September 18, 2021

கூட்டணியோ கூட்டணி !- பாமக முடிவு!.

கோவை சிங்காநல்லூரில் பாமக பொதுக்குழுக் கூட்டம் பா.ம.கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில்   `நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க., மக்கள் நலனில் அக்கறை உள்ள ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை தலைவர் ராமதாஸுக்கு வழங்குவது, மேகதாது அணை குறித்த ஆய்வுக்கான அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அந்த தீர்மானங்களின் விவரம் இதோ:

வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது, மேகதாது அணை குறித்த ஆய்வுக்கான மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததை திரும்ப பெற வேண்டும். காவிரி டெல்டா பகுதிகள் கஜா புயலால் சேதமடைந்து 45 நாட்களுக்கு மேலாகியும் நிவாரண உதவி முழுமையாக சென்றடையவில்லை. நிவாரண நிதியை காலதாமதம் இன்றி மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயிகளின் அனுமதியில்லாமல் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை அரசுகள் கைவிட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதை தடுக்க சட்டப்பேரவையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். சென்னை-சேலம் இடையே அமைக்க உள்ள 8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படுவதால் இச்சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும். கடந்த 2016 முதல் நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சி தேர்தலால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.

நெய்வேலியில் புதிதாக அமைக்க உள்ள சுரங்கம்-3 பணிதிட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் மிகப்பெரிய சமூக தீமையாக மது உருவெடுத்து வருவதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் நலன் கருதி தமிழகத்தில் பூரண மது விலக்கை நடைமுறை படுத்த வேண்டும். மேற்கண்டவை உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, “தேர்தலில் கூட்டணி குறித்து நிர்வாகிகள் பலரும் அவரவர் கருத்துக்களை தெரிவித்தனர். அக்கருத்துக்களை பாமக உயர்மட்ட குழு பரிசீலித்து நிறுவனர் ராமதாசிடம் தெரிவித்துள்ளோம். கூட்டணி விஷயத்தில் கட்சியின் ஒருமித்த கருத்தாக முடிவெடுக்கும் அதிகாரம் நிறுவனர் ராமதாசுக்கு அளிக்கப்படுகிறது’’ என்று கூறினார். இதை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரித்தனர். இதனால் விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் பா.ம.க இளைஞரணி தலைவர்அன்புமணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, ஆர்.வேலு, மாநில பொருளாளர் திலகபாமா, மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன், மாநில துணை பொதுசெயலாளர் ரகுபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பொதுக்குழு கூட்டத்துக்குபின் அன்புமணி, நிருபர்களிடம் கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க., மக்கள் நலனில் அக்கறை உள்ள ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். இதுபற்றி முடிவெடுக்க நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் கூட்டணி பற்றி விரைவில் அறிவிப்பார். 20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவித்தவுடன் கூட்டணி பற்றி முடிவு எடுப்பார்’’ என்று தெரிவித்தார்.