அதில் வசூலாகும் பணத்தை விநியோகஸ்தர்கள் தியேட்டர்காரர்கள் என்று பங்கு போட்டுக் கொள்வார்கள். இப்படித்தான் இருந்தது இந்த ஒரு பிசினஸ்

சரி! தியேட்டர் என்பது முதலில் ரீல் ஃபிலிம் பதிவுகளைப் பெற்று ப்ரொஜெக்டரில் மாட்டி ஒளிபரப்பினார்கள். பின்பு டிஜிட்டல் யுகம் வந்ததும் சிடி வடிவில் கிடைத்த பதிவுகளை வைத்து ஒளுபரப்பிச் செய்தார்கள்…. தற்கால டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் நேரடியாக ஆன் லைனிலேயே அந்த படத்தை அவர்கள் காட்டிவிட முடியும். இப்படி தியேட்டர்களுக்கு விஞ்ஞான வளர்ச்சிகள் வந்தபோது அதை சுலபமாக அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். காரணம் அவர்களுக்கு சௌகரியமாக இருந்தது. ஆனால் வியாபாரம் என்று வரும் போது நேரடியாக அமேசான் போன்ற தலங்களுக்கு விற்பதில் இவர்களுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. காரணம் இவர்கள் கட்டியிருக்கும் தியேட்டர்களில் லாபம் வரப்போவது இல்லை என்பதாகத்தான் இருக்கும்!

தியேட்டர் உள்ளே பாப்கான் நூற்றைம்பது ரூபாய்க்கும் ஒரு தண்ணீர் பாட்டில் 100 ரூபாய்க்கும் விற்று அதிக லாபம் சம்பாதித்த இதே தியேட்டர் அதிபர்கள் தான் இன்றைக்கு கூக்குரலிடுகிறார் கள்! அவர்கள் அந்த விலையை கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் தலையில் கட்டினார்கள். இப்போது அமேசான் போன்ற தளங்களில் படங்கள் ரிலீசாவது என்பது மக்களுக்கு கிடைத்த மகா உன்னதமான ஒரு சுதந்திரம்! வீட்டில் கால் நீட்டியபடியே பார்க்கலாம். எப்போது வேண்டுமென்றாலும் படத்தை பாஸ் செய்து விட்டு உச்சா போய்விட்டு வரலாம். அல்லது இன்னைக்கு பார்ப்பதை நிறுத்திவிட்டு நாளைக்கு மீண்டும் தொடர்ந்து பார்க்கலாம்.

இப்படி நம்முடைய சௌகர்யத்திற்கு எத்தனை நேரம் வேண்டுமானாலும், ஒரே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் நாம் பார்த்துக் கொள்ளலாம்! நம்முடைய நேரத்தை அனுசரித்து படம் பார்க்கலாம்! எத்தனையோ சௌகர்யங்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து படம் பார்ப்பதற்கு! இந்த மாதிரி ஒரு நிலைமை வருவதற்காகத்தான் இத்தனை நாளும் நாம் காத்திருந்தோம் என்று புரிந்து புரிந்து கொள்ளலாம்!

அதைவிட முக்கியமாக ஆயிரம் ரூபாய்க்கு வருட சந்தா கட்டினால் கிட்டத்தட்ட 5000 சினிமா வரை பார்க்க கூடிய வாய்ப்புகள் அருமையாக இருக்கின்றது!….

எது வேண்டும் எது வேண்டாம் என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம். என்னைப் பொறுத்த வரை சிறிய பட்ஜெட் படங்களை செய்பவர்கள் அனைவருக்கும் இது போல நேரடியாக அமேசான் போன்ற வலைதளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும் என்று தோன்றுகிறது! சிறு பட்ஜெட் படங்கள் என்றாலே தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும் ஒதுக்கி விட்ட காலம் போய் இப்போது அவர்களை கெஞ்ச வேண்டிய நிலையும் உருவாகி உள்ளது விஞ்ஞானம் இந்த என்றும் சொல்லலாம்.

‘பொன்மகள் வந்தாள்’ படம் எப்படி இருக்கின்றது என்று நான் சொல்லப்போவதில்லை! அதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் இதற்கு அச்சாரம் முதல் முதலாக போட்ட அந்த குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்! காரணம் சினிமாவை இன்னும் விலை குறைவாக பார்த்து ரசிக்க ஒரு வழி செய்து முதல் முதலில் இந்த பூனைக்கு மணி கட்டிய அந்த குடும்பத்தாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!