December 2, 2022

பொன்மகள் வந்தாள் – விமர்சனம்!

இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டிருந்த ஒரு தகவல்படி, கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 124 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 26 சதவீதம் அதிகம். அதாவது, 2018-ம் ஆண்டில், ‘போக்சோ’ சட்டத்தின்கீழ், 36 ஆயிரத்து 208 குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் புகார் செய்யப்பட்டன. 2019-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 260 ஆக உயர்ந்தது.2019-ம் ஆண்டில், 27 ஆயிரத்து 305 குழந்தை கற்பழிப்பு சம்பவங்கள் புகார் அளிக்கப்பட்டன.

இது ஒரு பக்கம் இருக்கட்டும் ..

நம் தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் மாயமாகி கண்டுபிடிக்க முடியாதவர்கள் 15,702 பேர். கடந்த ஐந்து ஆண்டுகளில் 431 கொலை வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. ஐந்து ஆண்டுகளில் 17,033 திருட்டு குற்றங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேற்படி இரண்டு நிஜமான விஷயங்களுக்கும் முடிச்சு போட்டு ஒரு கற்பனையான கதை, திரைக்கதையை உருவாக்கி அப்படி ஒரு வழக்கை புதுசாக விசாரித்து முடித்து வைக்க புது ட்ராக்கை உருவாக்கினால் எப்படி இருக்கும்? – அதுதான் இந்த பொன்மகள் வந்தாள் படம்..!

அதாவது கதை என்னவென்றால் 2004ல் நடந்த ஒரு என்கவுண்டர் கொலைக்கு பின்னால் உண்மையை அறிந்துகொள்ளும் நோக்கில் ஒரு வழக்கை தூசித் தட்டி கையில் எடுக்கிறார் வழக்கறிஞர் வெண்பா (ஜோதிகா). அதற்கு நம்மூர் டிராஃபிக் ராமசாமி மாதிரியான அப்பா கேரக்டரில் வரும் பெட்டிஷன் பெத்துராஜ் (பாக்யராஜ்) பின்புலமாக இருக்கிறார். அதாவது ஏதோ அல்லது யாரோ கொடுத்த ஃபிரஷரால் போலீசாரால் ஜோடிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கை வெண்பா-வாகிய ஜோதிகா எடுத்து வாதாடுவது ஏன்? குற்றம் நடந்தது..உண்மை என்ன? என்பதை அடுத்தடுத்து எதிர்பாரா ட்விட்ஸ்-களைக் கொண்டு சொல்லி சொல்வது தான் பொன்மகள் வந்தாள்.

வெண்பா, ஜோதி என்று டபுள் ரோலில் நடித்திருக்கும் ஜோதிகா தன்னால் என்ன முடியுமோ அதை வழங்கி இருக்கிறார். . ஆனாலும் வழக்கறிஞர் வேடம் தரித்ததால் வழக்கமான ஓவர் ஆக்டிங்கை கருப்பு கவுனுக்குள் மறைத்து லைட்டான நடிப்பை வெளிக் காட்டும் ஜோதிகா, வன் கொடுமைக்கு ஆளாகும் பெண் குழந்தைகளின் வலியை சகலரும் உணரும்படி நடித்து இருக்கிறார். முத்தாய்ப்பாக தியாகராஜனை தூண்டிவிட்டு, அவரின் வாயாலே பல உண்மையை வெளிக் கொண்டு வரும் காட்சியில் ஜோதிகா ஜ்வாலை வீசுகிறது..

பிரதாப் கே.போத்தன், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் என்று ஐம்பெரும் இயக்குநர்களை ஒரே படத்தில் காண்பதே ஹேப்பியாக இருக்கிறது. இதில் பாக்யராஜ் தன் வழக்கமான கேரக்டரில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்.

ராம்ஜியின் கேமராவும், கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது. ரூபனின் எடிட் -டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பெண் குழந்தையை இன்னாரிடம் இப்படி பேச வேண்டும், இப்படி உடை உடுத்த வேண்டும் என சொல்லிக் கொடுக்கும் குடும்பங்கள், ஆண் குழந்தைகளுக்கும் பெண்ணை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை பலமாக வலியுறுத்தி இருப்பது பாராட்டத்தக்க விஷயம். கூடவே “justice delayed is justice denied” என்ற சொலவடையை நினைவூட்டியிருக்கும் இந்த பொன்மகள் வந்தாள் படத்தை பார்ப்பதால் வீட்டில் உள்ள குழந்தை (அது ஆணோ, பெண்ணோ)களுக்கும் நல்வழி கிடைக்கும் என்பதுதான் ஹைலைட்.

மார்க் 3 / 5

முக்கிய  செய்தி : இப் பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைமில் நேரடியாக இன்று (மே 29) வெளியாகியுள்ளது. படத்தை பார்க்க www.primevideo.com என்ற தளத்திற்கு மட்டும் செல்லவும்.