March 22, 2023

புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா!- நாராயணசாமி பேட்டி!

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பெரும் பான்மையை இழந்ததால் கவிழ்ந்தது. முதலமைச்சர் நாராயணசாமி துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் ராஜினாமா கடிதம் அளித்தார்.இதுவரை ஆதரவு தந்த கட்சிகள், எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றதால் ஆட்சிகள் கவிழ்ந்துள்ளன. இம்முறை சொந்தக் கட்சியில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழ்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் 2016ல் 15 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சரவையில் இருந்த 2 அமைச்சர்கள் மட்டுமின்றி 2 எம்எல்ஏக்களும் தங்களது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தனர். ஏற்கனவே ஒரு எம்எல்ஏ ஆளுங்கட்சியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசுக்கான ஆதரவு 14ஆக இருந்தது.

எதிர்க்கட்சிகளும் தங்களுக்கு நியமன எம்எல்ஏக்கள் ஆதரவையும் சேர்த்து 14 பேர் இருப்பதால் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக ஆளுநர் தமிழிசையை சந்தித்து பேசினர். சட்ட சபையை பிப்ரவரி 22ம்தேதி மாலை 5 மணிக்குள் கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் இருவரும் நேற்று (பிப்ரவரி 21) தங்களது பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்து, சபாநாயகர் வி.பி சிவக்கொழுந்திடம் கடிதம் கொடுத்தனர். ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக் கொண்ட நிலையில், ஆளும் அரசுக்கான ஆதரவு 12 ஆக குறைந்தது. இதனால் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி முற்றியது.

இந் நிலையில் புதுச்சேரி சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நியமன எம்எல்ஏக் களும் பங்கேற்றனர். சட்டசபை சிறப்பு கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் வி.பி சிவக்கொந்து திருக்குறளை வாசித்து சபையை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தனது அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது தனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக தெரிவித்த அவர், சாதனைகளை பட்டியலிட்டார்.

பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

சபையில் ஆளுங்கட்சிக்கு காங்கிரஸ் – 9 (சபாநாயகர் உள்பட), திமுக – 2, சுயேட்சை-1 என மொத்தம் 12 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது.

எதிர்க்கட்சிகள் வரிசையில் என்ஆர் காங்கிரஸ் – 7, அதிமுக – 4, பாஜக நியமன எம்எல்ஏக்கள் – 3 என மொத்தம் 14 பேர் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் புதுச்சேரியில் நாராயண சாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது என்று சபாநாயகர் சிவக் கொழுந்து அறிவித்தார். இதை அடுத்து முதலமைச்சர் நாராயணசாமி ஆளுநர் மாளிகைக்கு சென்னை துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பின்னர்ஆளுநர் மாளிகையின் வெளியே செய்தியாளர்களிடம் நாராயணசாமி, “நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததால், புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். இனி முடிவெடுக்க வேண்டியது ஆளுநர்தான். எதிர்கட்சிகளுக்கு மக்கள் சரியான தண்டனை கொடுப்பார்கள். நியமன எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள், என்றார்