குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!- மத்திய அரசு ஒப்புதல்

அண்மைக் காலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை வைத்து ஆபாச படம் தயாரிப்பது, வர்த்தக நோக்கில் செயல்படுவது உள்ளிட்டவைகளுக்கும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் ஒரு நாளில் குழந்தைகளுக்கு எதிரான சராசரியாக 350 குற்றங்கள் நடக்கின்றன. இதில் 190 குற்றங்கள் பாலியல் துன்புறுத்தல்களாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஓர் ஆண்டில் போக்ஸோ சட்டத்தின் கீழ் 1567 வழக்குகள் குழந்தைகளுக்கு எதிரான குற்றமாகப் பதிவாகியுள்ளன. இதை அடுத்து குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தின் 4, 5 மற்றும் 6-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதேபோல், குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டத்தின் 14 மற்றும் 15-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிறுமியருக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த குற்றங்களை தடுக்கும் வகையில் 2012ல் கொண்டு வரப்பட்ட ‘போக்சோ’ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு எதிரான தீவிர பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை மரண தண்டனையாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற குற்றங்களுக்கான தண்டனைகளும் உயர்த்தப் படுகின்றன. குழந்தைகளின் ஆபாச படங்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்தக் குற்றத்துக்கான அபராதம் மற்றும் தண்டனையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவரான திருநங்கையரை புறக்கணிப்பதை தடுக்கும் வகையிலும் அவர்களுக்கு சமூக பொருளாதார மற்றும் கல்வி வாய்ப்புகளை அளிக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டுள்ள திருநங்கையர் பாதுகாப்பு மசோதாவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திருநங்கையரை அவமதிப்பது குற்றமாக பார்க்கப்படும். சமூகத்தின் வளர்ச்சியில் திருநங்கையரும் பங்கேற்பதை இந்த மசோதா உறுதி செய்யும்.

திருநங்கையரை பிச்சை எடுக்க வைப்பது பொது இடங்களில் அனுமதி மறுப்பது பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற குற்றங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக அமைந்துள்ள அரசு முதல் 100 நாட்களுக்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ள சமூக நீதி துறைக்கான இலக்குகளில் இந்த மசோதாவும் ஒன்று. பார்லியின் நடப்பு கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்”என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது

மேலும் நாட்டில் மக்கள் பல அங்கீகரிக்கப்படாத, முறைகேடான நிதி நிறுவனங்களில் (சீட்டு கம்பெனிகள்) பணத்தை டெபாசிட் செய்து பாதிக்கப்படுகிறார்கள். இதனை தடுக்க ‘முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்கள் தடை-2019’ என்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக ஒரு சட்டமசோதா கொண்டுவரப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டில் கள்ளத்தனமான டெபாசிட் திட்டங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும். மேலும் இந்த குற்றத்துக்கு தண்டனை வழங்குவது, டெபாசிட் பணத்தை மக்களிடம் திரும்ப ஒப்படைப்பது ஆகியவற்றுக்கும் இதில் வழிவகை காணப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.