January 28, 2022

பிரதமர் மோடியின் புத்தாண்டு பேட்டி:- முழு விபரம்!

பாஜக சார்பிலான மோடி பிரதமராக பதவியேற்ற நான்கு ஆண்டுகளில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட எதிர் கொண்டதில்லை. மாறாக தனக்கு இணக்கமான கேள்விகள் கேட்கும் செய்தி ஊடகம் ஏதாவது ஒன்றை அழைத்து பேட்டி என்ற பெயரில் ஸ்டேட்மெண்ட் பாணியில் தகவல் களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் இன்றைய புத்தாண்டின் முதல் நாளில் பிரதமர் நரேந்திர மோடி ஏ என் ஐ -க்கு சிறப்பு பேட்டி என்ற பெயரில் ஒன்றை அளித்துள்ளார். அதில், ராமர் கோயில் கட்டுவதற்கான அவசர சட்டம் இயற்றுவது, சர்ஜிக்கல் ஸ்டிரைக், பணமதிப்பிழப்பு, விவசாயிகள் கடன் தள்ளுபடி, ரபேல் விவகாரம், மக்களவை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதே சமயம் பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா, “இப்பேட்டியில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஊடங்கள், பத்திரிக்கைகள் எழுப்பி வரும் எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அவரது பேட்டியில் தான் என்கிற ஆணவத்தை மட்டுமே அவர் வெளிப்படுத்துகிறார். நியாயமான கேள்விகளுக்கு, மக்கள் படும் அவதிகளுக்கு, பிரதமர் மோடியிடம் எந்த பதிலும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி நேற்று அளித்த சிறப்பு பேட்டி விபரம் இதோ:

“2018ம் ஆண்டு இந்தியாவுக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்திருந்தது. 2ம், 3ம் நிலை நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் விளையாட்டுத் துறையில் முத்திரை பதித்திருக்கிறார்கள். அனைத்து துறையிலும் இந்தியா ஜொலிக்கிறது. உரி ராணுவ முகாமில் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது, சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அந்த முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ முக்கியமில்லை, விடிவதற்குள் வீரர்கள் எல்லைக்குள் திரும்பி விட வேண்டுமென உறுதியான உத்தரவை பிறப்பித்தேன். இது மிகப்பெரிய ஆபத்தான முயற்சி என்பதை அறிந்திருந்தேன். அதனால் ஏற்படும் அரசியல் ஆபத்துகளை பற்றி நான் கவலைப்படவில்லை. எனது ஒரே கவலை, வீரர்களின் பாதுகாப்பு பற்றி மட்டுமே இருந்தது. கடைசி வீரர் வரை திரும்பி விட வேண்டுமென்பதில் உறுதியுடன் இருந்தேன். தாக்குதல் நடந்த அடுத்த நாள் காலையில் எந்த தகவலும் கிடைக்காததால் மிகவும் பதற்றமடைந்தேன். நெருக்கடியை உணர்ந்தேன். பின்னர், கடைசி வீரர் வரை திரும்பி விட்டதை கேட்ட பிறகு தான் நிம்மதி வந்தது. இந்த நடவடிக்கையை ராணுவ வீரர்கள் அனைவரும் பாராட்டினர். ஆனால் துரதிஷ்டவசமாக உள்நாட்டிலேயே இந்த தாக்குதல் பற்றி சந்தேகத்தை கிளப்பினர். பாகிஸ்தானின் கண்ணோட்டத்திற்கு நிகராக இருந்து சிலர் பேசினர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டதல்ல. இதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே கருப்பு பணம் வைத்திருந்த வர்களை எச்சரித்தோம். கருப்பு பணம் வைத்திருந்தால், அதை ஒப்படைத்து அபராதத்துடன் தப்பி விடுங்கள் என்று கூறினோம். ஆனால், மோடியும் மற்றவர் களைப்போல எச்சரித்துவிட்டு எதுவும் செய்ய மாட்டார் என பலரும் நினைத்தார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால்தான் சோக்‌ஷி, மல்லையா போன்றவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள். அவர்கள் எல்லாம் இன்றோ, நாளையோ திரும்ப அழைத்து வரப்படுவார்கள். அதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்படுகிறது. அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய பணத்தை திருடியவர்கள் ஒவ்வொரு பைசாவுக்கும் அபராதம் செலுத்தியே தீர வேண்டும்.

ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் படேல் மிகச்சிறப்பாகவே பணியாற்றினார். அவரது பதவி விலகலுக்கு, சொந்த காரணங்களே காரணம். பதவி விலகுவது தொடர்பாக அவர் 6 முதல் 7 மாதத்திற்கு முன்பே எனக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். எந்த நெருக்கடிக்கும் அவர் ஆளாகவில்லை.

நாட்டை 70 ஆண்டுக்காலமாக ஆட்சி செய்தவர்கள்தான், ராமர் கோயில் விவகாரத்தில் தீர்வு எட்ட விடாமல் தடுத்தார்கள் என்பதை யாராலும் மறக்க முடியாது. நீதிமன்றத்தில் இவ்வழக்கை இழுத்தடிப்பதே காங்கிரஸ் வக்கீல்கள்தான். இந்த விவகாரத்தில் அரசியலமைப்பின்படி தீர்வு காண்போம் என தேர்தல் வாக்குறுதியில் கூறியிருக்கிறோம். இதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு, அரசு தனது கடமையை நிச்சயம் செய்யும். சட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகு அவசர சட்ட மசோதா இயற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

முத்தலாக், சபரிமலை விவகாரத்தில் பாஜக மாறுபட்ட கருத்தை கொண்டிருக்கவில்லை. முத்த லாக் என்பது பாலின சமத்துவ விவகாரமாகும். சமூக நீதியை நிலைநாட்டவே சட்டம் இயற்றப் பட்டது. இதை மத விவகாரத்தில் தலையிடுவதாக பார்க்கக் கூடாது. சபரிமலை விவகாரம் பாரம்பரியத்துடன் தொடர்புடையது.

விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வோம் என எதிர்க்கட்சிகள் கூறுவது பொய். அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து பார்த்தால் உண்மை தெரியவரும். கூட்டு வன்முறைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும். எந்த வகையிலும் இச்செயலை ஏற்க முடியாது. அதே நேரத்தில் கூட்டு வன்முறைகளை அரசியலாக்க கூடாது.

ரபேல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தனிப்பட்ட முறையில் என் மீது மட்டும் தாக்குதலை தொடுக்கவில்லை. அரசுக்கு எதிராக அவர்கள் குற்றம்சாட்டினர். ராணுவத்தின் வலிமையை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்து வருகிறேன். ரபேல் விவகாரத்திலும் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளேன். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. பிரான்ஸ் அதிபரும் குற்றச்சாட்டுகள் பொய் என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.

இதற்கு முன் பிரதமராக இருந்த அனைவருமே வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் கள். ஆனால் அவர்கள் அதை பற்றி நாட்டுக்கு தெரியப்படுத்தவில்லை. நான் தெரியப்படுத்து கிறேன்.  அது தான் வித்தியாசம். வெளிநாடுகளில் நாடாளுமன்றங்களில் 8 மணி விவாதங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு விஷயங்கள் பற்றியும் நாமும் ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தற்போது இது குறைந்து வருகிறது.

இந்த ஆண்டு மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த தேர்தல் சாமானியனுக்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் இடையேயான களமாக இருக்கும். இதில், மோடி சாமானியனின் பிரதிபலிப்பு. எங்களின் செயல்பாடு எப்படி என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இப்படி பிரதமர் மோடி கொடுத்த பேட்டி குறித்து காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘‘நான், எனது, என்னுடைய, என்னால் என பிரதமரின் பேட்டி முழுக்க முழுக்க அவரைப் பற்றிய சுயதம்பட்டமாக இருந்தது. இந்த ‘நான்’களாலும், பொய்களாலும்தான் நாடே பாதிக்கப்பட்டிருக்கிறது. வெறும் வார்த்தை ஜாலம்தான். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்பதை பற்றிய உண்மை நிலவரத்தையே பிரதமர் மோடி பேசவில்லை. எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்ற வில்லை. புத்தாண்டு தினத்திலும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார். இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட பேட்டி மூலம் மக்களை முட்டாளாக்க முடியாது. தைரியமிருந்தால் நாடாளுமன்றத்தில் எங்களை சந்தியுங்கள் அல்லது பத்திரிகையாளர்கள் சந்திப்பை கூட்டுங்கள் பார்க்கலாம்’’ என்றார்.