September 20, 2021

உஷாருய்யா.. உஷாரு போகிமான் கேம் இந்தியாவுக்குள் வருது!

அமெரிக்காவை ஒரு வழி பண்ணிய பிறகு இந்தியாவை நோக்கி படையெடுக்க உள்ளது போகிமான்-கோ என்னும் மொபைல் கேம். பாக்கெட் மான்ஸ்டர்ஸின் (Pocket Monsters) சுருக்கமே போகிமான் – பாக்கெட்டில் அடங்கும் குட்டிச்சாத்தான்கள் தான் போகிமான். 1996-ஆம் ஆண்டு நின்டெண்டோ (Nintendo) என்ற ஜப்பானிய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வீடியோ கேம் இது. போகிமான் உலகில், சுற்றி மறைந்திருக்கும் சின்னச் சின்ன போகிமான்களை தேடிக் கண்டுபிடித்து அதை நாம் வசப்படுத்த வேண்டும். வசப்படுத்தியதும் அதற்கு பயிற்சி தந்து அதன் சக்திகளை கூட்டி மற்ற போகிமான்களுடன் சண்டையிட்டு அதன் மூலம் இன்னும் சக்திவாய்ந்த போகிமான்களை பெற வேண்டும். இதுதான் போகிமான் விளையாட்டு. இதில் பிகாச்சு (Pikachu) என்ற போகிமான் கதாபாத்திரம் மிகப் பிரபலம்.

game jy 21

தொடர்ந்து பல வீடியோ கேம்கள், அனிமேஷன் திரைப்படங்கள், கார்ட்டூன் தொடர்கள் என இன்று வரை, அதாவது 20 வருடங்களாக போகிமான் பொழுதுபோக்குத் துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 73 போகிமான் கேம்களும், 18 போகிமான் திரைப்படங்களும், 800 பகுதிகளைக் கடந்தும் ஓடிக்கொண்டிருக்கும் போகிமான் கார்ட்டூன் தொடரும் வெளியாகியுள்ளன. போகிமான்களின் எண்ணிக்கையும் 700-க்கு மேல் போய்விட்டது. இந்த போகிமான் கலாச்சாரத்தின் சமீபத்திய பரிணாம வளர்ச்சி தான் போகிமான் கோ என்ற மொபைல் விளையாட்டு.

இதை நம் போனில் டவுன்லோடு செய்து இயக்க ஆரம்பித்ததும் நமது மொபைல் திரையில் ஜிபிஎஸ் (GPS) மூலம் கணிக்கப்படும் நம் சுற்றுப்புறத்தின் நிலப்பரப்பு 2டி-ல் (கார்டூன் போல, இரண்டு பரிமாணத்தில்) தோன்றும். அதில் நாம் தேர்ந்தெடுத்த போகிமான் மாஸ்டர் கதாபாத்திரம் நடக்கும். நிஜ உலகில், கையில் மொபைல் திரையை நாம் பார்த்துக் கொண்டே நடந்தால் அந்த கதாபாத்திரமும் திரையில் நடக்க ஆரம்பிக்கும்.

இப்படி நடக்க ஆரம்பித்தால் நம் சுற்றுப்புறத்தில் போகிமான் இருக்கும் இடங்கள் சிறிய சதுர பெட்டிகளாக காண்பிக்கப்படும். அந்த இடத்துக்கு நடந்து / ஓடி சென்றால் அங்கு ஒளிந்து கொண்டிருக்கும் போகிமான் தோன்றும். அதை க்ளிக் செய்தால் உங்கள் மொபைல் கேமராவும் இயங்க ஆரம்பிக்கும். கேமரா லென்ஸ் வழியாக மொபைல் திரையில் பார்த்துக் கொண்டே, கேமராவில் தெரியும் உண்மைக் காட்சிகளோடு போகிமான் குட்டிச் சாத்தான்களை போகி பந்துகள் மூலம் நம் வசமாக்கிக் கொள்ள வேண்டும்.

சில போகிமான்கள் தண்ணீர் பரப்பிலும் இருக்கும், அதற்கு உங்கள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் சின்ன குட்டையின் பக்கமோ, ஓடையின் பக்கமோ சென்றால் தான் கண்டுபிடிக்க முடியும். மேலும் போகிமான் ஜிம்களில் மற்ற போகிமான் வீரர்களுடன் சண்டையிட்டு பாயிண்டுகளும் வெல்ல முடியும்.

அதிலும் நடந்துகொண்டே விளையாடும் கேம் என்பதால் கேமராவில் பல சுவாரசியமான படங்களும் கிடைக்கும் என்பது தனி கதை ஆகும். அமெரிக்கா போனற சில நாடுகளில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த கேம் இப்பொது இந்தியாவுக்கும் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.