March 22, 2023

எக்ஸாம் ஃபீவர்? மாணவர்கள் ., பெற்றோர்கர்ளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

மத்திய அரசின் பரிக்சா பர் சர்சா (pariksha pe charcha) என்ற நிகழ்ச்சி மூலம் இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவரின் தாய் ஒருவர், தமது மகன் நீண்ட நேரமாக ஆன்லைன் கேம்கள் விளையாடிக் கொண்டிருப்பதாகவும், இதனால் படிப்பில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கூறினார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஆல்னைன் விளையாட்டை குறிப்பிட்டு, பையன் பப்ஜி விளையாடுகிறானா? என கேட்டார். இதையடுத்து, அந்த அரங்கம் முழுக்க சிரிப்பொலி எழுந்தது.

மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும்போது சந்திக்கும் பிரச்சனைகளை களையவும், அவர்களது வளர்ச்சியை முன்னிறுத்தியும் எக்ஸாம் வாரியர்ஸ் என்ற புத்தகத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி வெளியிட்டார். இதன் அடுத்தக்கட்டமாக, பள்ளிமாணவர்கள் அச்சமின்றி தேர்வை எதிர் கொள்வது பற்றி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கலந்துரையாடும் ‘பரிக்‌ஷா பர் சர்சா’ என்ற நிகழ்ச்சியும் கடந்த ஆண்டு முதல் முறை யாக நடைபெற்றது. இந் நிலையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுதேர்வுகள் இரண்டு மாதங்களில் துவங்க இருப்பதை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான பரிக்‌ஷா பர் சர்சா இன்று புது டெல்லியில் உள்ள தல்காத்தோரா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா முழுவதும் இருந்து சுமார் 675 மாணவர்கள் இன்று டெல்லி வந்தனர். இந்த வருடம் பரிக்சா பர் சர்சா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும் மத்திய கல்வித்துறை அழைப்பு விடுத்திருந்தது. மேலும் முதல்முறையாக இந்தியா மட்டுமன்றி ரஷ்யா, நைஜீரியா, ஈரான், நேபாளம், குவைத், தோஹா, சவுதி அரேபியா மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்று நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி முதலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் மறைவு குறித்து அறிவித்தார். நாட்டின் மிக சிறந்த தலைவர்களுல் ஒருவரான ஜார்ஜ் பெர்னாண்டஸிற்கு தனது மரியாதைகளை தெரிவிப்பதாக மோடி கூறினார்.

மாணவர்களிடம் மோடி பேசியதன் விவரம் இதோ:

நாட்டின் இளைய சக்தி சூழ நான் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் இங்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை கூற வரவில்லை. உங்களில் ஒருவனாக இருந்து உங்களுடன் கலந்துரையாடவே வந்துள்ளேன்.

மாணவர்கள் எப்போதும் தேர்வுகளைக் கற்றலுக்கான வாய்ப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். வாழ்க்கையில் தேர்வுகள் மிக அவசியம். அதை நினைத்து நாம் அதிகம் கவலைப்பட வேண்டாம். உங்கள் தேர்வுகள் உங்கள் வகுப்பிற்கானதா அல்லது வாழ்க்கைக்கானதா என்பதை உணர்ந்து கொண்டாலே உங்கள் மன அழுத்தம் பாதியாக குறைந்துவிடும்.

பெற்றோர்கள் தங்கள் நிறைவேறாத ஆசைகள் மற்றும் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட திறன்கள் உண்டு. அதை புரிந்துகொண்டு குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் மதிப்பெண் அட்டவணையை விசிட்டிங் கார்டுகளாக கருதினால் உங்கள் குழந்தைகள் மனதில் அழுத்தம் அதிகரிக்கும். இது மிகவும் மோசமான சூழலை உருவாக்கும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்குவித்தால் 60 சதவீதம் வாங்கும் குழந்தைகள் 80 சத வீதம் வாங்குவார்கள். அதேசமயம் 90 சதவீதம் வாங்காததால் எதற்கும் உதவாதவர்கள் என்று உங்கள் குழந்தைகளை மட்டம் தட்டினால் அவர்களின் மதிப்பெண் 40 சதவீதமாக குறைந்துவிடும். எனவே பெற்றோர்கள் நேர்மறையான சிந்தனைகளுடன் குழந்தைகளுக்கு சிற்ந்த துணையாக இருக்க வேண்டும்.

இன்றைய நவீன புதிய தொழில்நுட்பம் மாணவர்களுக்கு ஆபத்தானது என கூறமாட்டேன். புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் புரிந்துகொள்வது நல்லது என நம்புகிறேன். மாணவர்களின் கற்பனை வளத்தையும் திறன்களையும் வளர்க்க, புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்க தொழில் நுட்பம் உதவும். அதே சமயம் அதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்

வாழ்க்கையில் நமக்கு சவாலாக இருக்கும் விஷயங்கள் தான் நம்மை மெருகேற்றுகின்றன. எனவே தேர்வையும் ஒரு சவாலாக எடுத்து அதன் மூலம் உங்கள் தகுதிகளை வளர்த்து கொள்ளுங்கள்.

தேர்வுகளை சந்திக்கும் போது மாணவர்கள் மதிப்பெண்கள் மீது கவனம் செலுத்தாமல் அறிவை வளர்த்து கொள்வதிலும் பாடங்களை புரிந்துகொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதை நீங்கள் சரியாக செய்தால் மதிப்பெண்கள் தானாக வந்து சேரும். நேரத்தை சரியாக நிர்வகிப்பது மிகவும் அவசியம். அனைவருக்கும் 24 மணி நேரம் தான் உள்ளது. அதை சரியாக திட்டமிட்டு யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள். எனவே கால நிர்வாகம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியம். உங்கள் கனவுகளை இலக்குகளை பல பகுதிகளாக பிரித்துகொண்டு ஒவ்வொரு படியாக முன்னேறி செல்லுங்கள். அதற்கான கால அவகாசத்தை நிர்ணயித்து கொள்ளுங்கள்.

கற்றல் என்பது மாணவர்கள் எதிர்கொள்ளும் தேர்வுகளுடன் நின்றுவிடக்கூடாது. வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள நம்மை தயார்ப்படுத்துவதே உண்மையான கல்விக்கு அடையாளம் என்று மோடி தெரிவித்தார்.