March 27, 2023

விவசாயத்தை மறக்காத வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன்!

நம்ம பக்கத்து மாநிலமான புதுச்சேரி மாநிலத்தின் வேளாண்மைதுறை அமைச்சராக இருப்பவர் கமலக்கண்ணன். இவருடைய சொந்த ஊர் திருநள்ளாறு அருகே உள்ள அம்பகரத்தூர் கிராமம். ஒரிஜினல் விவசாய குடும்பத்தை சேர்ந்த கமலக்கண்ணன், அமைச்சரான பின்னும் தனது வயலை உழுவது, நாற்று நடுவது, உரம் தெளிப்பது உள்ளிட்ட பணிகளை பார்வையிட செல்வதை வழக்க மாக கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அமைச்சர் கமலக்கண்ணன், தனது சொந்த கிராமமான அம்பகரத்தூரில் உள்ள வயலுக்கு சம்பா நடவு பணிகளை பார்வையிட சென்றார். அப்போது வயல் சரிவர உழவு செய்யப்படாமல் மேடு, பள்ளங்களாக காட்சி அளித்தது. இதை பொருட்படுத் தாமல் தொழிலாளர்கள் நாற்று நடுவதற்கு தயாரானார்கள்.

இதை பார்த்த அமைச்சர் நிலத்தை சரிவர உழுது சமன் செய்யாமல் நடவு நட்டால் பயிர் நன்றாக வளராது என கூறி, தொழிலாளர்களுடன் வயலை உழும் பணியில் ஈடுபட்டார். அப்போது சரிவர உழவு செய்யப்படாத இடங்களை மண்வெட்டியால் சமன்படுத்தினார்.உழும் பணி முடிவடைந்ததும் அமைச்சர், நாற்றுகளை வயலுக்கு கொண்டு வந்து தொழிலாளர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். இதனிடையே புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் விவசாயியை போன்று வயலில் இறங்கி வேலை செய்தா புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக பரவி வருகிறது.

அதையொட்டி இவரை ஆளுநர் கிரண் பேடி ட்விட்டரில் பாராட்டியுள்ளார். “வேளாண்துறை அமைச்சர் பொறுப்பில் தகுதியுள்ள சரியான ஒருவர் இருகிறார்” என கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேளாண்துறை அமைச்சர் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், அவர்கள் அனைவரும் விவசாயிகளை போன்று விவசாய நிலங்களில் இறங்கி வேலை செய்வார்களா?. அப்படி ஒரு வேளாண்துறை அமைச்சரை நாம் காண்பது மிக பெரிய விஷயம்தன் இல்லையா?.