October 5, 2022

பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு ; என்ன ஸ்பெஷல்?

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து வர இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலை எதிர்கொள்ளும் பாமக இங்கு ஜஸ்ட் ஏழே தொகுதிகளில் போட்டியிட்டாலும் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை தனியாக வெளியிட்டு வழக்கம் போல் சலசலப்பை ஏற்படுத்தி விட்டனர்.

சில முரண்பாடான அறிவிப்புகளுடன் சமூக பாதுகாப்பு, வேளாண்மை, பயிர்க்கடன் தள்ளுபடி, ஊரக வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல், மாநில சுயாட்சி, நல்ல ஆளுகை, சமூக நீதி, தனியார் துறை இடஒதுக்கீடு, மாநில முன்னுரிமை, வருமான வரி, ஜிஎஸ்டி, மதுபுகை ஒழிப்பு, கல்வி, உயர்கல்வி, நல்வாழ்வு, தொழில்துறை வளர்ச்சி, பட்டாசு ஆலைகள், அரசு ஊழியர்கள் நலன், வேலையில்லா இளைஞர்களுக்கு நிதியுதவி, உட்கட்டமைப்பு மேம்பாடு, உள்ளாட்சி, கிராமப்புற வளர்ச்சி, நகர்ப்புற உள்ளாட்சிகள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ் இலக்கமுறை நூலகம், 7 தமிழர்கள் விடுதலை, கட்சத்தீவு மீட்பு, தேர்தல் சீர்திருத்தங்கள், பெண்கள் பாதுகாப்பு, திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல், பெண் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம், சுயமரியாதை திருமணம், விளையாட்டு, மாற்றுத்திறனாளிகள் நலன், முத்தலாக், இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது என மொத்தம் 37 தலைப்புகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1.வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மாநில அரசுகள், உழவர் அமைப்புகளின் ஆலோசனை பெற்று இந்த அறிக்கை தயாரிக்கப்படும்.

2. நில உரிமையாளர்களுக்கு மானியம் வழங்கப்படுவதைப் போன்று, வேளாண் தொழிலாளர்களுக்கு உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, வேளாண் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

3. 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக உழவர்கள் வருங்கால வைப்புநிதி ஆணையம் அமைக்கப்படும்.

4. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பா.ம.க. வலியுறுத்தும்.

5. தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவ மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 50% இடங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.

6. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடஒதுக்கீடு வழங்கப்படும்.

7. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் சூழலில், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சட்டம் இயற்ற பா.ம.க. பாடுபடும்.

8. மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் கடைநிலை பணியிடங்கள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்படும். அதாவது, கடைநிலைப் பணிகளில் 100% மாநில இடஒதுக்கீடு வழங்கப்படும்.

9. தனிநபர்களின் வருமான வரி விலக்கு வரம்பை தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்த பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

10. 12% மற்றும் 18% வரி விகிதத்தில் உள்ள பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி 10 விழுக்காடாக குறைக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துமே 10% வரி விதிப்பு அல்லது முழுமையான வரி விலக்குப் பிரிவில்தான் இருக்கும்.

11.மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தும். இதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட தனி மானியம் வழங்கும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

12. கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.

13. அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

14. தமிழ்நாட்டில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு இணையாக டி.ஐ.டி. என்ற பெயரில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இதற்கான நிதியில் 50%&ஐ மத்திய அரசு மானியமாக வழங்கும்.

15. ரோபோடிக் தொழில்நுட்பம், செயற்கை அறிவுத் திறன், இணைய உலகம், தானியங்கி வாகனங்கள், முப்பரிமாண அச்சுமுறை, குவாண்டம் கணினியியல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நான்காவது தொழில் புரட்சியை இந்தியாவில் விரைவுபடுத்த பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

16. பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துரை பெற்று இச்சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

17. அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இப்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.

18. இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியு-தவி வழங்கப்படும்.

19. சென்னை & சேலம் இடையிலான எட்டுவழிச் சாலைக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாசு தொடர்ந்துள்ள வழக்கின் மூலம் உழவர்களின் விளை நிலங்களையும், உரிமைகளையும் பாதுகாக்க பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

20. ராஜீவ் கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

21. 1974ஆம் ஆண்டில் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க பா.ம.க. பாடுபடும்.

22. தேர்தல்களில் மக்கள் அளிக்கும் வாக்குகள் வீணாகப் போவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அது பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அறிமுகம் செய்யப்படும்.

23. சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் கர்நாடக உயர்நீதிமன்றமும் இதனை வலியுறுத்தியுள்ளது.

மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்கு கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்.

24. சுயமரியாதை திருமணத்திற்கு அகில இந்திய அளவிலும் சட்டப்படியாக அங்கீகாரத்தைப் பெற்றுத்தர பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

25. ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் அவர்களின் 18வது வயதில் ரூ. 10 லட்சம் கிடைக்கும் வகையில் ஒரு தொகை அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.

26. முத்தலாக் மூலம் மணமுறிவு வழங்கும் முறையை ரத்து செய்து சட்டம் இயற்றப்படும். எனினும், முத்தலாக் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படாது.

27. மனிதக் கழிவுகளையும், கழிவுநீர் பாதை மற்றும் தொட்டிகளையும் மனிதர்களே அகற்றும் அநீதிக்கு முடிவு கட்டப்படும். இந்தப் பணிகளில் இதுவரை ஈடுபடுத்தப்பட்டு வந்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கத் திட்டம் வகுக்கும்படி மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.

28. மக்களை மயக்கும் வகையிலான மண்ணின் இசையால் தமிழகத்தின் புகழை உலகம் முழுவதும் பரப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றுத்தர பா.ம.க. பாடுபடும்.

29. அனைத்து மாவட்டங்களிலும் மிகப் பெரிய அளவில் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகங்கள் அமைக்கப்படும். விளையாட்டை ஊக்குவிக்க மாவட்ட அளவில் அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுரை வழங்கும்.

30. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வரைவை உடனடியாக நிறைவேற்ற பா.ம.க. பாடுபடும்.