நாடெங்கும் ஆபத்தை விளைவிக்கும் சுத்தகரிக்காத குடிநீர்!

நாடெங்கும் ஆபத்தை விளைவிக்கும் சுத்தகரிக்காத குடிநீர்!

உலகில் பத்தில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கேள்விக்குறியாக உள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை. சமீப ஆண்டுகளாக பாதுகாப்பான குடிநீருக்கான போராட்டங்கள் இந்தியாவில் வேகம் பெற்று வர. மறுபுறம், குடும்ப வருமானத்தில் கணிசமான பகுதியைக் குடித்து சென்றுவிடுகிறது, பாதுகாப்பான குடிநீருக்கான செலவு.இந்த செலவு தேவைதானா என, ஒரு தரப்பினர் குழப்பத்தில் இருக்க, இதை வணிகமயமாக்கி, மற்றொரு தரப்பு வளர்ந்து கொண்டிருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் என்ற பெயரிலும், வீட்டிலேயே பொருத்திக் கொள்ளும் நீர் சுத்திகரிப்பான் என்ற பெயரிலும் களைகட்டி வரும் வியாபார வலையில் இன்னும் விழாத நடுத்தர வர்க்கம் குறைவு.

edit jan 1

மாத பட்ஜெட்டில், எவ்வளவு பணத்தை பாதுகாப்பான குடிநீருக்காக செலவிடுகிறீர்கள் என சின்ன கணக்குப் போட்டு பார்த்ததுண்டா. செய்து பாருங்கள். ஆனால், அதற்குமுன், உங்கள் பகுதியில் கிடைக்கும் தண்ணீர் பாதுகாப்பானதுதானா. குடிக்கவும், சமைக்கவும் ஏற்றதுதானா என்பதை சோதித்து அறிந்து கொள்வது முக்கியம். அப்போதுதான், இதற்கு மாற்றாக, நீங்கள் வேறு வழிகளைத் நாடித்தான் ஆக வேண்டுமா என்பது தெரிய வரும்.

பொதுவாக நீரில் 3 வகையான மாசு நிறைந்திருக்கும். முதலாவது, நுண்ணிய மண்துகள் போன்ற கரையாத திடப்பொருட்கள். இரண்டாவது, புளுரைட், கார்பைட் போன்ற கரைந்துள்ள இரசாயனங்கள். கடைசியாக, அமீபா, பேக்டீரியா போன்ற உயிரி கலப்புகள். இவற்றில், உங்கள் பகுதியில் கிடைக்கும் நீரில் எந்த வகையான மாசு உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ற சுத்திகரிப்பு முறைகளை நீங்கள் நாடினால் போதும். அப்படி இல்லாமல், இன்று சந்தையில் கிடைக்கிறதே என தேவையற்ற சுத்திகரிப்பு முறைகள் அமைந்த சாதனங்களையோ. அதுவும் வேண்டாம் என, நேரடியாக கேன்களில் சப்ளையாகும் குடிநீரையோ பயன்படுத்தி வந்தால், உங்கள் பட்ஜெட்டைச் சிக்கனப்படுத்தும் வழிகளை யோசிக்க வேண்டிய நேரம் இது.

இதற்கு, முதலில் உங்கள் பகுதியில் கிடைக்கும் நீரை, ஐஎஸ்ஐ தரத்துடனான. அங்கிகரிக்கப்பட்ட எதாவது ஒரு ஆய்வகத்தில் கொடுத்து சோதனை செய்து பார்க்க வேண்டும். பரிசோதிக்க வேண்டிய நீரை, சுத்தமான புதிய பிளாஸ்டிக் கேனில் 2 லிட்டர் அளவிற்கு அடைத்து, ஆய்வகத்தில் கொடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள எல்லா மாவட்டங்களிலும், அதன் தலைநகரங்களில் TWAD board எனப்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நீரின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வகங்கள் இருக்கும். அங்கேயே நீங்கள் தண்ணீரை பரிசோதிக்க கொடுக்கலாம். இந்த ஆய்வகங்களின் முகவரி உள்ளிட்ட தகவல்களை www.twadboard.gov.in http://www.twadboard.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். அல்லது, தமிழகத்தின் எந்த பகுதியில் வசித்தாலும், மாநில தலைநகரான சென்னையில் உள்ள, மெட்ரோ வாட்டார் எனப்படும், சென்னை குடிநீர் வாரிய ஆய்வகத்தில் கொடுத்தும் பரிசோதனை செய்யலாம். www.twadboard.gov.in ; http://www.twadboard.gov.in அங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கு தகுந்தவாறு இதற்காக 200 ரூபாயில் இருந்து 700 ரூபாய் வரை கட்டணமாகப் பெறப்படுகிறது.

ஐஎஸ்ஐ எனப்படும, இந்திய தரக் கட்டுப்பாடு ஆணையம் குடிநீருக்காக நிர்ணயித்த தர நிலைகளின்படி நீங்கள் கொடுக்கும் தண்ணீர் அங்கு பரிசோதிக்கப்படும்.இந்த பரிசோதனை அறிக்கையில், நீங்கள் கொடுத்த தண்ணீர் குடிக்க தகுந்ததா. என குறிப்பிடப்பட்டிருக்கும். அதோடு, அந்த நீரில் எந்த வகையான மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் கலந்துள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த தகவல் தெரிந்த பின், நீங்கள் எடுக்கும் நடவடிக்கைதான் முக்கியம். இப்போது, அந்த நீர் சோதனை முடிவுகள் குறிப்பிடும் மாசை நீக்கும் குடிநீர் சுத்திகரிப்பு முறையை மட்டும் நீங்கள் பயன்படுத்தினால் போதும்.

