இந்தியாவில் இப்போ சுமார் 3 ஆயிரம் புலிகள்! – பிரதமர் மோடி அறிவிப்பு!

இந்தியாவில் இப்போ சுமார் 3 ஆயிரம் புலிகள்! – பிரதமர் மோடி அறிவிப்பு!

சர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். அதன்படி 2018 ஆம் ஆண்டு நம் நாட்டில் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

காட்டின் சூழல், உணவுச் சங்கிலியை சமநிலைப்படுத்த, புலிகளைக் காப்பது அவசியமாகியுள்ளது. இதற்கான விழிப்புணர்வுக்காக உலக அளவில் இன்று சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப் படுகிறது. பொதுவாக கம்பீரம், மிடுக்கு என்றாலே நம் நினைவுக்கு வருவது புலிகள். ‌இயற்கையை தேக்கி வைத்திருக்கும் வனத்தின் சூழலை, உணவுச் சங்கிலியை சமநிலைப்படுத்துவது புலிகள் தான்‌. நம் நாட்டின் தேசிய விலங்காகவும் இருக்கிறது புலி. ‌உலக அளவில் நகரமயமாக்க லால் காடுகளின் பரப்பு குறைந்து வரும் நிலையில், மீதமிருக்கும் காடுகளையேனும் காப்பது அவசரமும் அவசியமும் ஆகிவிட்டது. காடுகளையும், காட்டின் சூழலையும் பாதுகாக்க, புலிகளை அழியாமல் காத்தால் போதும். இந்த விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு புலிகள் தினத்தில் தமிழகத்துக்கு ஒரு சிறப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 321 சதுர கிலோ மீட்டராக இருந்த முதுமலை புலிகள் காப்பகத்துடன், இந்த ஆண்டு கூடுதலாக 367 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு இணைக்கப்பட்டுள்ளது. புலிகளின் வாழ்விடம் இரட்டிப்பாகியுள்ளதால், அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பு‌ள்ளது. புலிகள் அதிகம் வாழும் மாநிலங்களில் தமிழகம் 4ஆவது இடத்தில் உள்ளது. 2014ம் ஆண்டு வனத்துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி தமிழகத்தில் 229 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 2018 புள்ளிவிவரம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் புலிகளின் எண்ணிக்கை 250 ஐ தாண்டிவிட்டதாக புலிகள் பாதுகாப்பு நிறுவனம் உறுதிசெய்துள்ளது. தமிழக வனப்பகுதியில் புள்ளிமான், கலைமான், காட்டெருமை அதிகளவில் இருப்பதால் புலிகளுக்கு சாதகமான சூழல் இருப்பதாகவும், அதனால் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் நம் இந்தியாவில் 2022 ஆம் ஆண்டுக்குள் புலிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது என்று 9 ஆண்டுகளுக்கு முன்னர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆனால் 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இலக்கை எட்டி விட்டதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்த கணக்கெடுப்பு அறிக்கையானது ஒவ்வொரு இந்தியனையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வகையில் உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார்.

புலிகளின் கணக்கெடுப்பு எப்படி நடைபெறும்?

கால்தடம், எச்சம், மரங்களில் நகங்களால் கீறி வைப்பது போன்ற அடையாளங்களால் புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். நவீன காலகட்டத்தில் கேமராக்கள் வழியாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டு,  புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகின்றன. ‘பக் மார்க்’  ( கால்தடம் ) மூலமாக புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது பழமையான பாணி. நம்பகத்தன்மை  குறைந்ததாக இருந்தது.  ஆனாலும் கேமரா வழியாக புலிகள் நடமாட்டத்தை கண்காணிப்பது  நம்பகத் தன்மையை அதிகரித்திருத்திருக்கிறது. இந்தியாவில்,  புலிகள் வசிக்கும் 18 மாநில வனச் சரணாலயங்களில் 9,730 கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளன.

error: Content is protected !!