புதுவையில் 1 முதல் 11ம் வகுப்பு பயிலும் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி! .

புதுவையில் 1 முதல் 11ம் வகுப்பு பயிலும் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள உத்தரவில், “புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முழுவதும் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்படுகிறார்கள். அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10, 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழக கல்வி வாரியத்தின் வழிகாட்டுதலின் பேரில் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்படுகிறது.

மாகே மற்றும் ஏனாமில் படிக்கும் மாணவர்கள் கேரள மற்றும் ஆந்திர கல்வி வாரியங்களின் அடிப்படையில் தேர்ச்சி பெறுவார்கள். சனி, ஞாயிறை தவிர்த்து வாரத்தில் 5 நாட்கள் பள்ளிகள் இயங்கும். 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 31ம் தேதி வரை பள்ளிகள் இயங்கும். கோடை விடுமுறை ஏப்.1ம் தேதி முதல் துவங்கும்.

முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் என மொத்தம் 1,54,847 பேருக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.29.65 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மாகே மற்றும் ஏனாமில் உள்ள அங்கன்வாடிகளுக்கு தேவையான சாதனங்கள் வாங்க ரூ.24.35 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவையொட்டி ஏப்ரல் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கையொட்டி மே 2ம் தேதி முதல் மே.3ம் தேதி மாலை 4 மணி வரையிலும் மதுகடைகள், கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள், மது விற்பனையுடன் கூடி ரெஸ்ட்டாரண்ட் ஆகியவை மூடப்பட்டிருக்கும்” என்று அதில் கூறியுள்ளார்.