உதாரணமாக, நீங்கள் கொடுத்த தண்ணீரில் நுண் மண் துகள் போன்ற கரையாத மாசு மட்டுமே உள்ளது என தெரியவந்தால், சாதாரணமான வடிகட்டிமுறை, அதாவது துணியைக் கொண்டு வடிகட்டும் முறையை பின்பற்றினாலே போதும்‌. அதில் வடிகட்டிய தண்ணீரை, நன்றாக காய்ச்சி, மீண்டும் வடிகட்டி குடிக்கவும், சமைக்கவும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், இந்த விவரங்களை அறியாத. சரியாகப் புரிந்து கொள்ளாத, அப்பாவி மக்கள்தான் பெருத்த ஏமாற்றம் அடைகிறார்கள். குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களுக்கான மாதிரி சோதனை செய்து காட்டுவதாக சொல்லிக் கொண்டு, வீட்டுக்கு வீடு படையெடுத்து வரும் பல நிறுவனங்களின் வகை வகையான குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் இவர்களை குழப்பத்திற்கு அழைத்துச் செல்கின்றன.

இந்த வகை சாதனங்கள் பலவும் செய்வதாகச் சொல்லும் பணிகளில் பல உங்களுக்கு கிடைக்கும் தண்ணீரைச் சுத்திகரிக்க தேவையே இல்லை என்றால், இதற்காக நீங்கள் செலவிடும் பணம் அனைத்தும் தேவையற்ற செலவாகவே முடியும். மாறாக, உங்களது பகுதியில் கிடைக்கும் தண்ணிரில் வேறு வகையான, இந்த வகை சுத்திகரிப்பானால் மாசு இருக்குமானால், நீங்கள் சுத்தமான குடிநீர் பெற கேன்களில் பேக் செய்யப்பட்ட குடிநீரையோ, அல்லது சுத்திகரிப்பு சாதனங்களையோ நாட வேண்டும்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மை, வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் குளங்களில் நீர் வரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதால் ஆழ்குழாய் மூலம் வரும் நீரை குடிக்க வேண்டிய நிலை ஏராளமான கிராமத்தினருக்கு ஏற்பட்டது. உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து ஊராட்சிகளில் உள்ள கிராமங்களிலும் ஆழ்குழாய் (போர்வெல்) சிறு மின்விசை பம்ப் அமைக்கப்படுகிறது.

குளத்து நீர் மற்றும் குடிநீர் திட்டங்கள் மூலம் வரும் நீர் கிடைக்காத ஊர்களில், இந்த ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரையே குடிக்கின்றனர். இந்நிலையில் பள்ளிகள் உள்ள ஊர்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நீரை பள்ளி ஆசிரியர்கள் பரிசோதனை செய்ய கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து குளோரைடு, புளோரைடு, அமிலத்தன்மை, காரத்தன்மை, இரும்புச்சத்து, நைட்ரைடு, நேட்ரேட், எஞ்சியுள்ள உப்புக்கள், எஞ்சியுள்ள குளோரின், பாஸ்பேட், அமோனியா, நுண்கிருமி சோதனை என சுமார் 16 சோதனைகள் செய்யப்பட்டன. இவ்வாறு செய்யப்பட்ட சோதனைகளில் ஆழ்குழாய் மூலம் எடுக்கப்படும் நீர் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் குடிக்கும் நிலையில் இல்லை.

இதை நேரடியாக குடித்தால் உடல்நிலை பாதிப்பு ஏற்படும் என்பதும் தெரிய வந்தது. நல்ல முறையில் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வரும் குளங்களில் கிடைக்கும் நீர் ஆழ்குழாய் நீரைவிட நல்லதன்மை நிறைந்துள்ளது தெரியவந்தது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகள் மற்றும் 12 பேரூராட்சிகளில் சில பேரூராட்சிகளுக்கு மட்டுமே தனியாக குடிநீர் திட்டங்கள் உள்ளன. மொத்தமுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு சில கிராமங்களுக்கு மட்டுமே குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. எஞ்சிய கிராமங்களில் குளங்கள் இல்லாத கிராமங்கள், குளத்தில் நீர் இல்லாத நிலையில் ஆழ்குழாய் நீரே குடிநீராக பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறியதாவது: ஏராளமான கிராமங்களில் வேறு வழி இல்லாமல் உள்ளாட்சி நிர்வாகம் மூலம் போடப்பட்ட ஆழ்குழாய் அல்லது வீடுகளில் போடப்பட்ட ஆழ்குழாய் நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர். கடந்த 10 ஆண்டுகளிலேயே இதுபோல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நீரினால் ஏற்படும் உடல் பாதிப்புகள் கடுமையானதாகும். தற்போது ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளுக்கு குடிநீர் மிக முக்கிய காரணமாகும்.

குடிநீருக்கு மாற்று வழியே இல்லாத கிராமங்களில் ஆழ்குழாயுடன் நிலையான சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைப்பதை கட்டயமாக்க வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து நீர் மேலாண்மை அலுவலர் ஒருவர் கூறியதாவது: ஆழ்குழாயுடன் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்க ஊராட்சி நிர்வாகங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆழ்குழாய் நீரை சுத்திகரிக்காமல் குடிநீராக அருந்துவது ஆபத்தானது தான் என்பது எல்லோருக்குமான எச்சரிக்கை.

Related Posts

error: Content is protected !!