October 20, 2021

தேர்தல் முடிவுகளால நாடே சும்மா.. அதிருதில்லே!- மோடி பேச்சு!

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ அமோக வெற்றி பெற்றது. உ.பி.யில் உள்ள 403 தொகுதியில் பா.ஜ 312 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மொத்தம் 325 இடங்களை கைப்பற்றியது. மணிப்பூரில் முதல் முறையாக அதிக இடங்களை பா.ஜ கைப்பற்றியுள்ளது. கோவாவில் சிறிய கட்சிகள் உதவியுடன் பாஜ ஆட்சி அமைக்கிறது. மணிப்பூரிலும் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் வெற்றிக்குப்பின், பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் வெற்றியைக் கொண்டாடவும், புதிய முதல்வர்களை தேர்வு செய்யும் ஆட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், பிரதமர் மோடி நேற்று தனது வீட்டிலிருந்து பா.ஜ தலைமை அலுவலகத்துக்கு மாலை 6 மணியளவில் காரில் புறப்பட்டார். அவரை வரவேற்க பா.ஜ தொண்டர்கள் ஏராளமானோர் வழி முழுவதும் கூடியிருந்தனர். அவர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த பிரதமர் மோடி காரை விட்டு இறங்கி, தலைமை அலுவலகத்துக்கு நடந்தே சென்றார். அவருக்கு தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். வழி நெடுகிலும் ‘மோடி கோஷம் எழுப்பினர். தொண்டர்களிடம் கையசைத்தபடி பா.ஜ தலைமை அலுவலகத்தை வந்தடைந்தார். அங்குள்ள தீனதயாள் உபாத்யாயா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியும், பா.ஜக தலைவர் அமித்ஷாவும் வெற்றியுரை ஆற்ற, பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் பிரதமர் மோடிக்கு, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், பா.ஜ மூத்த நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்தனர்.

images

வெற்றி விழாவில் பேசிய அமித்ஷா, ‘‘உத்தரப் பிரதேச தேர்தல் வெற்றி, பிரதமர் மோடியின் செயலுக்கு கிடைத்த பாராட்டு. இப்போது மக்கள் அளித்த தீர்ப்பு, 2014ம் ஆண்டு தேர்தல் தீர்ப்பை விட இரண்டு படி உயர்வானது’’ என்றார்.

பின்னர் இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது, “உ.பி., உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜ., வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியை பெற்றுள்ளது. ஏழை மக்களுக்கு, பா.ஜ., ஆற்றிய சேவைகளுக்காக, இந்த வெற்றியை அவர்கள் அளித்துள்ளனர். ஏழை மக்களுக்கான திட்டங் களை, மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றுவோம். பொதுவாக தேர்தல்கள் புதிய அரசை தேர்ந்தெடுப்பதோடு, ஜனநாயகத்துக்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்துவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. தேர்தல்களில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஜனநாயகத்துக்கு நல்ல அறிகுறி. இந்த சாதனை வெற்றி மிகச் சிறப்பானது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

இந்த வெற்றி ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்துள்ளது. நமக்குக் கிடைத்துள்ள  அமோக வெற்றியை பார்த்து எதிர்கட்சிகள் நடுங்கி போய் உள்ளனர். இந்தத் தேர்தல் பிரசாரத்தில் வளர்ச்சி பற்றி எந்த கட்சிகளும் பேசவில்லை. ஆனால், நாங்கள் அதை முக்கிய பிரச்னையாக பேசினோம். தற்போது புதிய இந்தியாவை நான் பார்க்கிறேன். இளைஞர்களின் உயர்ந்த லட்சியத்துடன் கூடிய இந்தியாவை பார்க்கிறேன். பெண்களின் லட்சியத்தையும் புதிய இந்தியா நிறைவேற்றும்.

இந்த அரசு, ஆதரவாகவும், எதிராகவும் ஓட்டளித்த அனைவருக்காகவும் பாடுபடும்; அனைவரும் சேர்ந்து, புதிய இந்தியாவை கட்டமைப்போம். வெற்றி என்னும் கனிகள், பா.ஜ க., என்னும் மரத்தில் காய்த்து தொங்கும்போது இந்த மரம் வளைந்து பணிவாக செயலாற்ற வேண்டிய பொறுப்பு உண்டாகிறது. இயற்கையின் இந்த தத்துவம், நம்மை வழிநடத்துகிறது. மாபெரும் ஆலமரமாக உருவாகி உள்ள, பா.ஜ.க,வை, வாஜ்பாய், அத்வானி, குஷாபாவ் தாக்கரே, ஜனா கிருஷ்ணமூர்த்தி போன்ற, எண்ணற்ற, பா.ஜ., ஜனசங்க தலைவர்கள், தங்கள் இளமையையும், வாழ்க்கையையும் தியாகம் செய்து வளர்த்தெடுத்துள்ளனர்.

தேர்தல் வெற்றி மூலம் நாம் பெற்றுள்ள அதிகாரம் என்பது, ஆட்சி செலுத்துவதற்கான சாதனம் அல்ல; மக்களுக்கு சேவையாற்றவே, அதிகாரம் தரப்படுகிறது. வரிச்சுமையால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள, நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் வகையில், தங்கள் சுமைகளை தாங்களே சுமக்க வல்லவர்களாக, ஏழைகளை மேம்படுத்த வேண்டும்; அதற்கான நடவடிக்கை களை அரசு மேற்கொள்ளும்.

modi mar 13

இன்றைக்கு, உலகின் மிகப்பெரும் அரசியல் கட்சியாக பா.ஜ.க, உருவெடுத்துள்ளது. இந்த மாபெரும் கட்சியின் உறுப்பினர் என, பா.ஜ.க, உறுப்பினர்கள், பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ள முடியும். நாட்டின் ஒவ்வொரு, புவியியல் ரீதியிலான பகுதியிலும் பா.ஜ.க,வின் இருப்பு உறுதியாகி உள்ளது. இதற்கு காரணமான கட்சியின் மத்திய தலைமை, மாநில தலைமைகள், கட்சியின் தொண்டர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர் கள். தேர்தல் முடிவுகள், குறிப்பாக, உ.பி.,யில் கிடைத்துள்ள முடிவுகள்,புதிய இந்தியாவின் அடித் தளமாக திகழ்கின்றன. புதிய இந்தியா வின், 65 சதவீத மக்கள், 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாக திகழ்கின்றனர். இந்த புதிய இந்தியாவில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண்கள் விழிப்புணர்வுடன் திகழ்கின்றனர்.

நம் புதிய இந்தியா, 125 கோடி இந்தியர்களின் திறமையால், வலிமையால் வலுப்படுத்தப்படும். இந்த இந்தியா வளர்ச்சியை நோக்கி அமைந்திருக்கும்; அமைதி, ஒருமைப்பாடு, சகோதரத்துவம் போன்றவற்றால் உருவான இந்தியாவாக திகழும்; புதிய இந்தியாவில், ஊழல் பயங்கரவாதம் கறுப்புப் பணம் போன்றவற்றுக்கு இடமிருக்காது”என்று மோடி உரையாற்றினார்.