November 28, 2021

மிஷன் சக்தி- யை பிரதமரே தொலைக்காட்சியில் தோன்றி அறிவிக்க வேண்டுமா?

ராத்திரி கச்சேரிக்குச் சரக்குக் கிடைக்குமா எனக் காத்திருந்த தமிழ்த் தொலைக்காட்சிகளுக்குச் சப்பென்று போய்விட்டது! மோதி முக்கியமான விஷயம் ஒன்றை நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன் என்று ட்வீட் செய்ததும், பணமதிப்பு நடவடிக்கை போல ஏதோ ஒரு அணுகுண்டு கிடைக்கப் போகிறது என நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு அவை காத்திருந்தன. ( மோதி அறிவிப்பு வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், நியூஸ் 7, தந்தி டிவி ஆகிய இரு தொலைக்காட்சிகளும் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன அறிவிப்பாக இருக்கும் என்று ஒரு பேட்டி பதிவு செய்து கொள்ளலாமா என்று கேட்டார்கள். நான் செய்தியின் அடிப்படையில் பேசுகிறவன், ஊகத்தின் அடிப்படையில் பேச முடியாது, அவர் பேசிய பின் வேண்டுமானால் கருத்துத் தெரிவிக்கிறேன் என்றேன். அவர் பேசிய பின் அவர்கள் என்னை அழைக்கவில்லை!)

சரி மோதி குறிப்பிட்ட A- Sat திட்டம் என்ன? அது அவரே தொலைக்காட்சியில் தோன்றி சொல்லும் அளவு முக்கியமானதா?

அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்குமிடையே பனிப்போர் நிலவிய காலத்திலிருந்தே விண்வெளி என்பது ஒரு முக்கியமான ஊடகமாக, போர்த்தளமாக ஆகிவிட்டது விண்வெளியில் உலவும் செயற்கைக் கோள்களின் மூலம் ராணுவத்திற்கு வேண்டிய தகவல்கள் பெறப்படுகின்றன. பலவழித் தொடர்பு, எச்சரிக்கைகள், நிலப்பகுதிகளை ஆராய்தல், போர் விமானங்களை/ கப்பல் களைச் செலுத்துதல், உளவு பார்த்தல் எனப் பல விஷ்யங்களுக்குச் செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் விண்வெளியை வசப்படுத்திய நாட்டைப் போரில் வெல்வது கடினம். (இதனால்தான் அமெரிக்காவும் ரஷ்யாவும் அந்தத் துறையில் அவ்வளவு கவனம் செலுத்தின கோடிக்கணக்கான டாலர்களைச் செலவிட்டன)

சீனா செயற்கைக் கோள்களைத் தகர்க்கும் சக்தியை (A-Sat) பெறும் திட்டத்தை 2013ல் தொடங்கியது. அதனுடைய A-Sat ஏவுகணை Dong Neng -2 சுருக்கமாக DN-2 மே 2013ல் பரிசோதிக்கப்பட்டது. இதைக் குறித்து சீனா ரகசியம் காத்தாலும் அமெரிக்க உளவு அமைப்புக்கள் மூலம் திரட்ட்டப்பட்ட இந்தத் தகவல் Secure World Fountation என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது

ஆனால் சீனா அதற்கு முன்பே இந்த முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. 2007ல் அது ஏவிய ஒரு ஏவுகணை ரஷ்ய செயற்கைக் கோளை 2000 துண்டுகளாகச் சுக்கு நூறாக்கிய செய்தி வெளி வந்ததும், இந்தியத் தலைமைத் தளபதி தீபக் கபூர் சீனா இந்த தொழில்னுட்பத்தில் பயங்கர வேகத்தில் ( 2 நான்காவதைப் போல நான்கு பதினாறாவதைப் போன்ற வேகம் “exponentially rapid”) முன்னேறுகிறது என்று எச்சரித்தார். ஆனால் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அதைக் குறித்துக் கவலை கொள்ளவில்லை.

A-Sat தயாரிப்பதற்க்கான திறன் இந்தியாவிடம் இருக்கிறது என்று DRDO தலைவர் வி.கே. சரஸ்வத் சொன்னபோது, “கதை!. காகிதப் புலிகள்!” என்று உலகம் நம்மைக் கேலி செய்தது

2013 நவம்பரில் நாம் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லாத விண்கலம் அனுப்பப்பிய பிறகுதான் அவை உஷாராயின. செஞ்ச்சலும் செஞ்சிடுவாங்கடே என்று ஏற்கனவே இந்தத் திறன் பெற்ற அமெரிக்கா, சீனா, ரஷ்யா மூன்றும் கூட்டாக ஒரு முயற்சியில் இறங்கின. அது அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் போன்ற ஒன்றை உருவாக்கி மற்ற நாடுகள், குறிப்பாக இந்தியா இந்தத் திறன் பெற்றுவிடாமல் தடுக்கும் முயற்சிதான் அது

இந்தியா இதைப் பொருட்படுத்தாமல் 2014க்குப் பின் A-Sat ஏவுகணை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது (தொலைக்காட்சிப் பேட்டியில் பத்திரிகையாளர் ஷ்யாமும் பீட்டர் அல்போன்சும் இது “பல” ஆண்டுகளாக நடந்து வருகிறது என்று சொன்னார்கள். அது சரியல்ல)

இன்று நம் விஞ்ஞானிகள் முழுக்க முழுக்க இந்தியத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரித்து மெய்ப்பித்தும் காட்டிவிட்டார்கள்.நாம் காகிதப் புலிகள் அல்ல. இனி எந்த ஒப்பந்தத்தாலும் நம்மை முடக்க முடியாது

இதை பிரதமரே தொலைக்காட்சியில் தோன்றி அறிவிக்க வேண்டுமா என்றால் , ஆம் வேண்டும் . ஏனெனில் இது ஏறத்தாழ நாம் அணுகுண்டு வெடித்த தருணத்திற்கு ஒப்பானது

இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்!

மாலன் நாராயணன்