September 20, 2021

டிக் டாக்(TikTok) மொபைல் செயலியை தடை செய்! – ராமதாஸ் வலியுறுத்தல்!

லேட்டஸ்ட் டிரெண்டிங் உருவாக்கும் போக்கு சாதனமாக மாறி விட்டது டிக் டாக் செயலி. இது நாள் வரை கோலோச்சி வந்த பேஸ்புக் , வாட்ஸாப் செயலிகளை விட குறைந்த நாட்களில் அதிகப்படி யான பாலோவர்ஸை பெற்று விட்டது டிக் டாக் . அதில் இளைஞர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு வயதினரும் பங்கேற்று அதை பகிர்ந்து வரும் சூழலில் நம்மூர் மாணவர்களிடம் கவனச் சிதறலை ஏற்படுத்தும் டிக் டாக்(TikTok) மொபைல் செயலியை தடை செய்ய வேண்டுமென பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது   அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயனாளிகள் தங்களிடம் உள்ள ஆடல், பாடல் உள்ளிட்ட தனித்திறமைகளை 15 வினாடிகளில் வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதற்கு உதவுவது தான் இந்த  டிக் டாக் செயலி எனக் கூறி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், ஓவியம் வரையும் முயற்சி கிறுக்கலாக மாறிப்போனதைப் போன்று, டிக் டாக் செயலி தற்போது ஆபாசக் களஞ்சியமாக மாறிப் போயிருக்கிறது.

 டிக் டாக் செயலியில் ஒரு பதிவுக்கு ஒரு முறை ஆயிரம் பேரிடமிருந்து வரவேற்பு கிடைத்தால், அடுத்த முறை அதை இருமடங்காக்கும் எண்ணத்தில் கூடுதல் ஆபாச சேட்டைகளை அரங்கேற்றுகின்றனர். மாணவர்களிடம் கவனச் சிதறலை ஏற்படுத்தும் இந்த  டிக் டாக் செயலியின் உள்ளடக்கங்கள் பல்வேறு நாடுகளில் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகிறது. சமூகச் சீரழிவுக்கு வழிவகுக்கும்  டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும். பெற்றோர்கள் இந்த செயலியின் தீய விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துக்கூற வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.